புதுடெல்லி: 2025 ஆம் ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசு அமெரிக்காவை சேர்ந்த விஞ்ஞானிகள் ஜான் கிளார்க், மைக்கேல் டெவோரெட் மற்றும் ஜான் மார்டினிஸ் ஆகியோருக்கு பகிர்ந்தளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
“மின்சார சர்க்யூட்களில் மேக்ரோஸ்கோபிக் குவாண்டம் மெக்கானிக்கல் டனல் மற்றும் ஆற்றல் அளவீட்டைக் கண்டுபிடித்ததற்காக” அமெரிக்காவை சேர்ந்த ஜான் கிளார்க், மைக்கேல் எச்.டெவோரெட் மற்றும் ஜான் எம். மார்டினிஸ் ஆகியோருக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு வழங்கப்படும் என்று ராயல் ஸ்வீடிஷ் அகாடமி ஆஃப் சயின்சஸ் இன்று (அக்டோபர் 7) ஸ்டாக்ஹோமில் அறிவித்தது.
“நூற்றாண்டு பழமையான குவாண்டம் இயக்கவியல் தொடர்ந்து புதிய ஆச்சரியங்களை வழங்குவதற்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. குவாண்டம் மெக்கானிக்ஸ் அனைத்து டிஜிட்டல் தொழில்நுட்பத்திற்கும் அடித்தளமாக இருப்பதால், இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.” என்று இயற்பியலுக்கான நோபல் பரிசு குழுவின் தலைவர் ஓலே எரிக்சன் கூறினார்.
மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம், அமைதி, பொருளாதாரம் ஆகிய துறைகளில் சிறப்பான பங்களிப்பை வழங்கியவர்களுக்கு விஞ்ஞானி ஆல்ஃபிரட் நோபல் நினைவாக ஆண்டுதோறும் நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், இந்த ஆண்டுக்கான நோபல் பரிசு வென்றவர்கள் குறித்த அறிவிப்பு நேற்று முதல் வெளியிடப்படுகிறது. இந்த ஆண்டுக்கான மருத்துவத்துக்கான நோபல் பரிசு அமெரிக்காவைச் சேர்ந்த மேரி இ பிரன்கோவ், ஃப்ரெட் ராம்ஸ்டெல் மற்றும் ஜப்பானைச் சேர்ந்த ஷிமோன் சகாகுச்சி ஆகியோருக்கு பகிர்ந்தளிக்கப்படும் என நேற்று அறிவிக்கப்பட்டது.
இவ்விருது அறிவிக்கப்பட்ட ஒவ்வொருவருக்கும் தங்க பதக்கம், பட்டயம், ரொக்கப் பரிசு 11 மில்லியன் ஸ்வீடிஷ் குரோனர் (தோராயமாக இந்திய மதிப்பில் ரூ.1.03 கோடி) உள்ளிட்டவை ஆல்பிரட் நோபல் நினைவு நாளான டிசம்பர் 10-ல் வழங்கப்படும்.
செயற்கை நரம்பியல் நெட்வொர்க்குகள் மூலம் இயந்திர கற்றலை செயல்படுத்தும் அடிப்படை கண்டுபிடிப்புகளுக்காக ஜான் ஜே. ஹாப்ஃபீல்ட் மற்றும் ஜெஃப்ரி ஹின்டன் ஆகியோர் கடந்த ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசை பெற்றது நினைவுகூரத்தக்கது.