Rohit Sharma : வெள்ளை பந்து கிரிக்கெட்டில் இந்திய அணியின் அதிரடி தொடக்க வீரராக ஜொலிப்பவர், முன்னாள் கேப்டன் ரோஹித் சர்மா. டெஸ்ட் மற்றும் டி20ஐ போட்டிகளில் இருந்து இவர் ஓய்வு பெற்றுவிட்ட நிலையில், ஓடிஐ-இல் தொடர்ந்து விளையாட உள்ளார்.
Add Zee News as a Preferred Source
2023இல் ஆசிய கோப்பையை வென்றது, 2023இல் ஐசிசி உலகக் கோப்பையில் இறுதிப்போட்டி வரை சென்றது, 2024இல் ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்றது, 2025இல் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியை வென்றது என இந்திய அணிக்கு கடந்த சில ஆண்டுகளில் வெற்றிகரமான வொயிட் பால் கேப்டனாகவும் ரோஹித் சர்மா உருவெடுத்திருந்தார்.
Rohit Sharma: கேப்டன்ஸியில் இருந்து ரோஹித் விடுவிப்பு
இந்தச் சூழலில், தற்போது ரோஹித் சர்மா ஓடிஐ கேப்டன் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். அப்பொறுப்பு சுப்மான் கில்லிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. ரோஹித் சர்மா கடைசியாக ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதிப்போட்டியில் கேப்டனாக செயல்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியை வென்றதற்கு முன்னாள் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் பெரும் உதவிகரமாக இருந்ததாக ரோஹித் சர்மா தற்போது பேசியிருக்கிறார். இந்திய அணி இந்தாண்டு சாம்பியன்ஸ் டிராபியை வென்றபோது கௌதம் கம்பீரே அணியின் தலைமை பயிற்சியாளராக செயல்பட்டார், இருப்பினும் ரோஹித் சர்மா ராகுல் டிராவிட்டை குறிப்பிட்டு பேசியது கவனிக்கத்தக்கதாகும்.
Rohit Sharma: ரோஹித் சர்மா பேசியது என்ன?
கேப்டன்ஸியில் இருந்து விடுவிக்கப்பட்ட பின்னர் ரோஹித் சர்மா முதல்முறையாக மும்பையில் நடைபெற்ற கிரிக்கெட் வீரர்களுக்கு தனியார் விருதளிக்கும் விழாவில் நேற்று (அக். 7) பங்கேற்றார். அப்போது பேசிய அவர், சாம்பியன்ஸ் டிராபி தொடரின் போது ஆட்டங்களில் எப்படி வெற்றி பெறுவது, தங்களைத் தாங்களே சவால் செய்து கொள்வது எப்படி, எதையும் சாதாரணமாக எடுத்துக் கொள்ளாமல் இருப்பது எப்படி என்ற செயல்முறையில் அணி இணைந்தது என்றார். மேலும், ஒட்டுமொத்த அணியும் இந்த செயல்முறையை ரசித்தது என்றும் அதை மீண்டும் மீண்டும் செய்ததாகவும் அவர் பேசினார்.
குறிப்பாக, “நாங்கள் அணிக்குள் கொண்டு வர முயற்சித்தவை இவை, அதை மீண்டும் மீண்டும் செய்வது ஒரு நல்ல செயல்முறை என்று நாங்கள் நினைத்தோம். எல்லோரும் அந்த செயல்முறையை ரசித்தோம். முதல் ஆட்டத்தில் வென்றவுடன் அந்த ஆட்டத்தை முழுவதுமாக ஒதுக்கி வைத்துவிட்டு, அடுத்த ஆட்டத்தில் கவனம் செலுத்தத் தொடங்கினோம். அணியில் இருப்பவர்களுக்கு அது மிகவும் நன்றாக இருந்தது. இது முந்தைய ஆண்டு நடந்த டி20 உலகக் கோப்பைக்குத் திட்டமிடும்போது, எனக்கும் ராகுல் பாய்க்கும் (ராகுல் டிராவிட்) உதவியது. அது, சாம்பியன்ஸ் டிராபிக்கும் தொடர்ந்தது. நாங்கள் அதை நன்றாகச் செயல்படுத்தினோம்” என்றார்.
Rohit Sharma: கம்பீரை சீண்டுகிறாரா ரோஹித் சர்மா?
ரோஹித் சர்மா – ராகுல் டிராவிட் கூட்டணி வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் இந்திய அணிக்கு பெரும் முன்னேற்றத்தை வழங்கியருந்தது. 2024 ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடரோடு ராகுல் டிராவிட் இந்திய அணியில் இருந்து விடுவிக்கப்பட்ட நிலையில், அதற்கு பின் கௌதம் கம்பீர் தலைமை பயிற்சியாளராக பொறுப்பேற்றார். கம்பீர் பயிற்சியாளராக சந்தித்த முதல் ஐசிசி தொடரே, சாம்பியன்ஸ் டிராபி தொடர். அதிலும் வெற்றி கண்டார். அப்படியிருக்க ரோஹித் சர்மாவின் இந்த பேச்சு ரசிகர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது. மேலும், ரோஹித் சர்மாவை கேப்டன்ஸியில் இருந்து நீக்கியதற்கு கம்பீரின் தலையீடும் இருப்பதாக ரசிகர்கள் கிசுகிசுத்து வருகின்றனர். ஆனால், இதில் எவ்வித பிரச்னையும் இல்லை என்றும் ரோஹித்தின் பேச்சு கம்பீரை குறிவைத்து தாக்கும்வகையில் இல்லை என்றும் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
Rohit Sharma: அனைவருக்கும் இருந்த எண்ணம்
அந்நிகழ்வில் ரோஹித் சர்மா மேலும் பேசியதாவது, “இந்திய அணியை நான் மிகவும் நேசிக்கிறேன், அவர்களுடன் விளையாடுவதை நான் விரும்பினேன். அது பல வருடங்களாக நாங்கள் அனைவரும் சேர்ந்து விளையாடிய ஒரு பயணம். இது ஒரு வருடம் அல்லது இரண்டு வருட உழைப்பு குறித்து இல்லை, பல வருடம் இணைந்து செயல்பட்டதாகும்.
பல முறை அந்த கோப்பையை வெல்லும் வகையில் மிக அருகில் வந்திருப்போம், ஆனால் எங்களால் அதை கைப்பற்ற முடிந்ததில்லை. வித்தியாசமாக ஏதாவது செய்ய வேண்டும் என்று எல்லோரும் முடிவு செய்தது அங்குதான். அப்போது இரண்டு வழிகள் எங்கள் முன் இருந்தன. முதலில் அதைச் செய்ய வேண்டும் என எண்ணம் முதலில் வரும், அடுத்து அதை ஏற்றுக்கொண்டு நடைமுறைப்படுத்த வேண்டும். அது ஓரிரு வீரர்களால் மட்டும் செய்ய முடியாது. அந்த எண்ணம் அனைவரிடத்திலும் இருக்க வேண்டும். அது அனைவரிடத்திலும் இருந்ததே சிறப்பாக மாறியது” என்றார்.