இந்திய கிரிக்கெட் அணியில் இளம் வேகப்பந்து வீச்சாளர் ஹர்ஷித் ராணாவின் தேர்வு குறித்து, முன்னாள் வீரர்கள் கௌதம் கம்பீர் மற்றும் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் இடையே தொடங்கிய வார்த்தை போர், தற்போது ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் ஸ்ரீகாந்தின் மகன் அனிருத்தா ஆகியோரையும் உள்ளிழுத்து பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது. “உங்கள் YouTube சேனலுக்காக பேசாதீர்கள்” என கம்பீர் விமர்சித்த நிலையில், “ஒரு வீரரை தனிப்பட்ட முறையில் தாக்காதீர்கள்” என அஸ்வின் அறிவுரை வழங்கியிருந்தார். இதற்கு அனிருத்தா ஸ்ரீகாந்த், “நீங்கள் RCB அணியை கேலி செய்தபோது நாங்கள் சிரிக்கவில்லையா?” என காட்டமாக பதிலடி கொடுத்துள்ளார்.
Add Zee News as a Preferred Source
சர்ச்சையின் தொடக்க புள்ளி
சமீபத்தில், இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீரின் ஆதரவால் தான் ஹர்ஷித் ராணா தொடர்ந்து அணியில் இடம் பிடிக்கிறார் என்று ஸ்ரீகாந்த் தனது YouTube சேனலில் விமர்சித்திருந்தார். “கம்பீருக்கு யெஸ் மேன் ஆக இருந்தால் போதும், அணியில் நிரந்தர இடம் கிடைத்துவிடும் என்பதற்கு ஹர்ஷித் ராணா ஒரு சிறந்த உதாரணம்” என்று அவர் கூறியது பெரும் விவாதத்தை உண்டாக்கியது.
இந்த குற்றச்சாட்டுக்குப் பதிலளித்த கௌதம் கம்பீர், “ஒரு 23 வயது இளம் வீரரை இப்படி தனிப்பட்ட முறையில் தாக்குவது வெட்கக்கேடானது. உங்களின் YouTube சேனலை நடத்துவதற்காக இப்படி பேசாதீர்கள். விமர்சிப்பதாக இருந்தால் என்னை விமர்சியுங்கள், அந்த பையனை விட்டுவிடுங்கள்” என்று கடுமையாக சாடியிருந்தார்.
அனிருத்தாவின் பதிலடி
இந்த மோதலில், இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வினும் மறைமுகமாக தனது கருத்தை தெரிவித்தார். “ஒரு இளம் வீரரின் நம்பிக்கையை தகர்க்கும் வகையில் தனிப்பட்ட விமர்சனங்கள் இருக்க கூடாது” என்று அவர் கூறியிருந்தார். அஸ்வினின் இந்த பேச்சு, ஸ்ரீகாந்தை குறிவைப்பதாகவே பார்க்கப்பட்டது.
இந்நிலையில், அஸ்வினின் கருத்துக்கு தனது தந்தையின் YouTube சேனல் மூலம் பதிலடி கொடுத்துள்ளார் அனிருத்தா ஸ்ரீகாந்த். அவர் பேசியதாவது: “ஏன் அஸ்வின் ப்ரோ? நாங்கள் உங்களுக்கு என்ன செய்தோம்? உங்கள் கருத்து ஒருதலைப்பட்சமாக தெரிகிறது. சில ஆண்டுகளுக்கு முன்பு, நீங்கள் RCB அணியின் பந்துவீச்சு படையை முழுவதுமாக கேலி செய்தபோது, நாங்கள் அதை நகைச்சுவையாக எடுத்துக்கொண்டு சிரித்தோம். அப்போது அவர்களுக்கும் ஒரு குடும்பம் இருக்கிறது என்பது உங்களுக்கு தெரியாதா? இப்போது நீங்கள் பேசுவது இரட்டை வேடமாக இல்லையா?” என்று அனிருத்தா கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும் தொடர்ந்த அவர், “என் தந்தை 1983-ல் லார்ட்ஸ் பால்கனியில் சிகரெட் பிடித்த காலத்திலிருந்தே யாருக்கும் பயப்படாதவர். அவர் இனி மாறப்போவதில்லை. சில நேரங்களில் அவரது பேச்சுக்கள் எனக்கே சங்கடத்தை ஏற்படுத்தினாலும், அதுதான் அவரது இயல்பு. இந்த சேனலில், உங்களுக்கு எப்போதும் வலுவான மற்றும் ஒருதலைப்பட்சமான கருத்துக்களே கிடைக்கும். அதில் எந்த மாற்றமும் இருக்காது,” என்று அனிருத்தா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். இந்த வீரர்கள் இடையேயான வார்த்தை போர், அணி தேர்வு குறித்த விமர்சனங்களை தாண்டி, தனிப்பட்ட தாக்குதல்களாக மாறியுள்ளது. சமூக வலைதளங்களில் கிரிக்கெட் ரசிகர்களிடையே இந்த விவகாரம் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.
About the Author
RK Spark