“நெல் மூட்டைகள் தேக்கத்துக்கு மத்திய அரசு தான் காரணம்” – அமைச்சர் சக்கரபாணி

தஞ்சாவூர் அருகே உள்ள பிள்ளையார்பட்டி நெல் சேமிப்பு கிடங்கு, அருள்மொழிப்பேட்டை நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி ஆய்வு செய்தார். பிறகு அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: “தமிழகத்தில், கடந்த காலத்தில் குறுவை சாகுபடி 3.18 லட்சம் ஹெக்டேராக இருந்த நிலையில், தற்போது 6.18 லட்சம் ஹெக்டேராக உயர்ந்துள்ளது. மாநில அளவில் நிகழ்கொள்முதல் பருவத்தில் 9 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 3.67 லட்சம் டன் மட்டுமே கொள்முதல் செய்யப்பட்டது. இந்தாண்டு நெல் விளைச்சல் அதிகமாக இருப்பதால், கிட்டத்தட்ட மூன்று மடங்கு கூடுதலாக கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

அமைச்சர் சக்கரபாணி ஆய்வு

தினமும் 1,250 லாரிகளில், வெளி மாவட்டங்களுக்கு நெல் மூட்டைகள் அனுப்பப்படுகின்றன. ரயில் வேகன்கள் மூலமும் நெல் மூட்டைகள் அனுப்பி வைக்கப்படுகின்றன. 14 லட்சம் சாக்குகள் கையிருப்பு உள்ளது. இன்னும் 66 லட்சம் சாக்குகள் வரவேண்டியுள்ளது. சணல் இருப்பும் போதிய அளவில் கையிருப்பு உள்ளது. மூட்டைகளைக் கொண்டு செல்வதற்கான லாரிகள் இயக்கத்தில் சுணக்கம் இல்லை.

டெல்டா மாவட்டங்களில் மொத்தம் நான்கு ஆயிரம் லாரிகள் நெல் மூட்டைகளைக் கொள்முதல் நிலையத்திலிருந்து கிடங்குகளுக்கும், வேறு மாவட்டங்களுக்கு கொண்டு செல்ல பயன்படுத்தப்படுகின்றன. கூடுதலாக லாரிகள் தேவைப்பட்டால் வாடகைக்கு ஏற்பாடு செய்ய உள்ளோம்.

கடந்த அ.தி.மு.க ஆட்சியில் ஒரு நாளைக்கு 800 மூட்டைகள் கொள்முதல் செய்யப்பட்டது. 2020ம் ஆண்டில் தான் 1,000 மூட்டைகளாக உயர்த்தினர். தமிழக முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு தான் ஒரு நாளைக்கு 800லிருந்து ஆயிரம் மூட்டைகள் என்பதை நிரந்தர உத்தரவாக பிறப்பித்தார். 100 கிலோ அரிசியில் ஒரு கிலோ செறிவூட்டப்பட்ட அரிசி கலக்க வேண்டும். இதற்கான விதிமுறைகளை மாற்றி 2025 ஜூலை 29ம் தேதி, மத்திய அரசிடம் இருந்து தமிழக அரசுக்கு கடிதம் வந்தது. பிறகு, டெண்டர் விடப்பட்டு ஐந்து ஒப்பந்தக்காரர்கள் மூலம் விவசாயிகளிடம் பெறப்பட்ட 34 ஆயிரம் டன் நெல் வாங்கிய நிலையில், அவற்றில் 100 கிலோ அரிசிக்கு ஒரு கிலோ வீதம் செறிவூட்டப்பட்ட அரிசி கலக்க வேண்டியுள்ளது. இதற்காக அந்த ஒப்பந்ததாரர்கள் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு டெல்லி அலுவலகத்துக்கு அரிசி தொடர்பாக பதிவேற்றம் செய்துள்ளனர்.

நெல் மூட்டைகள்

டெல்லியில் உள்ள குவாலிட்டி கண்ட்ரோல் அதிகாரிகள் அதனை கணினியில் ஆய்வு செய்து, அவர்கள் அறிக்கை தந்த பிறகு தான், செறிவூட்டப்பட்ட அரிசி கலக்க முடியும். இதுவரை மத்திய அரசிடம் இருந்து அந்த அனுமதி வரவில்லை. அதன் பிறகு தான் அரிசி ஆலைகளும் அதிகளவில் அரவையை மேற்கொள்ள முடியும்.

விவசாயிகளிடம் பெறப்பட்ட நெல்லில், அரிசி அரவையின் போது கலக்கப்பட வேண்டிய செரியூட்டப்பட்ட அரிசி வழங்க, மத்திய அரசு அனுமதி அளிப்பதில் ஏற்பட்ட காலதாமதம் தான் நெல் மூட்டைகள் தேங்க காரணம். இது தெரியாமல் எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி, ஆக்ஸ்ட் மாதமே அனுமதி வந்து விட்டதாக சொல்லுகிறார். அப்படி வந்து இருந்தால், தேதியை சொல்லட்டும், அவர் ஏதோஏதோ பேசி வருகிறார்” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.