பாட்னா: பிஹார் சட்டப்பேரவை தேர்தலில் ராஷ்ட்ரிய ஜனதா தளம் தலைவர் தேஜஸ்வி யாதவ் மகா கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக இருப்பார் என சிபிஐ (எம்எல்) லிபரேஷன் பொதுச் செயலாளர் தீபங்கர் பட்டாச்சார்யா உறுதிப்படுத்தினார்.
பாட்னாவில் செய்தி நிறுவனம் ஒன்றிடம் பேசிய தீபங்கர் பட்டாச்சார்யா, “விரைவில் முதல்வர் வேட்பாளர் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிடப்படும். இண்டியா கூட்டணி பெரும்பான்மையைப் பெறும்போது, தேஜஸ்வி யாதவ் முதல்வராக வருவார் என்பதை மாநில மக்கள் அறிவார்கள். அதில் எந்த குழப்பமும் இல்லை. நாளை எங்கள் கூட்டணியின் பத்திரிகையாளர் சந்திப்பில் அவரது பெயர் அறிவிக்கப்படும் என்று நம்புகிறேன்.
நிதிஷ் குமார் பிஹார் முதல்வராகத் தொடர்வார் என்று தேசிய ஜனநாயகக் கூட்டணி கூறலாம். ஆனால் இந்த முறை அவர் அந்தப் பதவியை வகிக்க மாட்டார்” என்று கூறினார்.
பிஹார் தேர்தலில் ராஷ்டிரிய ஜனதா தளம் தலைமையிலான மகா கூட்டணியில் அக்கட்சி 143 தொகுதிகளிலும், காங்கிரஸ் கட்சி 60 தொகுதிகளிலும், தீபங்கர் பட்டாச்சார்யா தலைமையிலான இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) 20 தொகுதிகளிலும், முகேஷ் சஹானியின் விகாஷீல் இன்சான் கட்சி 14 தொகுதிகளிலும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, சிபிஎம், ஐஐபி கட்சி ஆகியவை மற்ற தொகுதிகளிலும் போட்டியிடுகிறது.
தேசிய ஜனநாயக கூட்டணியில் பாரதிய ஜனதா கட்சி, ஐக்கிய ஜனதா தளம் ஆகியவை தலா 101 தொகுதிகளிலும், லோக் ஜனசக்தி கட்சி (ராம் விலாஸ்) 28 இடங்களிலும், இந்துஸ்தானி அவாம் மோர்ச்சா மற்றும் ராஷ்ட்ரிய லோக் மோர்ச்சா ஆகியவை தலா 6 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன.
பிஹார் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நவம்பர் 6 மற்றும் 11 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதே நேரத்தில் தேர்தல் முடிவுகள் நவம்பர் 14 ஆம் தேதி அறிவிக்கப்படும்.