இருமல் மருந்தால் பறிபோன 10 குழந்தைகளின் உயிர்: ம.பி. மருத்துவர் கைது

போபால்: மத்தியப் பிரதேசத்தில் இருமல் சிரப் உட்கொண்டதால் குழந்தைகள் உயிரிழந்ததாக வந்த புகாரைத் தொடர்ந்து, அந்த மருந்தை பரிந்துரைத்த சிந்த்வாரா பகுதியைச் சேர்ந்த மருத்துவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பிஎன்எஸ் சட்டப்பிரிவு 105, 276 மற்றும் மருந்துகள் மற்றும் காஸ்மெடிக்ஸ் சட்டப்பிரிவு 27 ஆகியனவற்றின் கீழ் அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. அந்த மருத்துவரிடம் காவல்துறை உயரதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுவருவதாகத் தெரிகிறது.

முன்னதாக, மத்தியப் பிரதேசத்தில் ஒன்பது குழந்தைகள், மகாராஷ்டிராவில் இரண்டு குழந்தைகள் மற்றும் ராஜஸ்தானில் ஒரு குழந்தை என 12 குழந்தைகள் இருமல் சிரப் உட்கொண்டதால் உயிரிழந்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.

தமிழ்நாட்டின் காஞ்சிபுரத்தில் உள்ள ஸ்ரேசன் பார்மாவில் இந்த கோல்ட்ரிஃப் இருமல் சிரப் உற்பத்தி செய்யப்பட்டதாகவும் தகவல் வெளியானது.

இதனையடுத்து, மத்தியப் பிரதேசத்தின் சிந்த்வாரா மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் குழந்தைகளின் இறப்புகளுக்கான காரணத்தை கண்டறிவதற்கு தேசிய வைராலஜி நிறுவனம், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில், தேசிய சுற்றுச்சூழல் பொறியியல் ஆராய்ச்சி நிறுவனம், மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பு மற்றும் நாக்பூர் எய்ம்ஸ் உள்ளிட்ட பலதரப்பட்ட நிபுணர்களைக் கொண்ட குழு, பல்வேறு மாதிரிகள் மற்றும் காரணிகளை பகுப்பாய்வு செய்து வருகிறது.

அமைச்சர் மா.சுப்பிரமணியன் வேண்டுகோள்: இதற்கிடையில், “காஞ்சிபுரம் மாவட்டத்தில் தயாரான இருமல் மருந்தை சாப்பிட்ட குழந்தைகள் வடமாநிலத்தில் உயிரிழந்துள்ளது தொடர்பாக குறித்து டிரக் கண்ட்ரோல் அலுவலரிடம் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அவர் தற்போது விசாரணை செய்து வருகிறார். விசாரணை முடிந்த பின்னர் இது குறித்த விரிவான தகவல் தெரிவிக்கப்படும்.

தமிழ்நாட்டில் அந்த வகை இருமல் மருந்து விற்பனையாகி வருகிறதா என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகிறோம். காலாவதியான மருந்தை உட்கொண்டதால் குழந்தைகள் உயிரிழந்திருக்கலாம் என்கிற ரீதியிலும் விசாரணை நடைபெற்று வருகிறது. கோல்ட்ரிப் இருமல் மருந்தை குழந்தைகளுக்கு பயன்படுத்த வேண்டாம்.” என தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.