ஜுபின் கார்க் மர்ம மரணம்: உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை – அசாம் முதல்வர் அறிவிப்பு

கவுஹாத்தி: அசாம் பாடகர் ஜுபின் கார்க்கின் மர்ம மரணம் குறித்து குவாஹாட்டி உயர் நீதிமன்ற நீதிபதி சவுமித்ரா சைகியா தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்படும் என்று முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா தெரிவித்துள்ளார்.

சமூக ஊடக நேரலையில் பேசிய ஹிமந்த பிஸ்வா சர்மா, “அசாம் மாநிலத்தின் கலாச்சார சின்னமாக இருந்த ஜுபின் கார்க்கின் மரணம் குறித்து விசாரிக்க குவாஹாட்டி உயர் நீதிமன்ற நீதிபதி சவுமித்ரா சைகியா தலைமையில் ஒருநபர் விசாரணை ஆணையம் அமைக்கப்படும். ஜுபின் கார்க் மரணம் தொடர்பாக ஏதேனும் தகவல்கள் அல்லது வீடியோக்கள் எவரிடமேனும் இருந்தால், அதனை அவர்கள் ஆணையத்தின் முன் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

ஜுபின் கார்க் மரணம் தொடர்பாக பலரும் யூடியூப், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், ட்விட்டர் பக்கங்களில் பல்வேறு விதமான கருத்துகளை பகிர்கிறார்கள். விசாரணை ஆடைணயத்தின் முன் பிரமாணப் பத்திரங்களை சமர்ப்பிக்க வேண்டியது அவர்களது கடமை. ஜுபின் கார்க் இறந்தபோது அவருடன் இருந்த அசாம் சிங்கப்பூர் சங்க உறுப்பினர்கள், தாங்களாக முன்வந்து வாக்குமூலம் அளிக்க வேண்டும்.

சிங்கப்பூரில் நடத்தப்பட்ட ஜுபின் கார்க்கின் பிரேதச பரிசோதனை அறிக்கையை, அவரது மனைவி கரிமாவிடம் அசாம் அரசு ஒப்படைத்துவிட்டது. குவாஹாட்டி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் செய்யப்பட்ட இரண்டாவது பிரேத பரிசோதனை அறிக்கையும் அவரிடம் வழங்கப்படும். அவற்றை வெளியிடுவதா வேண்டாமா என்ற முடிவை கரிமாவிடமே விட்டுவிடுகிறோம்.” எனத் தெரிவித்துள்ளார்.

விஷம் கொடுக்கப்பட்டதா? இதனிடையே, இந்த வழக்கில் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்ட ஜுபின் கார்க்கின் இசைக்குழுவைச் சேர்ந்த சேகர் ஜோதி கோஸ்வாமி, “ஜுபின் கார்க்கின் மேலாளர் சித்தார்த் சர்மாவும், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் ஷ்யாம்கானு மஹந்தாவும் அவருக்கு விஷம் கொடுத்து மரணத்தை தற்செயலானதாக மறைக்க சதி செய்திருக்கலாம். சிங்கப்பூரில் பான் பசுபிக் ஹோட்டலில் தன்னுடன் தங்கி இருந்த சித்தார்த்த சர்மாவின் நடவடிக்கை சந்தேகத்தை ஏற்படுத்தக்கூடியதாக இருந்தது. ஜுபின் கார்க் பயிற்சி பெற்ற ஒரு நீச்சல் வீரர். அவர் எனக்கும் சித்தார்த் சர்மாவுக்கும் நீச்சல் பயிற்சி அளித்திருக்கிறார். அவர், நீரில் மூழ்கி இறந்திருக்க முடியாது” என்று தெரிவித்துள்ளார்.

ஜுபின் கார்க் மரணம் தொடர்பாக சிஐடி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் சியாம்​கானு மகந்தா நிதி மோசடியில் ஈடுபட்டதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு தொடர்பாக அமலாக்கத் துறை மற்றும் வருமான வரித்துறை அதிகாரிகளும் இந்த விசாரணையில் இணைந்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

நடந்தது என்ன?: அசாம் மாநிலத்தை சேர்ந்த பிரபல பாடகர் ஜுபின் கார்க், இசை நிகழ்ச்​சி​யில் பங்​கேற்க சிங்​கப்​பூர் சென்​றிருந்​தார். அங்கு கடலில் ஸ்கூபா டைவிங் நிகழ்ச்​சி​யில் பங்​கேற்க ஒரு படகில் சென்​றுள்​ளார். கடலில் நீந்​தும் போது அவர் நீரில் மூழ்கி இறந்​தார். இச்​சம்​பவம் தொடர்​பாக ஜுபின் கார்க் மேலா​ளர் சித்​தார்த்த சர்​மா, நிகழ்ச்சி ஏற்​பாட்​டாளர் சியாம்​கானு மகந்தா ஆகியோர் டெல்​லி​யில் கடந்த புதன் கிழமை கைது செய்​யப்​பட்​டனர். இந்த வழக்​கில் கொலை குற்​றச்​சாட்​டு​களை​யும் அசாம் சிஐடி போலீ​ஸார் சேர்த்​துள்​ளனர்.

இந்​நிலை​யில் ஜுபின் கார்க்​குடன், கடலுக்கு படகில் சென்ற இரண்டு இசை கலைஞர்​கள் சேகர்​ஜோதி கோசு​வாமி, அம்​ரித்​பிரவா மகந்தா ஆகியோரை அசாம் போலீ​ஸார் நேற்று முன்​தினம் கைது செய்து விசா​ரணைக்​காக குவாஹாட்டி அழைத்து வந்​தனர். அவர்​கள் 14 நாட்கள் போலீஸ் காவலில் அனுப்பப்​பட்​டனர். அவர்​களிடம் சிறப்பு புல​னாய்வு குழு​ வி​சா​ரணை நடத்தி வரு​கின்றனர்​.

சிபிஐ விசாரிக்க உச்ச நீதிமன்றத்தில் மனு: இதற்கிடையில் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஷியாம் கனு மகந்தா உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அதில், ‘‘ஜுபின் கார்க் மரணம் தொடர்பாக அசாம் உள்ளிட்ட வட கிழக்கு மாநிலங்களில் 54 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இது தொடர்பான வழக்கை என்ஐஏ அல்லது சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும். விசாரணையை உச்ச நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி கண்காணிக்க உத்தரவிட வேண்டும்’’ என ஷியாம் கனு மகந்தா கோரியுள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.