‘நமது மீனவர் நலன் குறித்து இலங்கை பிரதமர் ஹரிணி அமரசூரியவிடம் பேசினேன்’ – பிரதமர் மோடி தகவல்

புதுடெல்லி: இலங்கை பிரதமர் ஹரிணி அமரசூரிய உடனான சந்திப்பின்போது நமது மீனவர்களின் நலன் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதித்ததாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

இந்தியா வந்துள்ள இலங்கை பிரதமர் ஹரிணி அமரசூர்ய டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்தார். இந்தச் சந்திப்பு குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி, “இலங்கைப் பிரதமர் ஹரிணி அமரசூரியவை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். கல்வி, பெண்களுக்கு அதிகாரமளித்தல், புதுமை, மேம்பாட்டுக்கான ஒத்துழைப்பு, நமது மீனவர்களின் நலன் உள்ளிட்ட பல்வேறு துறைகள் குறித்து நாங்கள் விவாதித்தோம். இந்தியா – இலங்கை இடையேயான ஒத்துழைப்பு, இரு நாட்டு மக்களின் செழிப்புக்கும், பிராந்தியத்தின் நலனுக்கும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும்” என தெரிவித்துள்ளார்.

இந்தச் சந்திப்பு குறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ‘இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் பிரதமர் ஹரிணி அமரசூரிய இன்று பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார். அவருக்கு அன்பான வரவேற்பை அளித்த பிரதமர், வரலாற்றுச் சிறப்புமிக்க மற்றும் பன்முகத்தன்மை கொண்ட இந்தியா – இலங்கை உறவுகளுக்கு அவருடைய வருகை புதிய உத்வேகத்தை அளிக்கும் என கூறினார்.

இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் தான் இலங்கைக்கு மேற்கொண்ட அரசுமுறைப் பயணத்தை நினைவுகூர்ந்த பிரதமர் மோடி, அப்போது அனைத்துத் துறைகளிலும் ஒத்துழைப்பை வலுப்படுத்துவது தொடர்பாக அதிபர் அனுர குமார திசநாயக்கவுடன் கலந்துரையாடியதை சுட்டிக்காட்டினார். கல்வி, தொழில்நுட்பம், புதுமை, மேம்பாட்டுக்கான ஒத்துழைப்பு, நமது மீனவர்களின் நலன் உள்ளிட்ட பல துறைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் குறித்து இரு தலைவர்களும் விவாதித்தனர்.

இரு நாடுகளுக்கும் இடையிலான சிறப்பு உறவுகளை எடுத்துரைத்த பிரதமர், இரு நாடுகளின் வளர்ச்சிப் பயணத்தில் இணைந்து பணியாற்றுவதற்கான இந்தியாவின் உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தினார். மேலும், அதிபர் அனுர குமார திசநாயக்கவுக்கு தனது அன்பான வாழ்த்துகளைத் தெரிவித்ததோடு, இலங்கையின் தொடர்ச்சியான ஒத்துழைப்பை ஆவலுடன் எதிர்நோக்குவதாகவும் குறிப்பிட்டார்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, ‘இலங்கையிடமிம் இருந்து கச்சத் தீவை மீட்கவும், இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவிக்கவும், கூட்டுப்பணிக் குழுவை மீண்டும் புதுப்பிக்கவும் இந்தியா வந்துள்ள இலங்கை பிரதமரிடம் வலியுறுத்த வேண்டும்’ என பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியது குறிப்பிடத்தக்கது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.