இந்திய அணி தற்போது வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறது. 14ஆம் தேதி இத்தொடர் முடிவடையும் நிலையில், அதன்பின் ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் மேற்கொண்டு அந்நாட்டு அணியுடன் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரும் விளையாட இருக்கிறது இந்திய அணி.
Add Zee News as a Preferred Source
கேப்டன் மாற்றம்
இந்த சூழலில், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3 போடிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான இந்திய அணி நேற்று முன்தினம் (அக்டோபர் 04) அன்று அறிவிக்கப்பட்டது. அதில் ஒருநாள் அணிக்கான கேப்டன் பதவில் இருந்து மூத்த வீரர் ரோகித் சர்மா நீக்கப்பட்டு புதிய கேப்டனாக சுப்மன் கில் அறிவிக்கப்பட்டார். இதனை அஜித் அகர்கர் தலைமையிலான பிசிசிஐ தேர்வுக் குழு அறிவித்தது.
இந்த மாற்றம் கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கேப்டன் பதவி மாற்றம் குறித்து பேசிய தேர்வு குழு தலைவர் அஜித் அகர்கர், மூன்று ஃபார்மெட் அணிகளுக்கும் மூன்று வெவ்வேறு கேப்டன்களைக் கொண்டிருப்பது நடைமுறையில் சாத்தியமற்றது. அது பயிற்சியாளருக்கு மிகவும் கடினமாக இருக்கும். 2027ஆம் ஆண்டு ஒருநாள் உலகக் கோப்பை தொடர் வர இருக்கும் நிலையில், புதிய கேப்டனைப் பெற இதுவே சரியான நேரம் என்று நாங்கள் நினைத்தோம்.
ரோகித் சர்மா எக்ஸ் பதிவு
புதிய கேப்டனுக்கு தனது அணியை உருவாக்க நேரமும் வாய்ப்புகளும் தேவை என்பதால் ரோகித் சர்மாவிக்கு பதிலாக சுப்மன் கில் கேப்டனாக தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். மேலும், இந்த முடிவு குறித்து ரோகித்துக்கும் தெரிக்கப்பட்டது என அவர் கூறினார். இந்த நிலையில்தான் ரோகித் சர்மாவின் 13 ஆண்டுகளுக்கு முன்பான ஒரு எக்ஸ் பதிவு தற்போது வைரலாகி வருகிறது.
அதாவது, கடந்த 2012ஆம் ஆண்டு செப்டம்பர் 14ஆம் தேதி அன்று ரோகித் சர்மா ஒரு பதிவை வெளியிட்டிருந்தார். அதில் End of an era(45) and the start of a new one(77 ஒரு சகாப்தத்தின் முடிவு (45) மற்றும் ஒரு புதிய புதிய சகாப்தத்தின் ஆரம்பம் (77) என பதிவிட்டிருந்தார். ரோகித் சர்மாவின் ஜெர்சி எண் 45, சுப்மன் கில்லின் ஜெர்சி எண் 77. இதனை வைத்து 13 ஆண்டுகளுக்கு முன்பே ரோகித் சர்மா கில் வருங்கால இந்தியாவின் கேப்டன் என கணித்தார் என்று அப்பதிவு தற்போது வைரலாகி வருகிறது.
ஏன் ரோகித் சர்மா அப்படி பதிவிட்டார்?
கடந்த 2012ஆம் ஆண்டு இலங்கையில் நடந்த டி20 உலகக் கோப்பைக்கு சில நாட்களுக்கு முன்பு ரோகித் சர்மா இந்த பதிவை பதிவிட்டார். அப்போது தோனி தலைமையிலான இந்திய அணியில் ரோகித் சர்மா ஒரு முக்கிய அங்கம் வகித்த நிலையில், தனது ஜெர்சி எண்ணை 45 என மாற்றியிருந்தார். ரோகித் 45 என்ற எண் கொண்ட ஜெர்சியை அணிவதற்கு முன் 77 என்ற ஜெர்சி எண் கொண்ட ஆடையே அணிந்திருந்தார். இதனை மனதில் வைத்து அப்போது அந்தப் பதிவை வெளியிட்டார்.
ரோகித் ஏன் ஜெர்சி எண்ணை மாற்றினார்.
மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் இதற்கான பதிலை அவர் தெரிவித்திருந்தார். எனது தாயார் 45 உனக்கு அதிர்ஷ்டமான எண் என கூறினார். அதனாலேயே எனது ஜெர்சி எண்ணை 77ல் இருந்து 45ஆக மாற்றிக்கொண்டேன் என கூறினார்.
கில் 77 எண் கொண்ட ஜெர்சி அணிவதற்கு காரணம்?
சுப்மன் கில்லை பொறுத்தவரை அண்டர்-19 உலகக்கோப்பையில் 77 ரன்கள் எடுத்ததன் காரணமாக அந்த எண்ணை அவர் தேர்வு செய்தார். முதலில் அவருக்கு 7 எண் கொண்ட ஜெர்ஸி மீதே விருப்பம் இருந்துள்ளது. ஆனால், அது தோனி வசம் இருப்பதால், 77 எண் கொண்ட ஜெர்ஸியை தேர்வு செய்தார். தற்போது காலம், ஜெர்சி எண் 77-ஐ சுப்மன் கில்லை தேர்வு செய்ய வைத்து ஜெர்சி எண் 45-ல் இருக்கும் ரோகித் சர்மாவிடம் கேப்டன் பதவியை வாங்க வைத்துள்ளது.
About the Author
R Balaji