காத்மண்டு,
இந்தியாவை ஒட்டியுள்ள, இமயமலை நாடு என கூறப்படும் நேபாளத்தில் இயற்கையின் சீற்றத்தினால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது. பருவமழை காலம் முடிவுக்கு வந்துள்ளபோதிலும், அது முழுமையாக விலகவில்லை. கடந்த 3-ந்தேதி முதல் தொடர்ந்து 3 நாட்களாக பெய்த கனமழையால், பல்வேறு இடங்களிலும் வெள்ளம், நிலச்சரிவு ஏற்பட்டு உள்ளது.
தொடர் மழையால், பாக்மதி, திரிசூலி, கிழக்கு ராப்தி, லால்பகையா மற்றும் கமலா உள்ளிட்ட ஆறுகளில் அபாய அளவை கடந்து வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால், பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லும்படி அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். 7 மாகாணங்களில் கோஷி மாகாணத்தில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.
இதில் இலாம் மாவட்டத்தில் 37 பேர் பலியாகி உள்ளனர். பிற மாவட்டங்களில் 12 பேர் உயிரிழந்து உள்ளனர். 17 பேர் காயமடைந்தனர். ஒருவரை காணவில்லை.
நேபாளத்தில் கனமழையை தொடர்ந்து ஏற்பட்ட வெள்ளம், நிலச்சரிவு மற்றும் மின்னல் தொடர்பான சம்பவங்களில் சிக்கி ஒட்டு மொத்தத்தில் 51 பேர் பலியாகி உள்ளனர். 7 பேர் பற்றிய விவரம் தெரிய வரவில்லை. 29 பேர் காயமடைந்து உள்ளனர்.
திரிபுவன் விமான நிலையத்தில் இருந்து புறப்பட வேண்டிய விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. அதேபோல் விமான நிலையத்தில் தரையிறங்க வேண்டிய விமானங்கள் அருகில் உள்ள விமான நிலையங்களுக்கு திருப்பி விடப்பட்டன. வெள்ளம் பாதித்த பகுதியில் தீவிர மீட்பு பணி நடைபெற்று வருகிறது.