காந்தாரா சாப்டர் 1 திரைப்படம் பார்வையாளர்களிடம் சிறப்பான வரவேற்பைப் பெற்று ஓடிக்கொண்டிருக்கும் சூழலில், திரையரங்குக்கு வரும் ரசிகர்கள் தெய்வத்தைப் (Daiva) போல உடையணிந்து வர வேண்டாம் எனக் கேட்டுக்கொண்டுள்ளார் அப்படத்தின் இயக்குநர் ரிஷப் ஷெட்டி.
உடலில் மஞ்சள் பூசிக்கொண்டு அலங்கார உடையணிந்து மக்கள் காந்தாரா படத்தைக் காணச் செல்லும் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.

இதுபோன்ற செயல்கள் தன்னுடைய உணர்வையும் தெய்வத்தை வழிபடும் மக்களின் உணர்வையும் புண்படுத்துவதாக அவர் கூறியுள்ளார்.
Rishab Shetty பேசியது என்ன? “இது மிகவும் வருத்தத்துக்குரிய விஷயம். நாங்கள் இதை மனதில் வைத்து படத்தை எடுக்கவில்லை. இது என்னைக் காயப்படுத்துகிறது. உங்களின் வழியாக மக்கள் இத்தகைய செயல்களில் ஈடுபட வேண்டாமெனக் கேட்டுக்கொள்கிறேன்.
நமக்கு இது ஒரு சினிமா. ஒரு சினிமாட்டிக் அனுபவத்துக்காகவும் கதையின் தேவைக்காகவும் நாம் இதைச் செய்கிறோம். ஆனால் நாம் படத்துக்குள் காட்டியிருக்கும் தெய்வம் என்ற விஷயம் வெறும் சினிமா மட்டுமே இல்லை” என இந்தியா டுடே தளத்துக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார் ரிஷப் ஷெட்டி.

மேலும் காந்தாரா படத்தில் உள்ள சில அம்சங்கள் கேலிசெய்யக் கூடாத அளவு புனிதமானவை என்றவர், “இதை நாங்கள் சீரியஸாகக் கையாண்டிருக்கிறோம். தெய்வ நர்த்தகர் (ஆன்மீக கலைஞர்) மிகுந்த கவனத்துடன் சித்தரிக்கப்பட்டுள்ளார்; அதை உருக்குலைவு செய்யக் கூடாது” எனக் கூறினார்.
“நாங்கள் ஒவ்வொருமுறை தெய்வத்தைக் காட்சிப்படுத்தும்போதும், நடிக்கும்போதும் ஆசி பெற்றே செய்தோம். அந்த நேரத்தில் அனைவரும் கவனமாக நடந்துகொள்வார்கள். ஆனால் சிலர் வைரலாவதற்காகவோ, ஆர்வத்தினாலோ தேவையில்லாதவற்றைச் செய்கின்றனர். தயவு செய்து அதைச் செய்யாதீர்கள்.
நாங்கள் எங்கள் சமூகத்திலிருந்து ஒரு படைப்பை உருவாக்கியிருக்கிறோம். நாங்கள் தெய்வத்தை வணங்குகிறோம். இதுபோன்ற விஷயங்கள் எங்களை ஆழமாகப் பாதிக்கின்றன.
தயவுசெய்து, படத்தை திரையரங்குகளில் சினிமாவாகவே அனுபவியுங்கள். நாங்கள் என்ன காட்டியிருக்கிறோமோ அது எங்களுக்குப் புனிதமானது” என்றும் பேசியுள்ளார்.