டோக்கியோ: ஜப்பான் நாட்டின் முதல் பெண் பிரதமராக சனே டகைச்சி தேர்ந்தெடுக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஜப்பான் நாட்டில் லிபரல் ஜனநாயகக் கட்சி (எல்டிபி) ஆட்சியில் உள்ளது. இக்கட்சியின் தலைவர் மற்றும் ஜப்பான் பிரதமர் ஷிகெரு இஷிபா, ஓராண்டுக்குப் பிறகு பதவி விலகுவதாக ஏற்கெனவே அறிவித்திருந்தார். இதற்கிடையில், ஜப்பான் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் லிபரல் ஜனநாயகக் கட்சி பெரும்பான்மை இழந்தது. இதனால் பிரதமர் பதவியை ஷிகெரு கடந்த மாதம் ராஜினாமா செய்தார்.
அதனால், ஆளும் லிபரல் டெமாக்ரடிக் கட்சியின் புதிய தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நேற்று டோக்கியோவில் நடைபெற்றது. இதில் முன்னாள் பொருளாதார பாதுகாப்பு அமைச்சர் சனே டகைச்சி (64), வேளாண் அமைச்சர் ஷிஞ்சிரோ கொய்சுமி ஆகியோர் போட்டியிட்டனர். முதல் கட்டமாக கட்சிக்குள் நடைபெற்ற வாக்கெடுப்பில் சனே டகைச்சி வெற்றி பெற்றார்.
உட்கட்சி தேர்தலில் சனே 183 வாக்குகளும் கொய்சுமி 164 வாக்குகளும் பெற்றனர். இதையடுத்து லிபரல் ஜனநாயகக் கட்சித் தலைவராக சனே டகைச்சி நேற்று அதிகாரப்பூர்வமாக பொறுப்பேற்று கொண்டார். அவர் ஜப்பான் நாட்டின் முதல் பெண் பிரதமராக
பதவியேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பிரதமராக பதவியேற்ற பிறகு நாடாளுமன்றத்தில் டகைச்சி பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும். ஆனால், லிபரல் ஜனநாயகக் கட்சிக்கு பெரும்பான்மை இல்லை. அதேநேரத்தில் நிதி முறைகேடுகள் தொடர்பாக வாக்காளர்களும் அதிருப்தியில் உள்ளனர். இதுபோன்ற சவால்கள் இருந்தாலும், நம்பிக்கை வாக்கெடுப்பில் டகைச்சி வெற்றி பெறுவார் என்று கூறுகின்றனர்.