பிஹார் சட்டப்பேரவை தேர்தலில் முதல்கட்ட வாக்குப்பதிவுக்கான வேட்புமனு தாக்கல் வெள்ளிக்கிழமையுடன் முடிவடைந்தது. ஆனாலும் இப்போது வரை எதிர்க்கட்சிகளின் மகா கூட்டணியில் தொகுதிப் பங்கீடு இறுதியாகவில்லை. ஆர்ஜேடி, காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சிகளிடையே தொடரும் இழுபறி, அவர்களுக்கு பாதகமாக மாறுமா எனப் பார்ப்போம்.
தேசிய அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்த மாநிலமான பிஹார், தற்போது சட்டப்பேரவை தேர்தலை எதிர்கொள்கிறது. 2024 மக்களவைத் தேர்தலில் பாஜகவால் தனிப் பெரும்பான்மை பெற முடியாத சூழலில், பிஹாரில் நிதிஷ் குமார் கட்சியின் எம்.பி.க்களே தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியமைக்க முக்கிய காரணமானார்கள். மக்களவைத் தேர்தலில் பிஹாரில் மொத்தமுள்ள 40 தொகுதிகளில் தேசிய ஜனநாயக கூட்டணி 30 தொகுதிகளிலும், இண்டியா கூட்டணி 9 தொகுதிகளிலும் வென்றது. இந்தச் சூழலில்தான் பிஹார் சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள், பாஜக கூட்டணி மற்றும் ஆர்ஜேடி – காங்கிரஸ் கூட்டணிக்கு முக்கியமானதாக மாறியுள்ளது.
243 உறுப்பினர்களை கொண்ட பிஹார் சட்டப்பேரவையில் உள்ள 121 தொகுதிகளுக்கு நவம்பர் 6-ஆம் தேதியும், 122 தொகுதிகளுக்கு நவம்பர் 11-ஆம் தேதியும் இரு கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. இதில் முதல்கட்ட தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் வெள்ளிக்கிழமையுடன் நிறைவடைந்தது. ஆனாலும், கடைசி வரை தொகுதிப் பங்கீட்டை முடிக்காமல் அடித்துப் பிடித்துக்கொண்டு ஆளாளுக்கு வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர் மகா கூட்டணியினர்.
மகா கூட்டணியில் ஆர்ஜேடி, காங்கிரஸ், சிபிஐ(எம் எல்), விஐபி கட்சி, சிபிஐ, சிபிஎம், ஜேஎம்எம் ஆகிய கட்சிகள் இடம்பெற்றுள்ளன. கடந்த ஒரு மாதமாகவே இந்த கட்சிகளிடையே தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை நடந்தும் இப்போது வரை ஒப்பந்தம் இறுதியாகவில்லை. இதனால்தான் முதல்கட்ட தேர்தலில் ஆர்ஜேடி 71 தொகுதிகளிலும், காங்கிரஸ் 25 தொகுதிகளிலும், சிபிஐ (எம்எல்) 14 தொகுதிகளிலும், விஐபி கட்சி 6 தொகுதிகளிலும், மற்ற கூட்டணிக் கட்சிகள் சுமார் 10 தொகுதிகளிலும் வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனாலும், எந்தக் கட்சி எந்த தொகுதியில் போட்டியிடும் என்பது உறுதியாகவில்லை. இதனால், 8 தொகுதிகளில் மகா கூட்டணி கட்சிகள் தங்களுக்கு இடையிலேயே போட்டியிடும் சூழல் உருவாகியுள்ளன.
கூட்டணி குழப்பம்: தேர்தல் முடிவுகளில் எதிரொலிக்குமா? பிஹார் சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு கடந்த ஆகஸ்டு மாதம் ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவுடன் இணைந்து ராகுல் காந்தி நடத்திய ‘வாக்காளர் அதிகார யாத்திரை’ பெரும் வரவேற்பை பெற்றது. அதுபோல பலம் பொருத்திய கட்சிகளும் மகா கூட்டணியில் இருந்தது ஆளும் ஜேடியு – பாஜக கூட்டணிக்கு பயத்தை உருவாக்கியது. இதனால்தான் தேர்தல் நெருக்கத்தில் முதல்வர் நிதிஷ் குமார் பல்வேறு தரப்பினருக்கும் எண்ணிலடங்கா அறிவிப்புகளை வெளியிட்டு மக்களுக்கு பணமழையை பொழிந்தார்.
அதேபோல தொகுதிப் பங்கீட்டிலும் நிதிஷின் ஐக்கிய ஜனதா தளம், பாஜக தலா 101 தொகுதிகள், சிராக் பாஸ்வானுக்கு 29, ஹெச்ஏஎம் மற்றும் ஆர்எல்எம் கட்சிகளுக்கு தலா 6 தொகுதிகளை ஒதுக்கி முந்திக்கொண்டது தேசிய ஜனநாயக கூட்டணி. ஆனாலும், இப்போது வரை யாருக்கு எத்தனை தொகுதிகள், யாருக்கு எந்த தொகுதி என்பது தெளிவாக முடிவாகாமல் குழம்பிக் கிடக்கிறது ஆர்ஜெடி – காங்கிரஸின் மகா கூட்டணி.
‘வாக்காளர் அதிகார யாத்திரை’க்காக இந்தியா முழுவதும் உள்ள இண்டியா கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் பிஹாருக்கு வந்தார்கள். மேலும், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம், வாக்குத் திருட்டு உள்ளிட்ட குற்றச்சாட்டுகளை ராகுலும், தேஜஸ்வியும் முன்வைத்தது பொதுமக்களின் கவனத்தை ஈர்த்தது. இதே வேகத்தில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து உடனடியாக தேர்தல் பணிகளில் மகா கூட்டணி இறங்கியிருந்தால் அது அவர்களுக்கு கூடுதல் பலமாக மாறியிருக்கும். தற்போது மகா கூட்டணியில் ஏற்பட்டுள்ள குடைச்சலை வைத்து, அவர்களை கடுமையாக விமர்சிக்க ஆரம்பித்துள்ளது தேசிய ஜனநாயக கூட்டணி.
2020 தேர்தல் மிக நெருக்கத்தில் வெற்றி வாய்ப்பை இழந்தது மகா கூட்டணி. தேசிய ஜனநாயக கூட்டணி 125 தொகுதிகளை வென்ற நிலையில், மகா கூட்டணியில் ஆர்ஜேடி 144 தொகுதிகளில் போட்டியிட்டு 75-ல் வென்று தனிப்பெரும் கட்சியானது. காங்கிரஸ் 70 தொகுதிகளில் போட்டியிட்டு 19-ல் மட்டுமே வென்றது. இடதுசாரிகள் 16 இடங்களில் வென்றன. மகா கூட்டணி மொத்தம் 110-ல் வெற்றி பெற்றிருந்தது. இம்முறை கூடுதல் கட்சிகளும் இணைந்துள்ளதால் வெற்றி நிச்சயம் என நம்பி வருகிறார் தேஜஸ்வி யாதவ். ஆனாலும், தொகுதிப் பங்கீடு குழப்பம் இப்போது மகா கூட்டணிக்கு தொடக்கத்திலேயே சங்கடத்தை உருவாக்கியுள்ளது.
பிஹாரில் இப்போதைய சூழலில் பொதுமக்களின் நம்பிக்கைக்குரிய முகங்கள் நிதிஷ் குமாரும், தேஜஸ்வியும்தான். எனவே ஆர்ஜேடி அதிக தொகுதிகளில் போட்டியிட மகா கூட்டணி கட்சிகளே விருப்பம் தெரிவித்தன. ஆனாலும், காங்கிரஸ் விடாப்பிடியாக அதிகம் தொகுதிகள் கேட்டதே கூட்டணி குழப்பத்துக்கு காரணம் என அரசியல் விமர்சகர்கள் சொல்கின்றனர். அதே நேரத்தில், ‘கூட்டணிக்குள் குழப்பம் ஏதும் இல்லை, அதிகம் கட்சிகள் உள்ளதால் சிறிய தாமதம் ஏற்படுகிறது’ என்கின்றனர் மகா கூட்டணியினர்.
‘கடைசி நேரம் வரை தொகுதிப் பங்கீடு ஏற்படாதது, ஒரே தொகுதியில் கூட்டணி கட்சியினர் வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளது தோழமை கட்சி தொண்டர்களிடையே நெருடலை உருவாக்கும். இது களத்தில் கூட்டணிக்கு பின்னடைவை உருவாக்கவும் வாய்ப்புள்ளது’ என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள். ஆனாலும், இந்த நெருடலை தாண்டியும் நாங்களே வெல்வோம் என்கின்றனர் மகா கூட்டணியினர். இந்தக் குழப்பம் மகா கூட்டணிக்கு பாதகத்தை உருவாக்கியதா என்பது வாக்கு எண்ணிக்கை நாளான நவம்பர் 14-ல் தெரிந்துவிடும்.