பெர்த்,
ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 ஒருநாள், 5 டி20 கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையேயான முதல் ஒருநாள் போட்டி பெர்த் மைதானத்தில் இன்று நடைபெற்றது.
இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து இந்தியா களமிறங்கிய நிலையில் ஆட்டத்தில் மழை குறுக்கிட்டது. இதனால் ஆட்டம் 26 ஓவர்களாக குறைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து இந்திய அணி 26 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 136 ரன்கள் எடுத்தது. இதனை தொடர்ந்து 137 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலியா 21.1 ஓவரில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 131 ரன்கள் எடுத்தது. அப்போது, மீண்டும் மழை குறுக்கிட்டத்தால் டக் ஒர்த் லூயிஸ் முறைப்படி இந்தியாவை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆஸ்திரேலியா வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் தோல்வியடைந்தது குறித்து இந்திய கேப்டன் சுப்மன் கில் கருத்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறுகையில், பவர்பிளேயில் 3 விக்கெட்டுகளை இழந்துவிட்டோம். அதன்பின்னர் விக்கெட்டுகளை இழக்காமல் விளையாடவே முயற்சித்தோம். இந்த ஆட்டத்தில் இருந்து நிறைய கற்றுக்கொள்ள வேண்டியுள்ளது. ஆட்டத்தை அதிக ஓவர்கள் வரை எடுத்து செல்ல முயற்சித்தோம். அந்த முயற்சியால் நான் திருப்தி அடைகிறேன். ரசிகர்கள் எங்களுக்கு அதிக ஆதரவு தந்தனர். அடிலெய்டில் நடைபெறும் 2வது ஒருநாள் போட்டிக்கும் ரசிகர்கள் அதிக ஆதரவு தருவார்கள் என நம்புகிறேன்’ என்றார்.