2022-ம் ஆண்டு ‘காந்தாரா’ படத்திற்குக் கிடைத்த நாடு தழுவிய வரவேற்பை அடுத்து, இப்போது ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்துள்ள ‘காந்தாரா சாப்டர் 1’ படம் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றுவருகிறது.
ஈஸ்வர பூந்தோட்டமான காந்தாரா வனத்தையும், தனது மக்களையும் காக்க அரச வம்சத்தினரை எதிர்த்தும், அரக்க சக்தியை எதிர்த்தும் நாயகன் போராடுவதும், குலங்களுக்கும் அரசுக்குமான போரும், அவர்களின் தெய்வ வழிபாடும்தான் இதன் கதைக்களம்.

Kantara: Chapter 1 Review: அசரடிக்கும் மேக்கிங் – `காந்தாரா – 2′ தனித்து நிற்பது எங்கே?
இப்படத்தைப் பலரும் பாராட்டி வரும் நிலையில் இயக்குநர் ரிஷப் ஷெட்டி, அமெரிக்காவிலிருந்து வந்த பாராட்டுதான் தனக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தியதாக NDTVக்கு வழங்கிய நேர்காணலில் பேசியிருக்கிறார்.
இதுகுறித்துப் பேசியிருக்கும் ரிஷப் ஷெட்டி, “நம் நாட்டு கலாசாரத்தையும், இங்கு நடந்த பழங்கால கதை, தெய்வ வழிபாடு, அரசர்களுக்கும் பழங்குடி மக்களுக்கும் இடையே நடந்த ஒடுக்குமுறைகள், அதற்கெதிரான கிளர்ச்சிகள் ஆகியவற்றை காந்தாரா படத்தில் எடுத்திருந்தோம். ஆனால் அமெரிக்காவில் இப்படத்தைப் பார்த்துவிட்டு, இது எங்கள் கதை என்று என்னிடம் கூறியினார்கள்.
எனக்கும் ஒன்றுமே புரியவில்லை. பூர்வகுடி அமெரிக்கர்களுக்கும், அப்போது இருந்து அமெரிக்க அரசுக்குமிடையே நடந்த ஒடுக்குமுறைகளை காந்தாரா படத்தின் கதையின் சாராம்சத்தில் உணர்ந்ததாக அமெரிக்காவில் பலர் என்னிடம் எடுத்துச் சொல்லிப் பாராட்டினார்கள். இதுவரை எனக்குக் கிடைத்தப் பாராட்டில் இது ரொம்பவும் புதுசாக இருந்தது.

இங்கு இருக்கும் பிற மாநிலத்தவர்கள் இந்தக் கதையைப் புரிந்துகொள்வார்களா என்று சந்தேகப்பட்டிருக்கிறேன். ஆனால் வெளிநாட்டில் இருப்பவர்கள்கூட இதைத் தங்கள் கதை என்று புரிந்துகொள்ளும்போது ரொம்பவும் சந்தோஷமாக இருந்துச்சு. எனக்குக் கிடைத்த பெரிய பாராட்டு இது” என்று நெகிழ்ச்சியாகப் பேசியிருக்கிறார்.