Best Indian ODI Captain: ஓடிஐ கேப்டனாக சுப்மான் கில் நியமிக்கப்பட்டு, ரோஹித் சர்மா அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். அந்த வகையில், ரோஹித் சர்மா ரசிகர்கள் தற்போது உணர்ச்சிப் பெருக்கில் இருக்கிறார்கள்.
Add Zee News as a Preferred Source
அப்படியிருக்க, ரோஹித் சர்மா தான் ஓடிஐயில் சிறந்த கேப்டன், இல்லை தோனிதான் பெஸ்ட் கேப்டன், இல்லை இல்லை விராட் கோலிதான் சூப்பர் கேப்டன் என சமூக வலைதளங்களில் நேற்றில் இருந்து சண்டை ஓடிக்கொண்டிருக்கிறது. அந்த வகையில், கிரிக்கெட் ரசிகர்களின் இந்த பஞ்சாயத்திற்கு இங்கு முடிந்தளவு தீர்ப்பு சொல்ல முயல்கிறோம். அதாவது, ஓடிஐ அரங்கில் எம்எஸ் தோனி, விராட் கோலி, ரோஹித் சர்மா ஆகியோரில் யார் சிறந்த கேப்டன் என்பது குறித்து இங்கு விரிவாக பார்க்கலாம்.
Best Indian ODI Captain: எம்எஸ் தோனி
இந்திய அணியின் ஓடிஐ கேப்டனாக இவர் 2007ஆம் ஆண்டு முதல் 2018ஆம் ஆண்டு வரை செயல்பட்டார். மொத்தம் 200 போட்டிகளில் இவர் கேப்டனாக இருந்து, அதில் 110 போட்டிகளில் இந்தியா வெற்றி பெற்றுள்ளது. வெற்றி விகிதம் 55% ஆகும். கேப்டனாக இருந்தபோது, இவரது பேட்டிங் சராசரி 53.5 ஆகும். இவர் தலைமையில்தான் 2011 ஐசிசி உலகக் கோப்பை மற்றும் 2013 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி என இந்திய அணி இரண்டு ஐசிசி கோப்பையை வென்றது.
இவரது நிதானம்தான் கேப்டன்களில் இவரை உலகளவில் தனித்து நிற்கச் செய்தது. அழுத்தம் நிறைந்த தருணங்களிலும் நிதானத்துடன் அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் செல்வார். தோல்வியே அடைந்தாலும் பதற்றத்தை அவரிடம் பார்க்கவே முடியாது. விராட் கோலி, ரெய்னா, ரோஹித் சர்மா, அஸ்வின், ஜடேஜா போன்ற இளம் வீரர்களையும்; சச்சின், சேவாக், ஹர்பஜன் போன்ற சீனியர்களையும் ஒரே அணியில் வைத்து அதை திறம்பட கையாண்டவர்.
இவர் தலைமையில் இந்திய அணி 2007 முதல் 2013 வரை நம்பர் 1 ஓடிஐ அணியாக திகழ்ந்தது. 2013 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டியில் இவர் பந்துவீச்சாளர்களை கையாண்ட விதம் கேப்டன்ஸியில் ஒரு Masterclass என்றே சொல்லலாம். ஆனால் இவரது பலவீனம் என்றால், ஆசிய கண்டத்திற்கு வெளியே அதாவது SENA நாடுகளில் இவர் தலைமையில் இந்திய அணி பலமுறை சொதப்பியதை சொல்லலாம்.
Best Indian ODI Captain: விராட் கோலி
2013ஆம் ஆண்டு முதல் 2021ஆம் ஆண்டு வரை இவர் இந்திய அணியின் கேப்டனாக செயல்பட்டார். மொத்தம் 95 போட்டிகளில் இவர் கேப்டனாக செயல்பட்டு, அதில் 65 போட்டிகளில் இந்தியா வென்றுள்ளது. வெற்றி விகிதம் 70% ஆகும். கேப்டனாக இருந்தபோது, அவரது பேட்டிங் சராசரி 72.7 ஆக உள்ளது.
இவர் வீரர்களின் மத்தியில் பிட்னஸிற்கு முக்கியத்துவம் கொடுக்க வைத்தார். இதனால் இந்திய அணியின் பிட்னஸ் கலாச்சாரமே மாறியது. இவர் தலைமையில் அணி ஆக்ரோஷமான ஆட்டத்தை தொடர்ந்து வெளிப்படுத்தியதை சிறப்பாக சொல்லலாம். அதேநேரத்தில் இவர் தலைமையில் இருதரப்பு போட்டிகளில் இந்தியா ஆதிக்கம் செலுத்தினாலும், ஐசிசி தொடர்களில் தொடர்ந்து சொதப்பியது.
2017 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டி, 2019 ஐசிசி உலகக் கோப்பையில் அரையிறுதிப் போட்டி வரை இந்தியா முன்னேறியது. இவர் தலைமையில் இந்தியா வியூக ரீதியாக சிறப்பான முன்னேற்றத்தை கண்டாலும் எந்தவொரு ஐசிசி கோப்பையையும் வெல்லாதது குறிப்பிடத்தக்கது.
Best Indian ODI Captain: ரோஹித் சர்மா
2022ஆம் ஆண்டில் ரோஹித் சர்மா ஓடிஐ கேப்டன் பொறுப்பை பெற்றார். 56 போட்டிகளில் 42 போட்டிகளை இந்திய அணி இவர் தலைமையில் வென்றிருக்கிறது. இவரின் வெற்றி சதவீதம் 75 ஆகும். இவர் வீரர்கள் மத்தியில் சிறப்பான செல்வாக்கை பெற்றிருந்தார்.
இவரின் வியூகங்களும் பலராலும் பாராட்டப்பட்டுள்ளது. மூத்த வீரராக இவர் கேப்டன்ஸியை பெற்றதால் இளம் வீரர்களை நிர்வகிப்பதில் இவருக்கு சிக்கலே இருந்ததில்லை. இது விராட் கோலி கேப்டன்ஸி பறிப்புக்கு பின் ஏற்பட்ட இக்கட்டான சூழலில் இருந்து ஆரோக்கியமான சூழலுக்கு மாறியது.
இவர் தலைமையில் 2023 ஆசிய கோப்பை, 2025 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி உள்ளிட்ட கோப்பைகளை இந்தியா வென்றது. கேப்டன்ஸியின்போது இவரது பேட்டிங் சராசரி 58 ஆக இருந்தது. ஆக்ரோஷமான பேட்டிங்கை கைக்கொண்டதன் மூலம் இவர் தலைமையில் இந்தியா அதிக வெற்றிகளை பெற்றது. இவர் தலைமையில் 2023 ஐசிசி உலகக் கோப்பை இறுதிப்போட்டி வரை சென்றது. தற்போது அவரிடம் இருந்து கேப்டன்ஸியை கில்லிடம் ஒப்படைத்துவிட்டனர். இவர் கடைசியாக 2025 சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டியில் ஓடிஐ கேப்டனாக செயல்பட்டார்.
Best Indian ODI Captain: யார் தான் சிறந்த கேப்டன்?
இங்கு கொடுக்கப்பட்டிருக்கும் தகவல்களை வாசித்தால் நிச்சயம் தோனி தான் ஓடிஐ அரங்கில் இந்தியாவின் சிறந்த கேப்டன் என முடிவுக்கு நாம் வரலாம். ஆனால் தோனி சிறந்த கேப்டனாக இருந்தாலும் விராட் கோலியும், ரோஹித் சர்மாவும் இந்திய அணிக்கு பல மாற்றங்களை கொண்டுவந்து முன்னேற்றப் பாதைக்கு கொண்டு சென்றுள்ளனர். அதையும் மறந்துவிட முடியாது.