பாட்னா: ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவ் ஜீவிகா தீதிகளுக்கு (மகளிர் சுய உதவி குழுவினர்) அளித்த வாக்குறுதிகளை பாஜக – ஐக்கிய ஜனதா தளம் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக் கட்சிகள் கடுமையாக சாடியுள்ளன. மேலும், இந்த அறிவிப்புகள் தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தாது என்றும் கூறியுள்ளார்.
செய்தியாளர் சந்திப்பில் பேசிய பிஹார் முன்னாள் துணை முதல்வர் தர்கிஷோர் பிரசாத், ” பிஹார் மக்கள் ஆர்ஜேடி மற்றும் மகாகட்பந்தன் கூட்டணியை நம்பவில்லை. அவர்கள் ஆட்சிக்கு வரக்கூடாது என்று முடிவு செய்துள்ளனர். எனவே தேஜஸ்வி யாதவின் அறிவிப்புகள் பிஹார் மக்களையோ அல்லது தேர்தலையோ பாதிக்கப் போவதில்லை.” என்றார்
பாஜக மூத்த தலைவர் சுதான்ஷு திரிவேதி, “பிஹார் மக்களிடம் தேஜஸ்வி கேலி செய்வதை நிறுத்த வேண்டும். பிஹாரில் நிதிஷ் குமார் அரசு ஆட்சிக்கு வந்த பிறகு, பெண்களுக்கு அதிகாரமளிப்பதற்கான பல திட்டங்கள் மாநிலத்தில் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. பெண்களுக்கான பல அரசுத் திட்டங்கள் எங்கள் 10 ஆண்டுகால சிந்தனைக்கு சான்றாகும்.
மகளிர்க்கு அதிகாரமளிப்பதற்காக, என்டிஏ மற்றும் நிதிஷ் குமார் ஒரு முறையான, நிலையான மற்றும் நடைமுறை சாத்தியமான அணுகுமுறையைக் கொண்டுள்ளனர். தேஜஸ்வி 10 லட்சம் வேலைகளை வழங்குவதாகக் கூறினார், ஆனால் அதன் உண்மையான அர்த்தம் அவர்கள் ரூ.10 லட்சத்திதுக்கு வேலை வழங்குவார்கள் என்பதாகும். அதாவது, முன்பு வேலைக்காக நிலத்தை எடுத்தது போல, இப்போது அவர்கள் வேலைக்காக வீடு மற்றும் சொத்தை எடுத்துக் கொள்வார்கள்” என்று கூறினார்.
தேஜஸ்வியின் வாக்குறுதிகளுக்கு எந்த மதிப்பும் இல்லை என்று மூத்த ஜேடியு தலைவர் கே.சி.தியாகி கூறினார். அவர், “தேஜஸ்வி யாதவ் அளிக்கும் அனைத்து வாக்குறுதிகள் மற்றும் அறிவிப்புகள்தான். பிஹார் அரசாங்கம் ஏற்கனவே அந்த வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றியுள்ளது” என்றார்
தேஜஸ்வி அளித்த வாக்குறுதி என்ன? – முன்னதாக, பிஹாரில் மகா கூட்டணி ஆட்சி அமைத்த பிறகு, சமூகநல திட்டங்களுக்கு அமைப்பாளர்களாகப் பணிபுரியும் ஜீவிகா தீதிக்கள் ( மகளிர் சுய உதவி குழுவினர்) அரசு ஊழியர்களாக நிரந்தரப் படுத்தப்படுவார்கள் என்றும், அவர்களின் மாத ஊதியம் ரூ.30 ஆயிரமாக உயர்த்தப்படும் என்றும் தேஜஸ்வி யாதவ் அறிவித்தார்.