புதுடெல்லி: டெல்லியில் இந்த ஆண்டு பட்டாசு வெடிக்க உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்ததை அடுத்து மக்கள் ‘பட்டாசு தீபாவளி’யை கொண்டாடியதன் எதிரொலியாக, உலக சுகாதார நிறுவனம் (WHO) நிர்ணயித்ததைவிட 15 மடங்கு காற்று மாசு அதிகரித்துள்ளதாக அதிகாரப்பூர்வ தரவு தெரிவிக்கிறது.
டெல்லியில் காற்று மாசு ஏற்படுவதைத் தடுக்கும் நோக்கில் தீபாவளிக்கு பட்டாசு வெடிக்க உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே தடை விதித்திருந்தது. அதை எதிர்த்து பட்டாசு உற்பத்தியாளர்கள் உள்ளிட்டோர் தொடர்ந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையிலான அமர்வு, தீபாவளி அன்று இரவு 8 மணி முதல் 10 மணி வரை பசுமை பட்டாசுகளை மட்டும் வெடிக்க அனுமதி அளித்து உத்தரவிட்டது.
நேற்றைய தீபாவளி கொண்டாட்டத்தின்போது நேரக் கட்டுப்பாடு மீறப்பட்டதாகவும், மேலும் பசுமை பட்டாசுகளைத் தாண்டி தடை விதிக்கப்பட்ட பட்டாசுகளும் வெடிக்கப்பட்டதாகவும் இவற்றின்மூலம் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு வெளிப்படையாக மீறப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், இன்று காலை 6 மணி வரையிலான 24 மணி நேரத்தில், டெல்லியில் ஒரு கன மீட்டருக்கு 228 மைக்ரோ கிராம் அளவில் மாசு பதிவாகி உள்ளதாக மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. உலக சுகாதார நிறுவனம் அனுமதித்துள்ள ஒரு கன அடிக்கு 15 மைக்ரோ கிராம் என்ற அளவுடன் ஒப்பிடும்போது இது 15.1 மடங்கு அதிகம்.
IQAir என்ற சுவிட்சர்லாந்து காற்றுத் தர தொழில்நுட்ப நிறுவனம் உலகின் மிக முக்கிய 120 மாநகரங்களின் காற்ற மாசு குறித்த தரவுகளை வெளியிட்டுள்ளது. அதில் இன்று காலை நிலவரம் பதிவாகி உள்ளது. அதன்படி, டெல்லியின் காற்றுத் தரக்குறியீடு 429 ஆக இருந்ததாகவும், இதன் மூலம் உலகில் மிகவும் மாசுபட்ட மாநகராக டெல்லி உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2-ம் இடத்தில் உள்ள லாகூரில் காற்றின் தரக்குறியீடு 260 ஆகவும், 3ம் இடத்தில் உள்ள கராச்சியில் தரக்குறியீடு 182 ஆகவும் பதிவாகி உள்ளது.
கடுமையான காற்று மாசு ஆரோக்கியமாக உள்ள மக்களிடம் பாதிப்பை ஏற்படுத்துவதாகவும், ஏற்கனவே நோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்களை மேலும் கடுமையாக பாதிப்படைச் செய்வதாகவும் மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. வாரியத்தின் தரவுகளின்படி, 51 முதல் 100 வரையிலான காற்றின் தரக் குறியீடு திருப்திகரமானது, 101-200 மிதமானது, 201-300 மோசம், 301-400 மிகவும் மோசம், 401-500 கடும் மோசம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.