வாஷிங்டன்,
அமெரிக்காவில் பணிபுரிய வெளிநாட்டினருக்கு எச்-1பி விசா வழங்கப்பட்டு வருகிறது. இந்த வகை விசாவை பயன்படுத்துபவர்களில் 70 சதவீதத்திற்கும் மேற்பட்டோர் இந்தியர்கள் ஆவர்.
இதற்கிடையே எச்-1பி விசா கட்டணத்தை 1 லட்சம் அமெரிக்க டாலர்களாக (இந்திய மதிப்பில் ரூ.88 லட்சம்) அதிபர் டிரம்ப் உயர்த்தினார். ரூ.1.75 லட்சமாக இருந்த இந்த கட்டணம் பல மடங்கு உயர்த்தப்பட்டது. இந்த கட்டணத்தை எச்-1பி விசா பெற்று பணியாற்றும் ஒரு பணியாளருக்கும் அவரைப் பணியமர்த்தும் நிறுவனங்கள் செலுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.
அமெரிக்காவின் வேலை வாய்ப்புகளில் அமெரிக்கர்களுக்கே முன்னுரிமை அளிக்கும் நோக்கில் இந்த நட வடிக்கை எடுக்கப்பட்டதாக அந்நாட்டு அரசு தெரிவித்தது. இது எச்-1பி விசாவை அதிகளவில் பெறும் இந்தியர்களுக்கு அதிர்ச்சி அளிப்பதாக அமைந்து உள்ளது. இதற்கிடையே ஏற்கனவே எச்-1பி விசா வைத்திருப்போர் அல்லது புதுப்பிப்பவர்களுக்கு இந்த கட்டண உயர்வு பொருந்தாது எனவும் இது ஒருமுறை மட்டுமே செலுத்தும் கட்டணம் எனவும் அமெரிக்க அரசு விளக்கம் அளித்தது.
இந்நிலையில், எச்-1பி விசா கட்டண உயர்வில் தளர்வுகளை அமெரிக்க அரசு அறிவித்துள்ளது. அதன்படி, 2025 செப்டர்ம்பர் 21ம் தேதி 12.01 மணிக்கு முன் (அமெரிக்க நேரப்படி) ஏற்கனவே உரிமம் பெற்ற எச்-1பி விசா வைத்துள்ளவர்கள், ஏற்கனவே எச்-1பி விசாவுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு இந்த கூடுதல் கட்டணத்தில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
மாணவர்களுக்கு வழங்கப்படும் எப்-1 விசாவில் இருந்து வேலைக்காக வழங்கப்படும் எச்-1 பி விசாவுக்கு மாறுவதற்கு இந்த கூடுதல் கட்டணத்தில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. எச்-1பி விசா வைத்துள்ளவர்கள் அமெரிக்காவில் இருந்து வெளிநாடுகளுக்கு சென்றுவிட்டு மீண்டும் திரும்பி வந்தாலும் கூடுதல் கட்டணம் பொருந்தாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.