கல்லூரி படிக்கும் சென்னை மாணவ, மாணவிகளுக்கான முக்கிய அறிவிப்பு

Chennai : தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தில் சென்னை மாவட்டத்தில் வசிக்கும் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்பினைச் சார்ந்த மாணவ, மாணவியர்கள் கல்விக் கடன் விண்ணப்பித்து பயன் பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் கேட்டுக்கொண்டுள்ளார். தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் (டாப்செட்கோ) மூலம் 100 பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், மிகப்பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் சீர்மரபினர் மாணவ, மாணவியர்களுக்கு வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில் உயர்கல்வி மேற்கொள்வதற்காக கடன் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 

Add Zee News as a Preferred Source

அதன்படி கடன் பெறுவதற்கான தகுதி மற்றும் சமர்ப்பிக்கப்பட வேண்டிய சான்றுகள்

1.விண்ணப்பதாரர் மேற்குறிப்பிட்ட பிற்படுத்தப்பட்ட வகுப்பினர். மிகப்பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் சீர்மரபினர் வகுப்பினராக இருத்தல் வேணடும். (சாதிச்சான்றிதழ்)

2.குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3.00 லட்சத்திற்கு மிகாமல் இருத்தல் வேண்டும் (கிராமம் / நகர்ப்புறம் பாகுபாடின்றி) வருமானச்சான்றிதழ்
அ. மாநில அரசின் வருமானச்சான்றிதழ் வழங்கும் தகுதிவாய்ந்த அதிகாரியால் வழங்கப்பட்டிருக்க வேண்டும் (அல்லது)
ஆ. வர்த்தமானி பதிவு பெற்ற அதிகாரியால் (Gazetted officer) சான்றளிக்கப்பட்ட சுய சான்றளிக்கப்பட்ட ஆண்டு குடும்ப வருமானச்சான்றிதழ்.

3.விண்ணப்பதாரர் மருத்துவம், பல் மருத்துவம், பொறியியல் படிப்புகள், பிஎச்டி, முதுகலை பட்டப்படிப்புகள் போன்றவற்றில் முதுகலைப் படிப்புகளுக்கு, பொருத்தமான அதிகாரியால் அங்கீகரிக்கப்பட்ட தரப்படுத்தப்பட்ட தேர்வு மதிப்பெண்கள் (SAT, GMAT, GRE அல்லது பாடநெறியில் சேருவதற்குப் பொருந்தக் கூடிய பிற தொடர்புடைய மதிப்பெண்கள் போன்றவை) மூலம் சேர்க்கையை ஏற்றுக்கொள்ளும் கல்லூரிகளில் சேர்க்கை பெற்றிருக்க வேண்டும். (சம்மந்தப்பட்ட நிறுவ னத்திலிருந்து சேர்க்கை /சலுகை கடித்தை பெற்றிருக்க வேண்டும்) (IELTS அல்லது TOEFL) போன்ற முற்றிலும் மொழித்திறன் தேர்வை அடிப்படையாகக் கொண்டதல்ல).

கடன் தொகை

ஒரு மாணவருக்கு அதிகபட்சக் கடன் வரம்பு ரூ.15,00,000/-க்கு உட்பட்ட பாடத்திட்டத்தின் செலவின் 85%, புதுதில்லியின் தேசிய பிற்படுத்தப்பட்டோர் நிதி மற்றும் வளர்ச்சிக் கழகத்தின் மூலமும் மீதமுள்ள 15% அதாவது ரூ.2.25 லட்சம் தமிழ்நாடு அரசால் விண்ணப்பதாரர்களுக்கு வழங்கப்படும்.

நிபந்தனைகள்:

1. கடன் தொகையானது சேர்க்கைக் கட்டணம், கல்விக் கட்டணம், புத்தகங்கள், எழுதுபொருட்கள், தேர்வு, ஆய்வகம் மற்றும் நூலகக் கட்டணம், உண்டி மற்றும் உறையுள் கட்டணங்கள் மற்றும் கடன் காலத்திற்கான காப்பீட்டு கட்டணங்கள் உள்ளடக்கியது.

2. கல்வி நிறுவனத்திற்கு செலுத்தப்பட்ட கட்டணத்தின் அடிப்படையில் கடன் தொகை விடுவிக்கப்படும் (செமஸ்டர் அல்லது அரையாண்டு அடிப்படையில்),
3. முந்தைய ஆண்டுகளில் தேர்ச்சி விகிதத்தின் அடிப்படையில் மட்டுமே தொடர்ந்து கட்டணத் தவணைகள் விடுவிக்கப்படும்.
4. வயது வரம்பு 21 முதல் 40 வயது வரை.
5. வட்டி விகிதம்: ஆண்டிற்கு 8%. 

கடனை மீள பெறுவதற்கான கால அவகாசம்:

கடன்கள் வழங்கப்படும் பாடத்தின் வகை மற்றும் காலத்தைப் பொருட்படுத்தாமல் மாணவர்களிடமிருந்து மீளப்பெறுவதற்கான தடைக்காலம் 5 ஆண்டுகளாக ஒரே மாதிரியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

கடனை திரும்ப செலுத்தும் காலம்:

மாணவர்களிடமிருந்து அதிகபட்சமாக மீட்கும் காலம் 10 ஆண்டுகள் ஆகும். அதாவது 5 வருட தடைகாலம் உட்பட அதாவது கடன் வழங்கப்பட்ட 10 ஆண்டுகளுக்குள் கடனை முழுவதுமாக திருப்பி செலுத்தப்பட வேண்டும்.

முன்கூட்டியே செலுத்தப்படும் கடன்:

கடனைத் திருப்பிச்செலுத்தத் தொடங்கிய பிறகு, எப்போது வேண்டுமானாலும் கடனைத் திருப்பிச் செலுத்தலாம். இதற்கான முன் கட்டணம் எதுவும் செலுத்த தேவையில்லை. விண்ணப்பப்படிவம் டாப்செட்கோ இணையதள முகவரியில் www.tabcedco.tn.gov.h பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள் கடன் விண்ணப்பப் படிவங்களை பூர்த்தி செய்து வங்கி கோரும் ஆவண நகல்களுடன் சம்மந்தப்பட்ட மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலகம், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அலுவலகம் மற்றும் கூட்டுறவு வங்கிகளில் சமர்ப்பிக்க வேண்டும்.

எனவே, சென்னை மாவட்டத்தில் வசிக்கும் பிற்படுத்தப்பட்டோர். மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்பினைச் சார்ந்த மாணவ, மாணவியர்கள் கல்விக் கடன் விண்ணப்பித்து பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.