ஜெய்ப்பூர்: சுதந்திர தினம், குடியரசு தினம், தீபாவளி, ரம்ஜான் உள்ளிட்ட நாட்களில் இந்திய – பாகிஸ்தான் எல்லையில் இரு நாட்டு வீரர்களும் பல ஆண்டுகளாக இனிப்புகளை பரிமாறிக் கொள்வது வழக்கம். என்றாலும் எல்லையில் பதற்றம் ஏற்பட்டால் இந்த இனிப்பு பரிமாற்றம் ரத்து செய்யப்படுகிறது.
இந்த ஆண்டு ஏப்ரல் 22-ம் தேதி, ஜம்மு காஷ்மீரில் பஹல்காமில் பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து பாகிஸ்தானுக்கு எதிராக ராணுவ நடவடிக்கை உள்ளிட்ட கடுமையான நிலைப்பாட்டை பிரதமர் நரேந்திர மோடி அரசு எடுத்தது.
கடந்த ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தில் எல்லையில் இனிப்பு பரிமாற்றம் நிறுத்தப்பட்டது. இதன் தொடர்ச்சியாக தீபாவளி பண்டிகை நாளிலும் இனிப்பு பரிமாற்றம் தவிர்க்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், “எல்லை தாண்டிய தீவிரவாதம் தொடரும் வரை, இதுபோன்ற நல்லெண்ண நடவடிக்கைகள் நிறுத்தி வைக்கப்படும் என்ற தெளிவான தகவலை பாகிஸ்தானுக்கு இந்தியா வழங்கியுள்ளது” என்றார்.