திமுகவில் அன்னவாசல் ஒன்றியம் 4 ஆக பிரிப்பு: விராலிமலை தொகுதியை கைப்பற்ற வியூகம்

புதுக்கோட்டை மாவட்ட திமுகவில் 2 ஆக இருந்த அன்னவாசல் ஒன்றியம், தற்போது 4 ஆக பிரிக்கப்பட்டுள்ளது. வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் விராலிமலை தொகுதியை கைப்பற்றும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக திமுக நிர்வாகிகள் தெரிவித்தனர்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் மொத்தம் 13 ஒன்றியங்கள் உள்ளன. இதில், திமுக, அதிமுக போன்ற பெரிய கட்சிகள் தங்களது நிர்வாக வசதிக்காக ஒவ்வொரு ஒன்றியத்தையும் 2 அல்லது 3 ஆக பிரித்து, நிர்வாகிகளை நியமனம் செய்து கட்சிப் பணியாற்றி வருகின்றன.

அதன்படி, விராலிமலை தொகுதிக்கு உட்பட்ட அன்னவாசல் ஒன்றியத்தை ஏற்கெனவே வடக்கு, தெற்கு என 2 ஆக பிரிக்கப்பட்டிருந்தது. இதில் வடக்கு ஒன்றிய செயலாளராக ஆர்.ஆர்.எஸ்.மாரிமுத்து, தெற்கு ஒன்றிய செயலாளராக கே.எஸ்.சந்திரன் ஆகியோர் இருந்தனர். தற்போது இந்த ஒன்றியம் மொத்தம் 4 ஆக பிரிக்கப்பட்டுள்ளது.

இதில், வடக்கு, தெற்கு ஒன்றியங்களுக்கு ஏற்கெனவே உள்ள நிர்வாகிகள் பொறுப்பாளர்களாக தொடர்கின்றனர். புதிதாக பிரிக்கப்பட்டுள்ள மேற்கு ஒன்றியத்துக்கு கட்சியின் பொதுக்குழு உறுப்பினரான எம்.பழனியப்பனும், கிழக்கு ஒன்றியத்துக்கு எம்.கோவிந்த ராஜூம் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

விராலிமலை தொகுதியில் அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் சி.விஜபாஸ்கரே தொடர்ந்து வெற்றி பெற்று வரும் நிலையில், அத்தொகுதியை திமுக கைப்பற்ற வேண்டும் என்பதற்காகவே ஒன்றியத்தை 4-ஆக பிரித்து இருப்பதாக அக்கட்சியினர் கூறுகின்றனர்.

இது குறித்து ஒன்றியச் செயலாளர் எம்.பழனியப்பன் கூறியதாவது: நிர்வாக வசதிக்காக ஒன்றியங்களை கூடுதலாக பிரிக்கும்போது, கட்சிப் பணி செய்வது எளிதாகும். தேர்தலில் மீண்டும் நான் போட்டியிடுவதை கட்சிதான் தீர்மானிக்க வேண்டும். என்னைய விடவும் சீனியர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். நான் ஏற்கெனவே இரு முறை போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்துள்ளேன். கட்சி எந்த வேலையைக் கொடுத்தாலும் செய்வேன். தொகுதியை திமுக கைப்பற்றுவதற்கான பணியில் ஈடுபட்டுள்ளோம் என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.