தென்னாப்பிரிக்கா ஏ அணிக்கு எதிரான அதிகாரப்பூர்வமற்ற டெஸ்ட் தொடருக்கான இந்திய ஏ அணியை, அஜித் அகர்கர் தலைமையிலான தேர்வு குழு நேற்று செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ளது. இங்கிலாந்து தொடருக்கு பிறகு, காயத்திலிருந்து மீண்டு வந்துள்ள ரிஷப் பந்த் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள நிலையில், அணியின் துணை கேப்டன் பொறுப்பில் அதிரடி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. விக்கெட் கீப்பர் வீரர் துருவ் ஜூரல் துணை கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டு, அவருக்கு பதிலாக தமிழகத்தை சேர்ந்த இளம் வீரர் சாய் சுதர்சன் புதிய துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இது பலருக்கும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
Add Zee News as a Preferred Source
துணை கேப்டன் பதவியை இழந்த துருவ் ஜூரல்
சமீபத்தில் ஆஸ்திரேலியா ஏ அணிக்கு எதிராக நடைபெற்ற தொடரில், இந்திய ஏ அணியின் துணை கேப்டனாக துருவ் ஜூரல் செயல்பட்டார். அந்த தொடரின் முதல் போட்டியில் ஷ்ரேயாஸ் ஐயருக்கு துணை கேப்டனாக இருந்த அவர், இரண்டாவது போட்டியில் கேப்டனாகவே அணியை வழிநடத்தினார். வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும் விக்கெட் கீப்பராக சிறப்பாக செயல்பட்டதால், அவர் துணை கேப்டன் பதவியில் நீடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தற்போது அவர் தலைமை பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டுள்ளது, எதிர்கால கேப்டன்சி திட்டங்களில் அவர் பரிசீலிக்கப்படவில்லை என்பதற்கான ஒரு முன்னோட்டமாக பார்க்கப்படுகிறது.
புதிய துணை கேப்டன் சாய் சுதர்சன்
குஜராத் டைட்டன்ஸ் அணியின் நட்சத்திர வீரரும், இந்திய டெஸ்ட் அணியின் தற்போதைய மூன்றாம் வரிசை பேட்ஸ்மேனுமான சாய் சுதர்சன், இந்த புதிய பொறுப்புக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ரிஷப் பந்தின் தலைமையில், இந்த அதிகாரப்பூர்வமற்ற டெஸ்ட் தொடரில் அவர் துணை கேப்டனாக செயல்படுவார். இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் அறிமுகமான சாய் சுதர்சன், வெஸ்ட் இண்டீஸ் தொடரில் தனது இடத்தை தக்கவைத்து கொண்டார். இந்த துணை கேப்டன் பொறுப்பு, அவரது தன்னம்பிக்கையை மேலும் அதிகரித்து, இந்திய அணியில் அவரது இடத்தை பலப்படுத்த உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தென்னாப்பிரிக்கா இந்திய பயணம்
தென்னாப்பிரிக்கா ஏ அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 2 நான்கு நாட்கள் கொண்ட டெஸ்ட் போட்டிகளிலும், 3 ஒருநாள் போட்டிகளிலும் விளையாட உள்ளது. முதல் டெஸ்ட் போட்டி அக்டோபர் 30 முதல் நவம்பர் 2 வரையிலும், இரண்டாவது டெஸ்ட் போட்டி நவம்பர் 6 முதல் 9 வரையிலும் பெங்களூருவில் உள்ள பிசிசிஐ-யின் சிறப்புப் பயிற்சி மையத்தில் நடைபெறுகிறது. அதை தொடர்ந்து, மூன்று ஒருநாள் போட்டிகளும் ராஜ்கோட்டில் நவம்பர் 13, 16 மற்றும் 19 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளன. இந்த தொடர், நவம்பர் 14-ம் தேதி தொடங்கும் இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா இடையேயான முக்கிய டெஸ்ட் தொடருக்கு முன்னோட்டமாக அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.
About the Author
RK Spark