“விஜய்யை கைது செய்தால் அது தவறான முன்னுதாரணம் ஆகிவிடும்” – டிடிவி தினகரன்

சென்னை: “கரூர் சம்பவத்தில் தவெக தலைவர் விஜய்யை கைது செய்தால் தவறான முன்னுதாரணம் ஆகிவிடும். பின்னாளில் இது அனைத்து அரசியல் கட்சிகளையும் பாதிக்கும்” என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசும்போதும், “கரூர் சம்பவத்துக்கு தவெக தலைவர் விஜய் தார்மீக பொறுப்பேற்றிருக்க வேண்டும். தார்மீக பொறுப்பு என்பது குற்றத்தை ஏற்பதாக ஆகாது. விஜய்யை கைதுசெய்தால் அது தவறான முன்னுதாரணமாகிவிடும் என்பதால் இந்த விவகாரத்தில் முதல்வர் நிதானமாக செயல்படுகிறார். முதல்வர் ஸ்டாலின் 50 ஆண்டுகாலம் அனுபவமிக்க தலைவர். நான் நியாயமான விஷயத்தைக் கூறினால், முதல்வருக்கு ஆதரவாக செயல்படுவதாக கூறுகிறார்கள்.

அனைத்து கட்சிகளும் பேரணி, பொதுக்கூட்டம், மாநாடு நடத்துகிறோம். நம்மை மீறி தவறு நடப்பது இயல்புதான். அதற்கு அனைத்து, தலைவர்களையும் கைது செய்ய வேண்டிய சூழல் உருவாகும். இது பின்னாளில் திமுகவையும் பாதிக்கும். கரூர் விவகாரத்தில் முதல்வர் ஸ்டாலினை உயர்த்திப் பேசவில்லை. உண்மையைப் பேசுகிறேன்.

தவெக தலைவர் விஜய்யை கைது செய்தால் தவறான முன்னுதாரணம் ஆகிவிடும். பின்னாளில் இது அனைத்து அரசியல் கட்சிகளையும் பாதிக்கும். தூத்துக்குடி சம்பவத்தில் 13 பேரை சுட்டுக் கொன்றனர். அப்போது அந்த துறைக்கு தலைவராக இருந்த பழனிசாமி பொறுப்பேற்றாரா?

கரூர் சம்பவத்தை வைத்து தவெகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார் பழனிசாமி. பழனிசாமி தலைமையை ஏற்று எப்படி அவர்கள் இருக்கும் கூட்டணிக்கு நாங்கள் செல்ல முடியும். தவெகவை கூட்டணிக்கு வர வைக்க வேண்டும் என்பதற்காக கரூர் துயரத்திற்கு ஆட்சியாளர்கள்தான் காரணம் என குள்ளநரித்தனமாக குற்றச்சாட்டை முன்வைக்கிறார் எடப்பாடி. நாகரீகம் இல்லாமல் கூட்டணி குறித்து பேசுகிறார். இந்த விவகாரத்தில் நடுநிலையாக இருங்கள்.

2026 தேர்தலில் நான்கு முனை போட்டி நடக்கும். கரூர் சம்பவம் ஒரு விபத்துதான். இதில் யார் மீதும் பழிபோட முடியாது. 2026 தேர்தலில் பழனிசாமியின் துரோகத்தை வீழ்த்துவோம்” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.