டேங்கர் லாரிகள் போராட்டத்துக்கு தடை கோரிய வழக்கு: ஐகோர்ட் முடித்து வைப்பு

சென்னை: எல்பிஜி கேஸ் டேங்கர் லாரிகளுக்கான ஒப்பந்தத்தை தற்காலிகமாக 2026-ம் ஆண்டு மார்ச் வரை நீட்டிக்க எண்ணெய் நிறுவனங்கள் தரப்பில் ஒப்புதல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, டேங்கர் லாரிகள் போராட்டத்துக்கு தடை கோரிய வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் முடித்து வைத்தது.

எல்பிஜி எரிவாயு சப்ளை செய்யும் டேங்கர் லாரிகளுக்கான ஒப்பந்தம் முடிந்ததை அடுத்து புதிய ஒப்பந்தங்களை வழங்க பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்கள் டெண்டர் கோரியுள்ளன. இந்த டெண்டர் நடைமுறைகள் முடிந்து பணிகள் ஒதுக்கும் வரை, தற்போதைய ஒப்பந்தங்கள் 2025 அக்டோபர் வரையும், 2026 பிப்ரவரி வரையும் நீட்டிக்கப்பட்டுள்ளன.

பெரும் தொகை முதலீடு செய்துள்ள டேங்கர் லாரிகளை வேறு பயன்பாட்டுக்கு பயன்படுத்த முடியாது என்பதால், ஒப்பந்த காலத்தை மேலும் ஓர் ஆண்டுக்கு நீட்டிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து தென் மண்டல எல்பிஜி டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கம், அக்.9-ம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது.

இந்த வேலை நிறுத்தப் போராட்டத்துக்கு தடை விதிக்க கோரி மூன்று பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. அந்த மனுக்களில், டேங்கர் லாரி வேலை நிறுத்தம் காரணமாக பொதுமக்களுக்கு சமையல் எரிவாயு கிடைக்காமல் தட்டுப்பாடு ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு நீதிபதி தண்டபாணி முன்பு விசாரணைக்கு வந்த போது, எண்ணெய் நிறுவனங்கள் தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏஆர்எல் சுந்தரேசன், புதிய டெண்டர் பணிகள் இன்னும் நிறைவடையாத காரணத்தால், தற்போதைய ஒப்பந்தத்தை 2026 மார்ச் மாதம் வரை நீட்டிக்க தயாராக இருப்பதாகவும், இடைப்பட்ட காலத்தில் புதிய டெண்டர் நடைமுறைகள் முடிக்கப்படும் என்றும் சுந்தரேசன் தெரிவித்தார். இதை லாரி டேங்கர் சங்கங்களும் ஏற்றுக்கொண்டன.

இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதி, தற்போதைய ஒப்பந்தத்தை 2026 மார்ச் வரை நீட்டிக்க உத்தரவிட்டும், இடைப்பட்ட காலத்தில் எந்த வேலை நிறுத்த போராட்டத்திலும் ஈடுபடக் கூடாது என டேங்கர் லாரிகள் சங்கத்துக்கு அறிவுறுத்தியும் நீதிபதி, வழக்கை முடித்து வைத்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.