Mohammed Shami vs Ajit Agarkar: இந்திய கிரிக்கெட் அணியின் மூத்த வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி, தன்னை ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் இருந்து நீக்கியது குறித்து தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கரின் கருத்துக்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார். தனது உடற்தகுதி குறித்து அணி நிர்வாகம் தன்னிடம் ஒருபோதும் பேசவில்லை என்றும், ரஞ்சி டிராபி போன்ற கடினமான போட்டிகளில் விளையாடும் நான், எப்படி ஒருநாள் போட்டிகளுக்கு தகுதியற்றவன் ஆவேன் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். இது இந்திய கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
Add Zee News as a Preferred Source
அஜித் அகர்கர் vs ஷமி
அஜித் அகர்கர் சமீபத்தில் ஷமியின் உடற்தகுதி குறித்து எந்த புதிய தகவலும் இல்லை என்றும், கடந்த சில ஆண்டுகளாக அவர் போதுமான போட்டிகளில் விளையாடவில்லை என்றும் கூறியிருந்தார். இதற்கு பதிலளிக்கும் விதமாக ஷமி, தனது உடற்தகுதி நிரூபிக்கப்பட்ட ஒன்று என்றும், தன்னை தொடர்பு கொண்டு கேட்க வேண்டியது அணி நிர்வாகத்தின் கடமை என்றும் கூறியுள்ளார். இந்த கருத்து மோதல், வீரர்களுக்கும் தேர்வாளர்களுக்கும் இடையே உள்ள தகவல் தொடர்பு இடைவெளியை வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது.
தேர்வுக்குழுவின் குற்றச்சாட்டு
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடருக்கான இந்திய அணியில் முகமது ஷமிக்கு இடம் கிடைக்கவில்லை. இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர், “ஷமியின் உடற்தகுதி பற்றி எங்களிடம் புதிய தகவல்கள் இல்லை. அவர் துலீப் டிராபியில் விளையாடினார், ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளில் அதிக கிரிக்கெட் போட்டிகளில் அவர் பங்கேற்கவில்லை. பெங்கால் அணிக்காக ஒரு போட்டியிலும், துலீப் டிராபியில் ஒரு போட்டியிலும் மட்டுமே விளையாடியுள்ளார். அவரது திறமை நம் அனைவருக்கும் தெரியும், ஆனால் அவர் இன்னும் பல போட்டிகளில் விளையாடி தன்னை நிரூபிக்க வேண்டும்,” என்று தெரிவித்திருந்தார்.
அகர்கரின் இந்த கருத்துக்கு முகமது ஷமி காட்டமாக பதிலடி கொடுத்துள்ளார். “எனது உடற்தகுதி குறித்து இந்திய அணி நிர்வாகம் ஒருபோதும் என்னிடம் பேசவில்லை. அவர்களிடம் என் தகுதி பற்றி தெரிவிக்க வேண்டியது என் வேலை அல்ல; அவர்கள் தான் என்னிடம் கேட்க வேண்டும். என்னால் நான்கு நாட்கள் கொண்ட டெஸ்ட் போட்டிகளில் விளையாட முடியும் போது, 50 ஓவர்கள் கொண்ட ஒருநாள் போட்டியில் ஏன் விளையாட முடியாது? ஒருவேளை நான் உடற்தகுதியுடன் இல்லை என்றால், தேசிய கிரிக்கெட் அகாடமியில் பயிற்சி பெற்றுக்கொண்டிருப்பேன், ரஞ்சி டிராபியில் விளையாடி கொண்டிருக்க மாட்டேன்,” என்று ஷமி கூறியுள்ளார். அக்டோபர் 15-ம் தேதி தொடங்கும் 2025-26 ரஞ்சி டிராபி சீசனில், அபிமன்யு ஈஸ்வரன் தலைமையில் பெங்கால் அணிக்காக ஷமி விளையாட உள்ளது குறிப்பிடத்தக்கது.
ஷமியின் இந்த கருத்துக்கள், அணி நிர்வாகத்திற்கும் வீரர்களுக்கும் இடையே ஒரு பெரிய தகவல் தொடர்பு இடைவெளி இருப்பதை காட்டுகிறது ஒரு மூத்த வீரரின் உடற்தகுதியை ஊடகங்கள் மூலம் கேள்விக்குள்ளாக்குவதற்கு பதிலாக, அணி நிர்வாகம் நேரடியாக வீரருடன் பேசியிருக்க வேண்டும் என்று கிரிக்கெட் விமர்சகர்கள் கருதுகின்றனர். நான்கு நாட்கள் கொண்ட ரஞ்சி போட்டியில் விளையாடுவது, ஒருநாள் போட்டியை விட அதிக உடல் உழைப்பையும், மன உறுதியையும் கோரும் ஒன்றாகும். அப்படிப்பட்ட நிலையில், ரஞ்சியில் விளையாடும் தன்னை ஒருநாள் போட்டிக்கு தகுதியற்றவர் என்று கூறுவதை ஷமியால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
ஷமியின் சமீபத்திய ஆட்டம்
முகமது ஷமி கடைசியாக 2025 சாம்பியன்ஸ் டிராபி இறுதி போட்டியில் நியூசிலாந்துக்கு எதிராக இந்திய அணிக்காக விளையாடினார். அந்த தொடரில், வங்கதேசத்திற்கு எதிரான முதல் போட்டியில் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தி சிறப்பான தொடக்கத்தை அளித்தார். அதன் பிறகு இரண்டு போட்டிகளில் விக்கெட் எடுக்க தவறினாலும், அரையிறுதி மற்றும் இறுதி போட்டிகளில் மீண்டும் தனது சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தி அணியின் வெற்றிக்கு உதவினார். இந்த நிலையில், அவரது அனுபவமும் திறமையும் ஆஸ்திரேலியா போன்ற கடினமான தொடரில் இந்திய அணிக்கு தேவைப்படும் நிலையில், அவரை புறக்கணித்தது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
About the Author
RK Spark