புதுடெல்லி: அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தீபாவளி அன்று தனக்கு தொலைபேசியில் பேசி வாழ்த்து தெரிவித்ததை உறுதிப்படுத்திய பிரதமர் மோடி, அவருக்கு நன்றி தெரிவித்தார். இருப்பினும், ரஷ்ய எண்ணெய் விவகாரம், வரிகள் மற்றும் வர்த்தகம் போன்ற பிரச்சினைகள் குறித்து அவர் எதுவும் குறிப்பிடவில்லை.
இதுகுறித்து பிரதமர் மோடி வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘ அதிபர் ட்ரம்ப், உங்கள் தொலைபேசி அழைப்பு மற்றும் அன்பான தீபாவளி வாழ்த்துக்களுக்கு நன்றி. இந்த தீபத் திருநாளில், நமது இரண்டு பெரிய ஜனநாயக நாடுகளும் நம்பிக்கையுடன் உலகை ஒளிரச் செய்யட்டும், பயங்கரவாதத்தை அதன் அனைத்து வடிவங்களிலும் எதிர்த்து ஒற்றுமையாக நிற்கட்டும்’ என்று தெரிவித்தார்.
வர்த்தகம், வரிவிதிப்பு, எச்1பி விசா, ரஷ்யா எண்ணெய் கொள்முதல் உள்ளிட்ட பிரச்சினைகள் தொடர்பாக அமெரிக்க – இந்தியா உறவு மோசமான நிலையை அடைந்துள்ள நேரத்தில், இரு தலைவர்களுக்கும் இடையிலான இந்த பேச்சு முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறியுள்ளது.
முன்னதாக, அக்டோபர் 21 அன்று பிரதமர் மோடியுடன் பேசிய பின்னர் ட்ரம்ப் வெளியிட்ட சமூக வலைதளப் பதிவில், ‘நாங்கள் நிறைய விஷயங்களைப் பற்றி பேசினோம், பெரும்பாலும் வர்த்தக உலகம் பற்றி பேசினோம். அவர் ரஷ்யாவிலிருந்து இனி அதிகம் எண்ணெய் வாங்கப் போவதில்லை. என்னைப் போலவே அந்தப் போர் முடிவடைவதையே அவரும் காண விரும்புகிறார்’ என்று தெரிவித்தார்.