அமராவதி: சொத்துக்காக தந்தையின் சடலத்தை அடக்கம் செய்ய விடாமல் தடுக்கும் மகனால், 3 நாட்களாக தந்தையின் சடலம் வீட்டு வாசலிலேயே அனாதையாய் கிடக்கிறது.
ஆந்திர மாநிலம், பல்நாடு மாவட்டம், பழைய சொலசா கிராமத்தை சேர்ந்த விவசாயி ஆஞ்சநேயுலு (85). இவர் கூலி வேலை செய்து, 20 ஏக்கர் விவசாய நிலத்தை வாங்கி அதில் விவசாயம் செய்து வந்துள்ளார்.
கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர் ஆஞ்சநேயலுவின் மனைவி உடல்நலம் குன்றி மரணமடைந்தார். இவருக்கு நாகேஸ்வர ராவ், வெங்கடேஸ்வருலு என 2 மகன்கள் உள்ளனர். இதில் நாகேஸ்வர ராவ் காதலித்து திருமணம் செய்து கொண்டு, தெலங்கானா மாநிலத்தில் வசித்து வருகிறார். இளைய மகன் வெங்கடேஸ்வருலுவிடம்தான் பெற்றோர் வசித்து வந்தனர்.
தாய் இறந்த பின்னர், தந்தைக்கு மருத்துவம் உட்பட அனைத்தையும் இளைய மகனே செய்து வருகிறார். இந்நிலையில், உடல்நலம் குன்றி கடந்த 3 நாட்களுக்கு முன்னர், ஆஞ்சநேயுலு உயிரிழந்தார்.
இதுகுறித்து மூத்த மகன் நாகேஸ்வர ராவுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவரும் தனது குடும்பத்தாருடன் வந்தார். அதன் பின்னர், உற்றார், உறவினர்கள், நண்பர்கள், அக்கம்பக்கத்தார் என பலர் ஆஞ்சநேயுலுவுக்கு இறுதிச் சடங்குக்கு ஏற்பாடு செய்தனர். அப்போது பாடையில் ஏற்றிய தந்தையின் உடலை எடுக்க விடாமல் நாகேஸ்வர ராவ் தடுத்து நிறுத்தினார்.
எனக்கு சொத்தில் சரிபாதி கொடுத்து விட்டுத்தான் சடலத்தை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால், எத்தனை நாட்களானாலும் சரி சடலத்தை எடுக்க விட மாட்டேன் என கூறி வருகிறார். ஏற்கெனவே தாய் இறந்தபோது சொத்தில் 2 ஏக்கர் நிலம் கொடுத்து விட்டேன். பெற்றோரை கடைசிவரை நான்தான் பார்த்துக் கொண்டேன். ஆதலால், இனி ஒரு சல்லி காசு கூட நான் கொடுக்க மாட்டேன் என தம்பி வெங்கடேஸ்வருலுவும் கறாராக சொல்லி விட்டார்.
கிராமத்தினர், உற்றார், உறவினர்கள் எவ்வளவோ எடுத்து கூறியும் சடலத்தை எடுக்கவிடாத காரணத்திலால் ஆஞ்சநேயுலுவின் உடல் வீட்டு வாசலிலேயே வைக்கப்பட்டு உள்ளது. போலீஸாரும், ஊராட்சி மன்றத்தினரும் கூட இரு தரப்பினரிடம் பேசினர். சடலத்தை எடுக்கா விட்டால், பஞ்சாயத்தாரே அந்த சடலத்துக்கு இறுதி மரியாதை செலுத்தி அடக்கம் செய்து விடுவோம் என எச்சரித்தும் பலன் இல்லை.
யாருடைய சமரசத்துக்கும் மகன்கள் ஒப்புக்கொள்ளாததால் கடந்த 3 நாட்களாக தந்தை ஆஞ்சநேயுலுவின் சடலம் வீட்டு வாசலிலேயே வைக்கப்பட்டுள்ளது.