Rohit Sharma : ஆஸ்திரேலியா சுற்றுப் பயணம் செய்யும் இந்திய கிரிக்கெட் அணி இன்று அறிவிக்கப்பட்டது.ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளுக்கான இரண்டு அணிகளையும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (BCCI) தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர் மும்பையில் இன்று அறிவித்தார். டி20 தொடருக்கான இந்திய அணியில் பெரிய மாற்றம் செய்யப்படவில்லை. சூர்யகுமார் தலைமையில் இந்திய அணி டி20 போட்டியில் களமிறங்குகிறது. காயம் காரணமாக ஹர்திக் பாண்டியா இந்த தொடரில் இடம்பெறவில்லை. அவருக்கு பதிலாக நிதீஷ் குமார் ரெட்டி மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் 16 பேர் கொண்ட இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
Add Zee News as a Preferred Source
அதேநேரத்தில் ஒருநாள் போட்டியில் மிகப்பெரிய மாற்றங்கள் நடந்துள்ளது. கேப்டன் பதவியில் இருந்து ரோகித் சர்மா அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியின் புதிய கேப்டனாக சுப்மன் கில் நியமிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர் பேசும்போது, ரோகித் சர்மா கேப்டன்சி பொறுப்பில் சிறப்பாக செயல்பட்டார் என பாராட்டினார். ஆனால், டி20, ஒருநாள், டெஸ்ட் என மூன்று பார்மேட் போட்டிகளுக்கு மூன்று கேப்டன்கள் இருக்க முடியாது என்று கூறிய அவர், டெஸ்ட் போட்டி கேப்டனாக இருக்கும் கில், ஒருநாள் போட்டிக்கும் கேப்டனாக பிசிசிஐ தேர்வு செய்திருக்கிறது என தெரிவித்தார்.
கேப்டன்சி மாற்றம் குறித்து ரோகித் சர்மாவிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாகவும் அஜித் அகர்கர் விளக்கம் அளித்தார். மேலும், ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் 2027 ஒருநாள் போட்டிக்கான உலகக்கோப்பையில் விளையாடுவார்களா? என தெரியாது என்றார். அது குறித்து இருவருக்கும் எந்த உத்தரவாதமும் பிசிசிஐ கொடுக்கவில்லை என்றும் அஜித் அகர்கர் தெரிவித்துள்ளார். இதன் மூலம் ரோகித் சர்மா, விராட் கோலி ஆகியோர் சர்வதேச கிரிக்கெட் பயணம் எப்போது வேண்டுமானாலும் முடிவுக்கு வரலாம் என்ற சூழல் உருவாகியுள்ளது.
இருவரும் 2027 ஒருநாள் போட்டி உலகக்கோப்பையுடன் சர்வதேச போட்டிகளில் ஓய்வுபெற திட்டமிட்டிருந்த நிலையில், அதற்கு முன்பே அவர்களை வழியனுப்ப பிசிசிஐ தயாராகிவிட்டதாக தெரிகிறது. ஆஸ்திரேலிய தொடரில் இருவரும் பேட்டிங்கில் சொதப்பினால் அணியில் ஓரங்கட்டப்படுவது உறுதி. இனி ஒரு வாய்ப்பு அவர்களுக்கு இந்திய அணியில் கொடுக்கப்படுமா? என்பதும் கேள்விக்குறியாகியுள்ளது. எனவே, விராட் கோலி, ரோகித் சர்மா இருவரும் சிறந்த பேட்டிங்கை ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் வெளிப்படுத்த வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டுள்ளனர். பிசிசிஐ -ன் இப்போதைய அணுகுமுறையை வைத்து பேசும்போது, சீனியர் பிளேயர்கள் இல்லாத, இளம் பிளேயர்களை கொண்ட இந்திய அணியை 2027 ஒருநாள் உலகக்கோப்பையில் விளையாட வைக்க திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
ஆஸ்திரேலிய தொடரில் முகமது சிராஜ், ரவீந்திர ஜடேஜா, சஞ்சு சாம்சன் ஆகியோரும் ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியில் இல்லை. இருப்பினும் ரவீந்திர ஜடேஜா ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியில் தேர்வு செய்யப்படுவார் என்ற அஜித் அகர்கர் கூறியுள்ளார்.
ஆஸ்திரேலிய தொடர் – ஒருநாள் போட்டிக்கான இந்திய அணி
சுப்மன் கில் (கேப்டன்), ரோகித், கோலி, ஷ்ரேயாஸ் (துணை கேப்டன்), அக்சர் படேல், கேஎல் ராகுல், நிதிஷ்குமார் ரெட்டி, வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், ஹர்ஷித், சிராஜ், அர்ஷ்தீப், பிரசித், ஜூரல் (விக்கெட் கீப்பர்), ஜெய்ஸ்வால்.