சண்டிகர்: பஞ்சாபில் மர்ம மரணமடைந்த மகன் வெளியிட்டிருந்த சமூக வலைதளப் பதிவால், பெற்றோர் மீது போலீஸார் கொலை வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
பஞ்சாப் மாநில முன்னாள் டிஜிபி முகமது முஸ்தபா, முன்னாள் அமைச்சர் ரஸியா சுல்தானா தம்பதியின் மகன் அகில் அக்தர் (35). கடந்த அக்டோபர் 16-ம் தேதி வீட்டில் மர்மமான முறையில் உயிரிழந்தார்.
அக்தர் அதிக போதைப் பொருள் உட்கொண்டதால் இறந்ததாக கூறப்பட்டது. ஆனால், அக்தர் மரணத்தில் சந்தேகம் அடைந்த அவரது குடும்பத்துக்கு அறிமுகமான சம்சுதீன் சவுத்ரி, கடந்த ஆகஸ்ட் மாதம் சமூக வலைதளத்தில் அக்தர் வெளியிட்டிருந்த பதிவுகளை வெளியிட்டார்.
அந்தப் பதிவுகளில் அக்தர் கூறும்போது, ‘‘எனது தந்தைக்கும் எனது மனைவிக்கும் கள்ளத் தொடர்புள்ளது. இதனால் தினமும் நான் மன அழுத்தத்தில் இருக்கிறேன். என் குடும்பத்தார் என்னை மிரட்டுகின்றனர். இந்த விஷயத்தில் என் தாய், சகோதரியும் உடந்தையாக உள்ளனர். இந்த விவரத்தை வெளியில் தெரிவித்தால் என் மீது பாலியல் வழக்கு தொடுப்போம் என்றும் கொலை செய்வதாகவும் மிரட்டுகின்றனர். எனக்கு பைத்தியம் பிடித்ததாக போலியாக கூறி மறுவாழ்வு இல்லத்தில் சேர்க்க முயற்சிக்கின்றனர். எனது உயிருக்கு என்ன ஆகுமோ என்று தெரியவில்லை’’ என்று கூறியிருக்கிறார்.
இந்த தகவல் அறிந்து அதிர்ச்சி அடைந்த பஞ்சாப் போலீஸார், முன்னாள் டிஜிபி முகமது முஸ்தபா மற்றும் அவரது மனைவி ரஸியா சுல்தானா, அவர்களது மகள் மற்றும் மருமகள் மீது கொலை வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இதுகுறித்து பஞ்ச்குலா போலீஸ் துணை கமிஷனர் ஸ்ருஷ்டி குப்தா கூறும்போது, ‘‘அகில் அக்தர் மரணம் குறித்து விசாரணை நடத்த சிறப்பு விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளது. பாரபட்சமற்ற விசாரணை நடத்தி குற்றவாளிகள் யாராக இருந்தாலும் தண்டனை பெற்று தருவோம்’’ என்றார்.