`அழகுக்கு அரோமா ஆயில்' – எந்தப் பிரச்னைக்கு எந்த ஆயில்? சொல்கிறார் நிபுணர்!

’சருமத்தை மெருகேற்ற பார்லரைவிட கூடுதல் பலன் கொடுக்கக்கூடியது அரோமா ஆயில்’ என்கிற அரோமா தெரப்பிஸ்ட் கீதா அஷோக், அரோமா ஆயில்களின் உதவியுடன் வீட்டிலேயே அழகாகும் வழிகளைச் சொல்கிறார்.

அழகுக்கு அரோமா ஆயில்
அழகுக்கு அரோமா ஆயில்

தினமும் முகத்தைக் கழுவும்போது, சோப்பு அல்லது ஃபேஸ் வாஷ் சிறிதளவு எடுத்து நுரை வரும் அளவுக்கு கைகளில் தேய்த்துக்கொண்டதும் அந்த நுரையில் லெமன் கிராஸ் ஆயில் இரண்டு சொட்டு விட்டு முகத்தைக் கழுவவும்.

பலன்: சரும துவாரங்களில் அடைந்துள்ள அழுக்குகள் வெளியேறுவதுடன், அரோமா ஆயிலின் வாசனையானது, சோர்வை நீக்கி புத்துணர்ச்சி அளிக்கும்.

எண்ணெய் வடியும் சருமம் உள்ளவர்களுக்கான குறிப்பு இது. ஒரு பாத்திரத்தில் நீர் எடுத்து அதில் பெப்பர் மின்ட் ஆயில், லாவெண்டர் ஆயில், மின்ட் ஆயில் தலா இரண்டு சொட்டுகள் விட்டு பாத்திரத்தை மூடி அடுப்பில் ஏற்றி கொதிக்கவிடவும். இதில் முகத்துக்கு நீராவி எடுக்கவும்.

பலன்: முகத்தில் சுரக்கும் அதிக எண்ணெய்ப் பசையை மட்டுப்படுத்துவதுடன், சருமத்தில் படிந்துள்ள அழுக்கை வெளியேற்றி பொலிவாக்கும்.

அழகுக்கு அரோமா ஆயில்
அழகுக்கு அரோமா ஆயில்

வறண்ட சருமத்தினருக்கும் இருக்கிறது அழகுக் குறிப்பு. ஒரு பாத்திரத்தில் நீரெடுத்து அதில் ஜெரேனியம் ஆயில் (geranium oil), லாவெண்டர் ஆயில், யலாங் யலாங் ஆயில் (ylang ylang oil) தலா இரண்டு சொட்டுகள் விட்டு, மூடிக் கொதிக்க விடவும். கொதித்த பின் நீராவி பிடிக்கவும்.

பலன்: முகத்தின் இறந்த செல்களை நீக்குவதுடன், சருமம் வறண்டு போகாமல் ஈரப்பதத்துடன் இருக்க உதவும்.

பொதுவாக பொலிவிழந்த சருமத்தை உடனடியாகப் பளிச்சென காட்டவும், அந்தப் பொலிவு அதிகபட்சம் மூன்று நாட்கள் நிலைக்கவும் ஃபேஸ்பேக் உதவி செய்யும்.

ஆனால் கரும்புள்ளி, பரு, மங்கு போன்ற சருமத்தின் இரண்டாவது அடுக்கின் பிரச்னைகளையும், சுருக்கம், கோடுகள், வயதான தோற்றம், சருமத் தளர்வு போன்ற சருமத்தின் மூன்றாவது அடுக்கின் பிரச்னைகளையும் சரிசெய்வது, அரோமா ஆயிலின் தனிச்சிறப்பு.

இதற்கு, லாவெண்டர் ஆயில், லைம் ஆயில், பச்சோலி ஆயில், சீடர் வுட் ஆயில், யலாங் ஆயில் இவற்றில் ஏதாவது இரண்டு ஆயில்களில் தலா இரண்டு சொட்டுகளை, ஃபேஸ்பேக் போடும் முன் அதில் கலந்து முகத்துக்கு அப்ளை செய்யவும்.

பலன்: அரோமா ஆயிலின் மூலக்கூறுகள் சருமத்தின் துவாரங்களைவிட மிகச்சிறியது. அதனால் ஃபேஸ்பேக் போட்ட 2 முதல் 20 விநாடிகளுக்குள் இந்த ஆயில் சருமத்தின் மூன்றாவது அடுக்குவரை ஊடுருவி சருமப் பிரச்னைகளைத் தீர்க்கும்.

அரோமா ஆயில்களும் இனி இருக்கட்டும் உங்கள் அலமாரியில்!

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.