புதுடெல்லி,
பீகார் சட்டமன்றத்தேர்தல் நவம்பர் 6 மற்றும் 11-ந்தேதிகளில் 2 கட்டமாக நடைபெற உள்ளது. இரண்டு கட்ட தேர்தல்களிலும் பதிவான வாக்குகள், நவம்பர் 14-ந் தேதி எண்ணப்பட்டு அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன.
நவம்பர் 6ஆம் தேதி நடைபெறும் முதல் கட்டத் தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் அக்டோபர் 10-ந் தேதி தொடங்கி, 17-ந் தேதி நிறைவடைகிறது. வேட்புமனுவுக்கான பரிசீலனை அக்டோபர் 18-ந் தேதி நடைபெறுகிறது. அக்டோபர் 20-ந் தேதிவரை மனுவை திரும்பப் பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல், நவம்பர் 11-ந் தேதி நடைபெறும் இரண்டாம் கட்டத் தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் அக்டோபர் 13ந் தேதி தொடங்கி, 20-ந் தேதி நிறைவடைகிறது.
இந்நிலையில் இந்த தேர்தல் மட்டுமின்றி இனி வரும் அனைத்து தேர்தல்களிலும் நாடு முழுவதும் புதிய நடைமுறைகளை அமல்படுத்த தேர்தல் கமிஷன் அதிரடியாக நடவடிக்கை எடுத்துள்ளது.
புதிய நடைமுறைகள் என்னென்ன..?
• அரசியல் கட்சிகளால் நியமிக்கப்பட்ட வாக்குச்சாவடி முகவர்களுக்கு பயிற்சி அளிப்பது.
• வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கும் பயிற்சி அளிக்க வேண்டும். பீகார் உள்பட இந்தியா முழுவதிலும் இருந்து 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குச்சாவடி அலுவலர்கள் மற்றும் வாக்குச்சாவடி மேற்பார்வையாளர்கள் டெல்லியில் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது..
• தேர்தல்களின்போது சட்டம்-ஒழுங்கு தயார்நிலையை வலுப்படுத்த போலீசாருக்கு சிறப்பு அமர்வுகள் நடத்தப்படும்.
• பீகாரில் சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. தகுதியுள்ள எந்தவொரு வாக்காளரும் விடுபடாமல் இருப்பதையும், தகுதியற்ற நபர் யாரும் சேர்க்கப்படாமல் இருப்பதையும் உறுதி செய்வதற்காக வாக்காளர் பட்டியல் தயார் செய்யப்பட்டது. இதேபோல் அனைத்து மாநிலங்களிலும் வாக்காளர் பட்டியல் தயார் செய்யப்படும்.
• வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான ஊதியம் இரட்டிப்பாக உயர்த்தப்படுகிறது. மேற்பார்வையாளர்கள் மற்றும் வாக்கு எண்ணும் பணியாளர்கள், ஆயுதப்படை போலீசார், கண்காணிப்பு குழுக்கள் மற்றும் நுண் பார்வையாளர்களுக்கான ஊதியமும் உயர்த்தப்படுகிறது. தேர்தல் நடத்தும் அதிகாரிகள் மற்றும் உதவி அதிகாரிகளுக்கு முதல் முறையாக கவுரவ ஊதியம் வழங்கப்படும்.
• வாக்காளர் பட்டியலில் புதுப்பிக்கப்பட்ட 15 நாட்களுக்குள் புகைப்பட அடையாள அட்டை வினியோகத்தை உறுதி செய்வதற்கான புதிய நடைமுறை அமல்படுத்தப்பட்டது. வினியோகத்தின் ஒவ்வொரு கட்டத்திலும் குறுஞ்செய்தி அறிவிப்புடன் இது செய்யப்படுகிறது.
• வாக்குச்சாவடி அதிகாரிகளுக்கான புகைப்பட அடையாள அட்டைகள், கள அளவிலான வெளிப்படைத்தன்மை மற்றும் பொது நம்பிக்கையை மேம்படுத்த வழங்கப்படுகிறது.
• வாக்காளர்கள் தங்களது செல்போன்களை வாக்குச்சாவடிகளுக்கு வெளியே பாதுகாப்பாக வைக்க கவுண்ட்டர்கள் அறிமுகப்படுத்தப்படும்.
• வாக்காளர்களை எளிதாக சரிபார்ப்பதற்காக வரிசை மற்றும் பகுதி எண்களை சரியாக காட்டும் வாக்காளர் தகவல் சீட்டு.
• ‘இ.சி.ஐ .நெட்’ செயலியில் பல முக்கியமான சேவைகள், கிட்டத்தட்ட நிகழ்நேர வாக்காளர் வாக்குப்பதிவு புதுப்பிப்புகள் செய்யப்படும்.
• வாக்குச்சாவடியில் வாக்காளர் வரம்பை 1,200 ஆக்குதல். இது குறைந்த கூட்ட நெரிசல், குறுகிய வரிசைகள் மற்றும் உயரமான குடியிருப்பு வளாகங்கள் மற்றும் சங்கங்களில் கூடுதல் வாக்குச்சாவடிகள் ஆகியவற்றை உறுதி செய்கிறது.
• வாக்குச்சாவடியில் இருந்து 100 மீட்டருக்கு அப்பால் வேட்பாளர் சாவடிகளுக்கு அனுமதி.
இணையதள ஒளிபரப்பு
• வாக்குச்சாவடிகளில் 100 சதவீத இணையதள ஒளிபரப்பு . இது முக்கியமான நடவடிக்கைகள் சீராக நடைபெறுவதை உறுதி செய்கிறது.
• மின்னணு வாக்குப்பதிவு எந்திர வாக்குச்சீட்டுகளை மேலும் படிக்கக்கூடியதாக மாற்றுவதற்கான வழிகாட்டுதல்களை தேர்தல் கமிஷன் திருத்தியுள்ளது. மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் முதல் முறையாக வேட்பாளர்களின் வண்ணப் புகைப்படங்கள் இடம் பெறுகிறது.
• பொருந்தாதவற்றுக்கு கட்டாய ‘வி.வி. பேட்’ எண்ணிக்கை. படிவம் 17 சி மற்றும் மின்னணு எந்திர தரவுகளுக்கு இடையில் பொருந்தாத ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும், மாதிரி வாக்குப்பதிவுத் தரவு தவறாக அழிக்கப்படாத இடங்களிலும் இது கைகொடுக்கும்.
• இறுதிச்சுற்றுக்கு முந்தைய சுற்று வாக்குகள் எண்ணும் போது, தபால் ஓட்டுகள் எண்ணப்படும்.
• டிஜிட்டல் குறியீட்டு அட்டைகள் மற்றும் அறிக்கைகள். அனைத்து பங்குதாரர்களுக்கும் தொகுதி மட்டத்தில் தேர்தல் தொடர்பான தரவுகளின் அணுகலை ஊக்குவிக்க தொழில்நுட்பம் சார்ந்த அமைப்பாக இது இருக்கும்.