திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குச் செல்வதற்காக குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவை ஏற்றிச் சென்ற ஹெலிகாப்டர் இன்று (அக்டோபர் 22) காலை பத்தனம்திட்டா அருகே உள்ள ஹெலிபேடில் தரையிறங்கும் போது கான்க்ரீட் தளத்தில் டயர் சிக்கிக் கொண்டது. அதன்பின்னர் தீயணைப்புத் துறையினர் உதவியுடன் ஹெலிகாப்டர் மீட்கப்பட்டது.
குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு கேரளாவுக்கு நான்கு நாள் பயணமாக நேற்று புது டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் திருவனந்தபுரம் விமான நிலையம் வந்தடைந்தார். அவர் இன்று காலை சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு தரிசனம் செய்வதற்காக புறப்பட்டார். முன்னதாக, அவர் செல்லும் ஹெலிகாப்டர் நிலக்கலில் தரையிறங்க திட்டமிடப்பட்டது, ஆனால் அப்பகுதியில் நிலவும் மோசமான வானிலையைக் கருத்தில் கொண்டு, கடைசி நேரத்தில் திட்டம் மாற்றப்பட்டது.
பின்னர் பத்தனம்திட்டா அருகே உள்ள பிரதமம் பகுதியில் புதிதாக தயாரிக்கப்பட்ட இறங்குதளத்தில் குடியரசுத் தலைவர் முர்மு வந்த ஹெலிகாப்டர் காலை 9.05 மணியளவில் பாதுகாப்பாக தரையிறங்கியது. ஆனால் அவர் இறங்கிய சிறிது நேரத்திலேயே அதன் டயர்கள் புதிதாக போடப்பட்ட கான்க்ரீட்டில் சிக்கிக் கொண்டன. இருப்பினும், குடியரசுத் தலைவர் எந்த தாமதமும் இல்லாமல் சாலை வழியாக பம்பைக்கு தனது பயணத்தைத் தொடர்ந்தார்.
அதிகாரபூர்வ வட்டாரங்களின்படி, ஹெலிகாப்டர் வருவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பே பிரமதம் பகுதியில் உள்ள இறங்குதளத்தில் பணிகள் நிறைவடைந்திருந்தன. இதனால் ஹெலிகாப்டரின் டயர் சிக்கிக்கொண்டதாக சொல்லப்படுகிறது. பின்னர், சிக்கித் தவித்த ஹெலிகாப்டரை போலீஸார், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணியாளர்கள் மீட்டனர்.
இதைத் தொடர்ந்து, சாலை மார்க்கமாக பம்பை சென்ற திரவுபதி முர்மு அங்குள்ள சுற்றுலா மாளிகையில் சிறிது நேரம் ஓய்வெடுத்தார். பிறகு, தேவசம் போர்டின் மலையேறும் வாகனம் மூலம் அவர் கோயிலை அடைந்தார்.