ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலிக்கு பிறகு இந்திய கிரிக்கெட்டில் ஒரு புதிய தலைமை அத்தியாயம் தொடங்கியுள்ளது. இளம் வீரர் சுப்மன் கில் ஆஸ்திரேலியா தொடரில் ஒருநாள் கிரிக்கெட் அணியின் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், அவருக்கு துணையாக மிடில்-ஆர்டர் பேட்ஸ்மேன் ஸ்ரேயாஸ் ஐயர் அணியின் புதிய துணை கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார். காயங்கள், விமர்சனங்கள் மற்றும் அணியில் இருந்து நீக்கம் என பல சவால்களை எதிர்கொண்ட ஸ்ரேயாஸ் ஐயரின் இந்த வளர்ச்சி, அவரது விடாமுயற்சிக்கும், தலைமை பண்புக்கும் கிடைத்த அங்கீகாரமாக பார்க்கப்படுகிறது.
Add Zee News as a Preferred Source
ஷ்ரேயாஸ் ஐயர் பயணம்!
கடந்த ஓராண்டு, ஸ்ரேயாஸ் ஐயரின் கிரிக்கெட் வாழ்க்கையில் பெரும் புயலை வீசியது. ஆசிய கோப்பைக்கான டி20 அணியில் இருந்து நீக்கப்பட்டது, பிசிசிஐ-யின் மத்திய ஒப்பந்த பட்டியலில் இருந்து புறக்கணிக்கப்பட்டது மற்றும் முதுகுவலி அறுவை சிகிச்சைக்காக டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து தற்காலிகமாக விலகியது என பல பின்னடைவுகளை அவர் சந்தித்தார். ஒரு வீரரின் மன உறுதியை குலைக்கும் இதுபோன்ற நிகழ்வுகளுக்கு மத்தியிலும், ஸ்ரேயாஸ் ஐயர் தளரவில்லை.
தனது முழு கவனத்தையும், ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டின் மீது திருப்பிய அவர், ஐபிஎல் தொடரில் தனது தலைமை பண்பை மீண்டும் ஒருமுறை நிரூபித்தார். 2024ம் ஆண்டு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு ஐபிஎல் கோப்பையை வென்று கொடுத்த அவர், 2025ல் பஞ்சாப் கிங்ஸ் அணியை இறுதி போட்டி வரை அழைத்து சென்றார். மேலும், 2025ம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபியில், இந்திய அணிக்காக அதிக ரன்கள் குவித்த வீரராக திகழ்ந்தார். சமீபத்தில், ஆஸ்திரேலியா ஏ அணிக்கு எதிரான தொடரில், இந்தியா ஏ அணியை வழிநடத்தி தொடரை வென்று கொடுத்தது, அவரது தலைமை பண்புக்கு மேலும் ஒரு சான்றாக அமைந்தது.
துணை கேப்டன் பதவி
இந்த துணை கேப்டன் பதவி ஸ்ரேயாஸ் ஐயரின் கிரிக்கெட் வாழ்க்கையில் ஒரு முக்கிய மைல்கல்லாகும். இது, அஜீத் அகர்கர் தலைமையிலான தேர்வு குழு அவர் மீது வைத்துள்ள நம்பிக்கையையும், அவரை ஒரு நீண்ட கால தலைமைக்கான வீரராக பார்ப்பதையும் தெளிவாக காட்டுகிறது. புதிய கேப்டனான சுப்மன் கில், மூன்று வடிவ போட்டிகளிலும் விளையாடுவதால், ஆட்டத்தின் முக்கியமான தருணங்களில், கள வியூகங்களை வகுப்பதிலும், இளம் வீரர்களை வழிநடத்துவதிலும் ஸ்ரேயாஸ் ஐயரின் ஐபிஎல் கேப்டன்சி அனுபவம், கில்லுக்கு பேருதவியாக இருக்கும். ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி போன்ற மூத்த வீரர்கள் அணியில் இருக்கும் சூழலில், கில் மற்றும் ஐயரின் செயல்பாடுகள் அனைவராலும் கவனிக்கப்படும். உண்மையில் ரோஹித் சர்மாவிற்கு பிறகு ஷ்ரேயாஸ் ஐயர் தான் கேப்டன் ஆகி இருக்க வேண்டும். இருப்பினும் கில் அவரை முந்தியுள்ளார்.
2027 உலக கோப்பையை நோக்கிய பயணம்
2027ம் ஆண்டு ஒருநாள் உலக கோப்பையை குறிவைத்து, ஒரு புதிய அணியை கட்டமைக்கும் பயணத்தின் முதல் படியாகவே இந்த தலைமை மாற்றம் பார்க்கப்படுகிறது. கேப்டனாக சுப்மன் கில், துணை கேப்டனாக ஸ்ரேயாஸ் ஐயர் என புதிய பாதையை பிசிசிஐ உருவாக்கியுள்ளனர். சுப்மன் கில்லுக்கு ஓய்வளிக்கப்படும் சமயங்களில், அணியை வழிநடத்தும் வாய்ப்பு ஸ்ரேயாஸ் ஐயருக்கு கிடைக்கும் என்பதால், இது அவரது தலைமை பண்பை மேலும் மெருகேற்றும். இன்று இந்திய அணியின் துணை கேப்டனாக உயர்ந்திருக்கும் ஸ்ரேயாஸ் ஐயரின் பயணம், பல இளம் வீரர்களுக்கு ஒரு உத்வேகமாக அமைந்துள்ளது.
About the Author
RK Spark