ஊமை விழிகள் படத்தை இயக்கிய இயக்குநர் ஆர்.அரவிந்த்ராஜ் இயக்கத்தில், எஸ்.எஸ்.ஆர் சத்யா பிக்சர்ஸ் தயாரிப்பில் ‘தேசியத் தலைவர்’ திரைப்படம் உருவாகியிருக்கிறது.
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் வாழ்க்கையை முன்னிறுத்தி உருவாக்கப்பட்டிருக்கும் இந்தப் படத்தில் தேவராக ஜே.எம்.பஷிர் நடித்திருக்கிறார். இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.
இந்த விழாவில் ‘தேவர்’ ஆராய்ச்சியாளர் நவமணி கலந்துகொண்டார். திரைக்கதை உருவாக்கத்தில் தொடங்கி படப்பிடிப்புவரை படக்குழுவுக்கு பல உதவிகளைச் செய்திருக்கிறார். இவரின் வழிகாட்டுதலின்படி பலர் தேவர் குறித்த ஆய்வுக்கட்டுரைகளை எழுதி முனைவர் பட்டம் பெற்றிருக்கின்றனர்.

இவர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது, “2022-ல் என்னை இந்தப் படத்துக்காக அழைத்தார்கள். அப்போதே சிலர், இந்தப் படக்குழு சரியானது அல்ல. அவர்களுடன் சேராதீர்கள் என்றார்கள்.
நானே, அவர்கள் என்ன கதையை எடுத்து வைத்திருக்கிறார்கள் எனப் பார்ப்போம் என்றே வந்தேன். நான் இந்தப் படத்துக்கு வருவதற்கு முன்னால் இருந்த திரைக்கதையே வேறு.
அதை மாற்ற வேண்டும் என ஒவ்வொன்றாக மாற்றிக்கொண்டே வந்தேன். ஒருகட்டத்தில் அவர்களால் என்னை ஜீரணிக்கவே முடியவில்லை.
1957-ல் வைத்த தீ இன்றுவரை எரிந்துகொண்டிருக்கிறது. ஒருவேளை அவர்கள் வைத்திருந்த அந்தக் கதையை எடுத்திருந்தால் இன்னொரு கலவரம் வந்திருக்கும். அதையெல்லாம் மாற்றி மாற்றி கொண்டுவந்தேன்.
நேதாஜி ராணுவத்தில் தேவர் பயிற்சி பெற்ற ஆண்டு 1950. தேவர் 1949 நவம்பர் 17-ல் தலைமறைவாக நாட்டைவிட்டு மீசையுடன் சென்றார். 1951-ல் திரும்பி வரும்போதுதான் தோற்றம் மாறி வந்தார்.
நேதாஜி ஜெயந்தியில் பேசும்போது, ‘1950-ல் நடந்த கொரியா யுத்தம் நடந்தது. நான் அதில் கலந்துகொண்டேன். விமானம் இயக்குவதைக் கற்றேன்’ என்றெல்லாம் பேசினார்.

ஆனால், தேவர் பிரிட்டிஷ் காலத்தில் நேதாஜி இராணுவத்தில் பயிற்சி பெற்றது போலவும், அதன்பிறகு மக்களிடம் துப்பாக்கியைக் கொடுத்து பிரிட்டிஷாரை சுடுவது போலவும் காண்பித்தால் அது வரலாறா?
ஏ.ஆர்.பெருமாளின் புத்தகத்தை அடிப்படையாக வைத்துதான் இந்தப் படம் எடுக்கப்பட்டதாக பல இடங்களில் சொல்லியிருக்கிறீர்கள்.
ஆனால் எந்த இடத்திலும் ஏ.ஆர். பெருமாள் பெயர் இல்லை. எனக்கே இன்னும் முழுமையாக படம் போட்டு காண்பிக்கவில்லை. சிறு சிறு காட்சிகளாகத்தான் காண்பித்தார்கள்.
பாதிப் படம் டப்பிங்கில் மட்டும் 50 இடங்களில் திருத்தங்களைக் கூறியிருக்கிறேன். அதைச் சரி செய்தார்களா என இப்போதுவரை எனக்குத் தெரியாது.
இந்தப் படத்தில் நடித்த பஷீர் மேக்கப் போடும்போதுகூட நான் உடன் இருக்க வேண்டும் என விரும்பி என்னை வரவழைத்தார். ஆனால் இயக்கம் என வரும்போது அப்படி இல்லை.
சென்சார் போர்டின் சர்டிஃபிகேட் பார்த்தபோது நெஞ்சு வெடிப்பது போல ஆகிவிட்டது. அந்த சர்டிஃபிகேட்டில் பத்திரிகையில் வந்த செய்தியைத் தழுவி உருவாக்கப்பட்ட கற்பனை எனக் குறிப்பிட்டிருக்கிறீர்கள்.

இதற்கு என்ன பொருள்? இந்தப் படம் வரலாறா அல்லது உங்கள் கற்பனைக் கதையா? இது பெரிய மோசடி. ஏன் தேவர் என வரும்போது இவ்வளவு முரண்பாடாக இருக்கிறீர்கள்?
இது ஊமை விழிகள் போன்ற படம் என்றால் எங்களுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை….” என நவமணி பேசிக்கொண்டிருக்கும்போதே இந்தப் படத்தின் இயக்குநர் அரவிந்த் மேடையிலிருந்து ‘பேசத் தெரியாமல் பேசிக்கொண்டிருக்கிறார்’ என முணுமுணுத்துக்கொண்டே இறங்கினார்.
அதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. “தேவரைப் பற்றி தவறாகப் படம் எடுக்கிறார்கள் என்கிறேன். இயக்குநரை திட்டுவதாகக் குமுறுகிறீர்கள். தேவரைவிட இயக்குநர் என்ன அவ்வளவு பெரியவரா?” எனக் கீழிருந்தவர்களை நோக்கி கேள்வி எழுப்பினார் நவமணி.
இதற்கிடையில் ஆர்.கே.சுரேஷ் நவமணியிடம், “நான் சென்சார் போர்டின் மெம்பர். நாம் என்னதான் உண்மைக் கதையை எடுத்தாலும், கற்பனை எனக் குறிப்பிட்டால்தான் சென்சார் போர்டு ஏற்றுக்கொள்ளும்” என தேவர் ஆராய்ச்சியாளர் நவமணி வைத்த அனைத்துக் குற்றச்சாட்டுகளையும் சென்சார் போர்டு பிரச்னையாக சுருக்கினார்.

தொடர்ந்து பேசிய அவர், “நம் சமூக மக்களே இந்தப் படம் எடுக்க முயற்சி செய்யாதபோது, வேறு சமூக இயக்குநர் படம் எடுத்திருக்கிறார் என்றால் அவரைப் பாராட்ட வேண்டும்.
2.30 மணி நேரத்தில் அனைத்தையும் காண்பிக்க முடியாது என்பதால் நிறைய மாற்றங்கள் நடந்திருக்கும். நீங்கள் விரும்புவது போல முக்குலத்தோர் சமூகமே சேர்ந்து இதே பஷீரை வைத்து இரண்டாம் பாகம் எடுக்கலாம்” என்றார்.
தொடர்ந்து பேசிய நவமணி, “வரலாறு என்றால் வரலாறாக இருக்க வேண்டும் என்பதைதான் கூறுகிறேன். தேவர் வாழ்க்கை வரலாறு தவறு இல்லாமல் வரவேண்டும் என்பது என் விருப்பம்.
தேவர் குறித்து 90 புத்தகம் வந்தாலும் யாரும் தேடிப் படிப்பதில்லை. ஆனால் அது படமாக வருகிறது என்றால் எல்லோருக்கும் அந்த வரலாறு சென்று சேரும் என்பதால்தான் இவர்களுடன் இணைந்தேன்.
திருத்தம்தான் சொன்னேன். உங்கள் உழைப்பு வீணாகிவிடக் கூடாது என்ற அக்கறை இருக்கிறது. இந்தப் படம் வெளியானதும் இதற்கு அரசியல் நெருக்கடி ஏற்பட்டால், அதற்கான ஆவணத்துடன் நான் இருக்கிறேன் என்றே உங்களிடம் தெரிவித்திருந்தேன்.
ஏதோ கோபத்தில் பேசுகிறேன் என்பதல்ல. நாளை விமர்சனத்தில் இதை எழுதிவிடுவார்கள். எனவே, 50-க்கும் மேற்பட்ட திருத்தங்களைச் சொல்லியிருக்கிறேன். அவை அனைத்தும் திருத்தப்பட்டு வரவேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்” எனப் பேசினார்.