கொழும்பு,
13-வது மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகளும் தங்களுக்குள் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும். ஏற்கனவே ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா ஆகிய 3 அணிகள் அரையிறுதி சுற்றுக்கு தகுதிபெற்றுவிட்டன.
இந்நிலையில், மகளிர் உலகக்கோப்பையில் இன்று நடைபெற்று வரும் 22வது லீக் ஆட்டத்தில் தென்னாப்பிரிக்கா , பாகிஸ்தான் அணிகள் மோதி வருகின்றன. இலங்கை தலைநகர் கொழும்புவில் நடைபெற்று வரும் அந்த ஆட்டத்திற்கான டாஸ் சுண்டப்பட்டது. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.
இதையடுத்து, தென்னாப்பிரிக்க அணியின் தொடக்க வீராங்கனைகளாக கேப்டன் லோரா, பிரிட்ஸ் களமிறங்கினர். பிரிட்ஸ் ரன் எதுவும் எடுக்காமல் (0 ரன்கள்) ஆட்டமிழந்து வெளியேறினார். இதையடுத்து களமிறங்கிய லுஸ் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அப்போது, ஆட்டத்தின் நடுவே மழை குறுக்கிட்டது. இதையடுத்து ஆட்டம் 40 ஓவர்களாக குறைக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து லுஸ் மற்றும் கேப்டன் லோரா அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். லுஸ் 59 பந்துகளில் 61 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். கேப்டன் லோரா 82 பந்துகளில் 90 ரன்கள் குவித்தார். இதையடுத்து களமிறங்கிய பிற வீராங்கனைகளும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அதன்படி, நடினி டி கிரெல் 16 பந்துகளில் 41 ரன்கள் குவித்தார். இறுதியில் தென்னாப்பிரிக்கா 40 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 312 ரன்கள் குவித்துள்ளது. அந்த அணியின் மரிசனி கெப் 43 பந்துகளில் 68 ரன்கள் குவித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளார். இதையடுத்து 40 ஓவர்களில் 313 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் வங்காளதேசம் களமிறங்க உள்ளது.