Virat Kholi : ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தின் முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்த நிலையில், மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் நீடிக்க, வரும் அக்டோபர் 23ஆம் தேதி அடிலெய்டில் நடைபெறவுள்ள இரண்டாவது போட்டியில் இந்தியா கட்டாயம் வெற்றி பெற வேண்டும். முதல் போட்டியில் ரோஹித் ஷர்மா மற்றும் விராட் கோலி இருவரும் ஒற்றை இலக்கத்தில் ஆட்டமிழந்ததால், ரசிகர்களின் பார்வை முழுவதும் அடிலெய்டு ஓவல் மைதானத்தின் பக்கம் திரும்பி உள்ளது. இந்த முக்கியமான போட்டிக்கு இந்திய அணிக்குச் சாதகமான இரண்டு முக்கியச் செய்திகள் உள்ளன.
Add Zee News as a Preferred Source
இந்தியாவின் தொடர் வெற்றிகள்:
அடிலெய்டு ஓவல் மைதானத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி இரண்டு ஒருநாள் போட்டிகளிலும் இந்தியா வெற்றி பெற்றுள்ளது.
கோலியின் சாதனை: நட்சத்திர வீரர் விராட் கோலிக்கு இந்த மைதானம் அதிர்ஷ்டமான மைதானமாக இருந்துள்ளது.
அடிலெய்டில் தொடர் வெற்றிக்கான வாய்ப்பு
அடிலெய்டு ஓவல் மைதானத்தில் இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் இதுவரை 6 ஒருநாள் போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் ஆஸ்திரேலியா 4 முறை வெற்றி பெற்றாலும், இந்தியாவின் 2 வெற்றிகளும் கடைசி இரண்டு மோதல்களில் கிடைத்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
1. 2012 வெற்றி: தோனியின் ‘ஃபினிஷிங்’
அடிலெய்டில் இந்தியா முதன்முதலாக 2012ஆம் ஆண்டு வெற்றியை பதிவு செய்தது. ஆஸ்திரேலியா நிர்ணயித்த 270 ரன்கள் இலக்கை இந்திய அணி 2 பந்துகள் மீதமிருக்க, 6 விக்கெட்டுகளை இழந்து எட்டியது. இதில் கவுதம் கம்பீர் 92 ரன்கள் எடுத்தாலும், இந்தப் போட்டி தோனியின் வெற்றிகரமான ஃபினிஷிங்கிற்காகவே அதிகம் நினைவு கூரப்படுகிறது. கடைசி ஓவரில் இந்தியா வெற்றிக்கு 13 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், தோனி ஒரு சிக்ஸர் அடித்து, அடுத்த பந்தில் ஃப்ரீ ஹிட் வாய்ப்பைப் பயன்படுத்தி, இந்தியாவை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார்.
2. 2019 வெற்றி: கோலியின் சதம்
அடிலெய்டில் இரு அணிகளும் கடைசியாக மோதியது 2019ஆம் ஆண்டு. ஷான் மார்ஷின் சதத்தால் ஆஸ்திரேலியா 298 ரன்கள் குவித்தது. இந்திய அணி சார்பில் புவனேஷ்வர் குமார் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். பதிலுக்கு ஆடிய இந்திய அணி, கிங் கோலியின் 104 ரன்கள் சதத்தால் 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதில் மகேந்திர சிங் தோனி 55 ரன்கள் எடுத்து வெற்றிக்கு உதவினார்.
அடிலெய்டில் விராட் கோலியின் ஆதிக்கம்
முன்னாள் இந்திய கேப்டன் விராட் கோலிக்கு அடிலெய்டு ஓவல் மைதானம் ஒரு கோட்டை போலவே உள்ளது. அனைத்து ஃபார்மட்களிலும் சேர்த்து அவர் இங்கு விளையாடிய 12 சர்வதேசப் போட்டிகளில், 65 சராசரியில் 975 ரன்கள் குவித்துளளார். இதில் 5 சதங்கள் அடங்கும். வேறு எந்த இந்திய வீரரும் இந்த மைதானத்தில் 600 ரன்களுக்கு மேல் அங்கு எடுக்கவில்லை.
ஒருநாள் போட்டிகளில்: கோலி 4 போட்டிகளில் 83.84 சராசரியில் 244 ரன்கள் எடுத்துள்ளார். இதில் 2 சதங்கள் அடங்கும். இந்த மைதானத்தில் ஒருநாள் போட்டிகளில் அதிக ரன்கள் எடுத்த இந்திய வீரர்களில் அவர் இரண்டாவது இடத்தில் உள்ளார். தோனி 6 போட்டிகளில் 262 ரன்கள் எடுத்துள்ளார்.
கோலி மீது எதிர்பார்ப்பு
பெர்த் முதல் ஒருநாள் போட்டியில் கோலி டக் அவுட் ஆனதால், இந்தியா தோல்வியை சந்திக்க நேரிட்டுள்ளது. இருப்பினும் அடுத்த போட்டி அவருக்கு மிகவும் பிடித்தமான மைதானத்தில் நடைபெறுவதால் அங்கு விராட் கோலி ஃபார்முக்குத் திரும்புவார் என்று கிரிக்கெட் ரசிகர்கள் நம்புகின்றனர். அடிலெய்டு பிட்ச் பெர்த் மைதானத்தைப் போல அதிக பவுன்ஸ் இல்லாமல், இந்திய பேட்ஸ்மேன்களுக்குச் சாதகமாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
ரோகித் ஷர்மாவுக்கு சாதகம் இல்லை
மறுபுறம், ரோகித் ஷர்மாவுக்கு அடிலெய்டு மைதானம் சாதகமாக இல்லை. அவர் இங்கு விளையாடிய அனைத்து ஃபார்மட் போட்டிகளிலும் சேர்த்து 12 ஆட்டங்களில் 19.13 சராசரியில் 287 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். அவரது அதிகபட்ச ரன்களே 43 தான். ஒருநாள் போட்டிகளில் 6 இன்னிங்ஸ்களில் ஆடியுள்ள ரோஹித், ஒரு அரைசதம் கூட அடிக்கவில்லை.
ஆஸி தொடர் சமன் செய்ய
இந்தியாவுக்குத் தொடரைச் சமன் செய்ய வேண்டிய நெருக்கடி உள்ளது. அதனால், அடிலெய்டில் இந்தியா வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏனென்றால் அம்மைதானத்தில் இதுவரை நடைபெற்ற போட்டிகளின் வரலாறு மற்றும் கோலியின் அசைக்க முடியாத சாதனை ஆகியவை இந்திய அணிக்கு மிகப்பெரிய உத்வேகத்தை அளிக்கின்றன. முதல் போட்டியில் சொதப்பிய அணி, இரண்டாவது போட்டியில் கம்பேக் கொடுத்து தொடரை சமன் செய்யும் என்ற நம்பிக்கையில் இந்திய அணி உள்ளது.
About the Author
S.Karthikeyan