டெல்லியில் தீபாவளிக்கு பசுமைப் பட்டாசுகளை விற்க, வெடிக்க உச்ச நீதிமன்றம் அனுமதி

புதுடெல்லி: டெல்லியில் தீபாவளிக்கு பசுமைப் பட்டாசுகளை விற்க, வெடிக்க நிபந்தனைகளுடன் உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.

இது தொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி பி.ஆர். கவாய், நீதிபதி கே. வினோத் சந்திரன் அடங்கிய அமர்வு, “தீபாவளியை முன்னிட்டு அக்டோபர் 18 முதல் 21 வரை டெல்லியில் பசுமைப் பட்டாசுகளை விற்பனை செய்ய அனுமதி வழங்கப்படுகிறது. நியமிக்கப்பட்ட இடங்களில் மட்டுமே விற்பனை செய்யப்பட வேண்டும். காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும், இரவு 8 மணி முதல் 10 மணி வரையிலும் பட்டாசு வெடிக்க அனுமதி அளிக்கப்படுகிறது. ஆன்லைன் தளங்கள் மூலம் பட்டாசுகளை விற்கக் கூடாது” என தெரிவித்துள்ளது.

உச்ச நீதிமன்றத்தின் இந்த அனுமதிக்கான காரணம் குறித்து விளக்கிய நீதிபதிகள், “ஏற்கெனவே அமலில் இருந்த முழுமையான தடை என்பது எதிர்மறை விளைவைக் கொண்டிருந்தது. காற்றின் தரத்தில் அதிக சேதத்தை ஏற்படுத்தும் வழக்கமான பட்டாசுகளை கடத்த வழி வகுத்தது. எனவே, நாங்கள் ஒரு சமநிலையான அணுகுமுறையை எடுக்க வேண்டிய தேவை இருந்தது.” என தெரிவித்துள்ளனர்.

முந்தைய விசாரணையின்போது, டெல்லியில் பட்டாசுகளை உற்பத்தி செய்யவும், சேமித்து வைக்கவும், விற்பனை செய்யவும், பயன்படுத்தவும் ஒரு வருட காலத்துக்கு விதிக்கப்பட்ட தடை உத்தரவை மறுபரிசீலனை செய்யப்போவதாக நீதிபதிகள் தெரிவித்திருந்தனர்.

முன்னதாக, டெல்லி பட்டாசு வர்த்தகர்கள் கூட்டமைப்பு, பட்டாசு சங்கம் (ஹரியானா), இந்திய கூட்டு அறக்கட்டளை உள்ளிட்ட மனுதாரர்கள், டெல்லியில் பட்டாசு வெடிக்க விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கக் கோரி மனுக்களை தாக்கல் செய்திருந்தனர். அவர்கள் தங்கள் வாதத்தில், டெல்லியில் நிலவும் காற்று மாசுக்கு, பயிர்க்கழிவுகளை எரிப்பதும், வாகன புகையுமே முக்கிய காரணம் என தெரிவித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.