புதுடெல்லி,
பீகார் சட்டசபை தேர்தல் அடுத்த மாதம் (நவம்பர்) 6, 11 ஆகிய தேதிகளில் நடக்கிறது. வாக்கு எண்ணிக்கை நவம்பர் 14-ந்தேதி நடைபெறும் என தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது. அதையொட்டி அங்கு வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் நடந்தது. அப்போது 65 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டனர். அதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்குகள் தொடரப்பட்டன.
கடந்த ஆகஸ்டு 1-ந்தேதி வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் வாக்காளர் எண்ணிக்கை 7 கோடியே 89 லட்சத்தில் இருந்து 7 கோடியே 24 லட்சமாக குறைந்தது. கடந்த 30-ந்தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதில், வாக்காளர் எண்ணிக்கை 7 கோடியே 42 லட்சமாக உயர்ந்தது. வரைவு பட்டியல் வெளியான பிறகு, 21 லட்சத்து 53 ஆயிரம் புதிய வாக்காளர்கள் சேர்க்கப்பட்டதாலும், 3 லட்சத்து 66 ஆயிரம் வாக்காளர்கள் நீக்கப்பட்டதாலும் இந்த மாற்றம் ஏற்பட்டது.
இந்நிலையில், சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் சூர்யகாந்த், ஜோய்மால்யா பக்சி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, தேர்தல் கமிஷன் சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் ராகேஷ் திவிவேதியை பார்த்து நீதிபதிகள் கூறுகையில், “கோர்ட்டு உத்தரவு, தேர்தல் பணியில் மிகுந்த வெளிப்படைத்தன்மைக்கு வழிவகுத்துள்ளது. வரைவு வாக்காளர் பட்டியலில் 65 லட்சம் பேரின் பெயர்கள் நீக்கப்பட்டன. இறந்தவர்கள், இடம்பெயர்ந்தவர்கள் பெயர்களை நீக்குவது சரி. ஆனால், வேறு யாருடைய பெயரை நீக்குவதாக இருந்தால், 21-ம் விதியை கடைபிடியுங்கள் என்று கூறினோம். மேலும், நீக்கப்பட்டவர்களின் விவரங்களை உங்கள் தேர்தல் அலுவலகங்களில் வைக்குமாறு தெரிவித்தோம். இப்போது, இறுதி பட்டியலில், வரைவு பட்டியலை விட அதிக வாக்காளர்கள் இடம்பெற்றுள்ளனர். அவர்கள் ஏற்கனவே நீக்கப்பட்டவர்களா? அல்லது புதிய வாக்காளர்களா? என்ற குழப்பம் தீர்க்கப்பட வேண்டும்” என்று நீதிபதிகள் கூறினர்.
அதற்கு பதிலளித்த மூத்த வக்கீல் ராகேஷ் திவிவேதி, “சேர்க்கப்பட்ட பெரும்பாலான பெயர்கள், புதிய வாக்காளர்களுடையவை. சில பழைய வாக்காளர்கள் பெயர்களும் சேர்க்கப்பட்டுள்ளன. நீக்கப்பட்ட வாக்காளர்கள் குறித்து இதுவரை புகாரோ, மேல்முறையீடோ வரவில்லை” என்று கூறினார்.
அதையடுத்து நீதிபதிகள், “நீக்கப்பட்ட 3 லட்சத்து 66 ஆயிரம் வாக்காளர்கள் குறித்து தேர்தல் கமிஷன் தன்னிடம் என்ன தரவுகள் இருக்கிறதோ, அவற்றை 9-ந்தேதிக்குள் (நாளை) சமர்ப்பிக்க வேண்டும். 9-ந்தேதி மீண்டும் விசாரணை நடைபெறும். எல்லோரிடமும் வரைவு பட்டியலும், இறுதி பட்டியலும் இருக்கிறது. எனவே, ஒப்பிட்டு ஆய்வு செய்து, தேவையான தரவுகளை சமர்ப்பிக்க முடியும்” என்று கூறினர்.