சென்னை: கலாச்சார சீரழிவை ஏற்படுத்தும் சேலம் ‘ஃபேக் வெட்டிங்க்’ நிகழ்ச்சிக்கு தடை விதிக்க வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் தி.வேல்முருகன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளில் நடைபெறுவது போல், சேலம் மாநகரில் ‘ஃபேக் வெட்டிங்க்’ இன்று மாலை 6 மணிக்கு நடைபெறவுள்ளது. சேலம் மாவட்டத்தில் இது போன்ற நிகழ்ச்சிகள் நடைபெறுவதால் வருங்கால இளைய தலைமுறையினரின் வாழ்க்கை தடம் மாறி செல்வதற்கு வாய்ப்பாக அமைகிறது.
அதாவது, மாணவர்கள், இளைஞர்கள் தங்களுடைய தனித்திறமைகளை கல்வி, விளையாட்டு, கலை, விஞ்ஞானம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சாதித்தவர்களை, புதுமைகளை செய்தவர்களை அடையாளம் கண்டு அவர்களின் அனுபவங்களை பகிர்ந்துதல், திறமைகளை வெளிப்படுத்துதல் போன்ற சமூக நலன் சார்ந்த நிகழ்ச்சிகள் நடத்தினால், அது எதிர்கால இளைய தலைமுறைக்கு வழிகாட்டுதலாக இருக்கும்.
ஆனால், வியாபார நோக்கத்துடன், கலை நிகழ்ச்சிகள் என்ற பெயரால் நடுத்தெருவில் ஆபாச கூத்தும், கும்மாளமும் ஆடல், பாடல் என்ற பெயரில் கலாச்சார சீரழிவுக்கு வழிவகுக்கும், ‘ஃபேக் வெட்டிங்க்’ மற்றும்‘ஃபேக் வெட்டிங்க்’ நிகழ்ச்சிகள் நடத்த மாவட்ட நிர்வாகமும், காவல்துறையும் அனுமதி வழங்குவது அதிர்ச்சி அளிக்கிறது.
இந்த நிகழ்ச்சிக்கு பின்னால் வணிக நோக்கமும், கலாச்சாரத்தை சீரழிக்கும் நோக்கமும் இருக்கிறது என்பதை நாம் அனைவரும் உணர வேண்டும். இதன் காரணமாக, சேலத்தில் இன்று நடைபெறும், ‘ஃபேக் வெட்டிங்க்’ நிகழ்ச்சிக்கு தடை விதிக்க வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மகளிர் அணி சார்பில், காவல்துறை அதிகாரிகளிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.
எனவே இதனைக் கருத்தில் கொண்டு, தமிழ் சமூகத்தின் கலாச்சாரத்தையும், பண்பாட்டையும் சீரழிக்கும் ‘ஃபேக் வெட்டிங்க்’ நிகழ்ச்சிக்கு, மாவட்ட நிர்வாகமும், காவல்துறையும் தடை விதித்து, வருங்கால சந்ததியினர் வளமாக வாழ வழி செய்ய வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி கேட்டுக் கொள்கிறது” என தெரிவித்துள்ளார்.