மாரி செல்வராஜ் இயக்கத்தில், துருவ் விக்ரம், ரஜிஷா விஜயன், அனுபமா பரமேஸ்வரன் நடிப்பில், இசையமைப்பாளர் நிவாஸ் கே பிரசன்னா இசையில் வெளியாகியிருக்கும் படம் ‘பைசன்’.
மக்களிடையே இந்தப் படம் நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறது. இந்நிலையில் ‘பைசன்’ படத்திற்கான தெலுங்கு செய்தியாளர்கள் சந்திப்பின்போது துருவ்விடம், “தமிழ் சினிமாவில் மட்டும் ஏன் சாதி ஒடுக்குமுறை சம்பந்தமான படங்கள் நிறைய வருகிறது?” என்று செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பியிருக்கிறார்.

அதற்குப் பதிலளித்த துருவ் விக்ரம், “ஒவ்வொரு படைப்பாளருக்கும் தமது சுய சிந்தனைகளையும், வாழ்க்கை அனுபவங்களையும் வெளிப்படுத்தும் சுதந்திரம் இருக்கிறது.
மாரி செல்வராஜ் தென் தமிழகத்தைச் சேர்ந்தவர். அவர் தன் வாழ்க்கை போராட்டங்களின் வழியே படங்களை உருவாக்குகிறார்.
இன்னும் இந்தியாவின் பல பகுதிகளில், குறிப்பாக தென் தமிழகத்தில் இப்படிப்பட்ட சம்பவங்கள் நடைபெற்றுக்கொண்டுதான் இருக்கின்றன. இப்படிப்பட்ட கதைகள் சொல்லப்பட வேண்டும்.

சினிமா என்பது மக்களை விழிப்புணர்வு அடையச் செய்ய ஒரு சரியான கருவி. இந்த மாதிரி கதைகள் தமிழ் சினிமாவில் வெளியாவது மகிழ்ச்சி அளிக்கிறது” என்று கூறியிருக்கிறார்.