Rohit Sharma : இந்திய அணியின் ஒருநாள் போட்டிக்கான கேப்டன் பொறுப்பில் இருந்து ரோகித் சர்மா நீக்கப்பட்டது ஏன்? என்பதற்கான பின்னணி பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. ரோகித் எடுக்கும் முடிவுகள் டிரெஸ்ஸிங் ரூம் சூழல்களை பாதிக்கும் என்ற காரணத்துக்காகவே அவரை அப்பதவியில் இருந்து நீக்கியுள்ளனர் தேர்வுக்குழுவினர். இது தொடர்பாக, இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீருடனும் தேர்வுக்குழு ஆலோசனை நடத்தியுள்ளது. அதில், ரோகித் சர்மா, விராட் கோலி ஆகியோரின் பார்ம் குறித்து எழுப்பிய சந்தேகங்கள் காரணமாக அஜித் அகர்கர் தலைமையிலான தேர்வுக்குழு இந்த அதிரடி முடிவை எடுத்துள்ளது.
Add Zee News as a Preferred Source
அஜித்அகர்கர் கொடுத்த விளக்கம்
ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து ரோகித் சர்மாவை நீக்கிய பிறகு அஜித் அகர்கர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், டெஸ்ட், ஒருநாள், டி20 ஆகிய மூன்று வடிவப் போட்டிகளுக்கும் மூன்று வெவ்வேறு கேப்டன்களை வைத்திருப்பது ‘நடைமுறையில் சாத்தியமற்றது’ என்று கூறினார். சுப்மன் கில் ஏற்கனவே டெஸ்ட் அணியின் கேப்டனாக இருப்பதால், நீண்ட காலத் திட்டத்தின் அடிப்படையில், அவரிடம் ஒருநாள் போட்டி கேப்டன் பதவியும் ஒப்படைக்கப்பட்டுள்ளது என அகர்கர் தெரிவித்தார்.
ரோகித் சர்மா நீக்கம் ஏன்?
இப்போது, ரோகித் சர்மா கேப்டன் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டது ஏன்? என்பது குறித்து “டைம்ஸ் ஆஃப் இந்தியா” அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், தேர்வுக் குழுவினர் ரோகித் சர்மா கேப்டன் பொறுப்பில் இருந்தால் தனது தனிப்பட்ட விருப்பங்களை அணி மீது திணிப்பார் என நினைத்துள்ளனர். ஆனால், அவர் மிக மிக குறைவாக விளையாடும் ஒருநாள் போட்டியின் கேப்டனாக மட்டுமே இருப்பதால், அவர் எடுக்கும் முடிவுகள் டிரெஸ்ஸிங் ரூம் அமைதியை குலைக்க வாய்ப்பு இருக்கிறது என்றும் தேர்வுக்குழுவினர் கருதியுள்ளனர் என்றும் டைம்ஸ் ஆப் இந்தியா தெரிவித்துள்ளது.
மேலும், இந்திய அணியின் தலைமை பயிற்சியாளரான கவுதம் கம்பீர் சில சந்தேகங்களை தேர்வுக்குழுவிடம் எழுப்பியுள்ளார். அதில், 2027 ஆம் ஆண்டு உலக்கோப்பை வரை ரோகித் சர்மா, விராட் கோலி இருவரும் தங்களின் பார்மில் இருப்பார்களா? என தெரியாது என கூறியுள்ளார். ஒருவேளை இருவரும் அவுட் ஆப் பார்மில் இருந்தால் அது அணிக்குள் நல்ல சூழலை ஏற்படுத்தாது என்றும் கம்பீர் கூறியிருக்கிறார். இந்த இரு பாயிண்டுகளையும் தேர்வுக்குழு கவனத்தில் எடுத்துக் கொண்டுள்ளது. அதனடிப்படையில் ரோகித் சர்மாவிடமும் இது குறித்து பேசப்பட்டுள்ளது. அதன்பிறகே ரோகித் சர்மாவை ஒருநாள் போட்டிக்கான கேப்டன் பொறுப்பில் இருந்து பிசிசிஐ நீக்கியுள்ளது.
கவுதம் கம்பீரின் ஆதிக்கம்
இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பொறுப்பில் இருக்கும் கவுதம் கம்பீர், அணித்தேர்வில் ஆரம்பத்தில் ஒதுங்கியே இருந்ததாக கூறப்படுகிறது. ரோகித் கேப்டன் பொறுப்பில் இருந்தபோது அவர் எடுத்த முடிவுகளே இறுதியாக இருந்துள்ளது. ஆனால், நியூசிலாந்து, ஆஸ்திரேலியா அணிகளுக்கு எதிரான படுதோல்விகளுக்குப் பிறகு கம்பீர் அணித் தேர்வில் தலையிட தொடங்கியுள்ளார். அப்போது முதல் இந்திய அணியின் டிரெஸ்ஸிங் ரூமில் புகைச்சல் இருந்துள்ளது. இப்போது, ரோகித் சர்மா கேப்டன் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளதால், கம்பீர் மற்றும் புதிய கேப்டன் சுப்மன் கில் இருவரும் எடுக்கும் முடிவுகளே இனி இறுதியாக இருக்கும்.
About the Author
S.Karthikeyan