டோக்கியோ: ஜப்பானின் முதல் பெண் பிரதமராக சனே டகைச்சியை அந்நாட்டு நாடாளுமன்றம் தேர்ந்தெடுத்துள்ளது.
பிரதமரை தேர்ந்தெடுக்கும் கீழ் சபையில் நடைபெற்ற வாக்கெடுப்பில் லிபரல் ஜனநாயகக் கட்சி (எல்டிபி) வேட்பாளர் சனே டகைச்சி 237 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார். பெரும்பான்மைக்குத் தேவையான வாக்குகளைவிட 4 வாக்குகள் கூடுதலாக சனே டகைச்சி பெற்றுள்ளார். இவரை எதிர்த்துப் போட்டியிட்ட பிரதான எதிர்க்கட்சியான அரசியலமைப்பு ஜனநாயகக் கட்சியின் தலைவர் யோஷிகோகோ 149 வாக்குகளைப் பெற்று தோல்வி அடைந்தார்.
இதையடுத்து, சனே டகைச்சி புதிய அமைச்சரவையை உருவாக்க உள்ளார். கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் இந்த தேர்தலில் வெற்றி பெற்றிருப்பதால், கூட்டணிக் கட்சிகள் இடம்பெறும் வகையில் அவரது அமைச்சரவை இருக்கும் எனக் கூறப்படுகிறது.
முன்னதாக, லிபரல் ஜனநாயகக் கட்சியின் (எல்டிபி) தலைவராகவும், நாட்டின் பிரதமராகவும் இருந்த ஷிகெரு இஷிபா, ஓராண்டுக்குப் பிறகு பதவி விலகுவதாக ஏற்கெனவே அறிவித்திருந்தார். இதன்படி கடந்த மாதம் அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
இதையடுத்து, லிபரல் டெமாக்ரடிக் கட்சியின் புதிய தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் கடந்த 4-ம் தேதி டோக்கியோவில் நடைபெற்றது. சனே டகைச்சி 183 வாக்குகளும், வேளாண் அமைச்சர் ஷிஞ்சிரோ கொய்சுமி 164 வாக்குகளும் பெற்றனர். கட்சிக்குள் நடைபெற்ற வாக்கெடுப்பில் சனே டகைச்சி வெற்றி பெற்றதை அடுத்து, தற்போது நாடாளுமன்றத்திலும் வெற்றி பெற்றுள்ளார்.