இந்தூர்,
மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் இந்தியா, இலங்கையில் நடைபெற்று வருகிறது. இதில் மத்தியபிரதேசத்தின் இந்தூரில் இன்று நடைபெற்று வரும் 7வது லீக் ஆட்டத்தில் தென்னாப்பிரிக்கா , நியூசிலாந்து மோதி வருகின்றன.
இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து நியூசிலாந்து தொடக்க வீராங்கனைகளாக சுசி, ஜார்ஜியா களமிறங்கினர். ஆட்டத்தின் முதல் பந்திலேயே சுசி ரன் எதுவும் எடுக்காமல் (0) அவுட் ஆனார். ஜார்ஜியா 31 ரன்னில் அவுட் ஆனார். அடுத்து வந்த அமிலியா 23 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார்.
இதையடுத்து, ஹெலிடேவுடன் ஜோடி சேர்ந்த கேப்டன் சோபியா பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஹெலிடே 45 ரன்னிலும், கேப்டன் சோபியா 85 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். பின்னர் வந்த வீராங்கனைகள் சொற்ப ரன்களில் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தனர்.
இறுதியில் நியூசிலாந்து 47.5 ஓவரில் 231 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆல் அவுட் ஆனது. தென் ஆப்பிரிக்கா தரப்பில் அந்த அணியின் மெலபா அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதையடுத்து 232 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென் ஆப்பிரிக்க அணி களமிறங்கியது.
தொடக்க வீராங்கனையாக களமிறங்கிய லாரா வோல்வார்ட் 14 ரன்களில் அவுட் ஆன நிலையில், அடுத்து வந்த சுனே லுஸ், மற்றொரு தொடக்க வீராங்கனை தஸ்மின் பிரிட்ஸ் உடன் ஜோடி சேர்ந்தார். நிலைத்து நின்று அதிரடி காட்டிய இந்த ஜோடி, நியூசிலாந்து அணியின் பந்துவீச்சை நாலாபக்கமும் சிதறடித்தது.
சதமடித்து அசத்திய தஸ்மின் பிரிட்ஸ் 89 பந்துகளில் 101 ரன்கள் விளாசினார். அரைசதம் கடந்த சுனே லுஸ் 83 ரன்கள் எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். இறுதியாக தென் ஆப்பிரிக்கா அணி 40.5 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 234 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் நியூசிலாந்து அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி தென் ஆப்பிரிக்கா அணி வெற்றி பெற்றது.