சினிமாவை விஞ்சிய கொள்ளை: பிரான்ஸ் மியூசியத்தில் 4 நிமிடத்தில் கைவரிசை – நடந்தது என்ன?

பிரான்ஸ் நாட்டின் பிரபலமான லூவர் அருங்காட்சியகத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த கொள்ளைச் சம்பவம் சர்வதேச கவனத்தை ஈர்த்துள்ளது. வங்கிக் கொள்ளை, அருங்காட்சியக கொள்ளை போன்ற ‘ஹெய்ஸ்ட்’ கதைகள் ஹாலிவுட் தொடங்கி கோலிவுட் வரை பிரபலம்தான். அப்படியொரு படத்தை விறுவிறுப்பாக எடுப்பதற்கான கதைக் களத்தை பிரான்ஸின் லூவர் அருங்காட்சியகத்தில் இந்திய நேரப்படி கடந்த 19-ம் தேதி காலை 7.30 மணிக்கு நடந்த கொள்ளைச் சம்பவம் கொண்டுள்ளது. இந்தக் கொள்ளைச் சம்பவம் பற்றி சற்று விரிவாகப் பார்ப்போம்.

4 நிமிடங்களில் நடந்த கொள்ளை: பிரான்ஸின் பாரிஸ் நகரில் பரபரப்பான பகுதியில் அமைந்துள்ளது லூவர் அருங்காட்சியம் (Louvre Museum). இங்கு கடந்த ஞாயிறு அன்று நுழைந்த கொள்ளையர்கள் வெறும் 4 நிமிடங்களில் அங்கிருந்த விலைமதிப்பற்ற மாமன்னன் நெப்போலியனின் 8 நகைகளைக் கொள்ளையடித்தனர். வழக்கமாக இந்த அருங்காட்சியகத்தை பார்வையாளர்களுக்காக காலை 9 மணிக்கு திறப்பார்கள். அதன்படி ஞாயிறு ன்றும் திறக்கப்பட்டது. அடுத்த அரை மணி நேரத்தில் கொள்ளைச் சம்பவம் நடந்து முடிந்திருந்தது.

அருங்காட்சியகத்தின் 2-வது தளத்தில் உள்ள அப்பல்லோ கேலரியில் தான் நெப்போலியனின் அந்த விலைமதிப்பற்ற நகைகள் காட்சிப் படுத்தப்பட்டிருந்தன. இரண்டாவது தளத்தை அடைய ட்ரக்கில் பொருத்தப்பட்டிருந்த ஏணியைப் பயன்படுத்தி கொள்ளையர்கள் உள்ளே சென்றுள்ளனர். டிஸ்க் கட்டர் எனப்படும் மரம் அறுவை இயந்திரத்தைப் பயன்படுத்தி ஜன்னல் சட்டத்தை அறுத்து உள்ளே சென்றுள்ளனர். அங்கிருந்து 8 நகைகளைக் கொள்ளையடித்தனர். கூடவே 3-வது நெப்போலியன் மன்னரின் மனைவி பேரரசி யூஜினின் கிரீடத்தையும் திருடியுள்ளனர். ஆனால், அந்தக் கிரீடம் அருங்காட்சியகத்துக்கு அருகிலிருந்த இடத்திலேயே மீட்கப்பட்டது.

4 பேர் கொண்ட கும்பல் இந்தக் கொள்ளையில் ஈடுபட்டுள்ளது. நன்கு திட்டமிட்டு துணிச்சலாக காலை வேளையில் இந்தக் கொள்ளையில் கொள்ளையர்கள் ஈடுபட்டுள்ளதாக பிரான்ஸ் நாட்டு உள்துறை அமைச்சர் கூறினார். இன்னும் அந்தக் கொள்ளைக் கும்பல் பிடிபடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

லூவர் அருங்காட்சியகம் 200 ஆண்டுகளாக பிரான்ஸ் மன்னர்களின் அரண்மனையாக இருந்தது. 1793-ல் பிரெஞ்சு புரட்சியின்போதுதான் அந்த மாளிகை அருங்காட்சியகமாக மாற்றப்பட்டது. ஆனால், அப்போதிருந்தே அங்கே அவ்வப்போது கொள்ளைச் சம்பவங்கள் நடந்த வரலாறு உள்ளது.

மோனாலிசா திருட்டும் மீட்பும்: 1911-ம் ஆண்டு ஆகஸ்ட் 21-ல் லியானார்டோ டா வின்சியின் பிரபல படைப்பான மோனோலிசா ஓவியம் திருடப்பட்டது. அந்த ஓவியம் 1797 முதல் லூவர் அருங்காட்சியகத்தில் இருந்தாலும் கூட அது திருடுபோய் மீட்கப்பட்ட பின்னர்தான் அது உலகப் புகழ் பெற்றது என்ற சுவாரஸ்ய வரலாறும் உண்டு.

அந்த ஓவியத்தைத் திருடியவர் இத்தாலி நாட்டிலிருந்து குடியேறிய 29 வயது இளைஞர் வின்சென்ஸோ பெருகியா என்பதும், அவர் அதே அருங்காட்சியகத்தில் வேலை செய்தவர் என்பதும் பின்னாளில் தெரியவந்தது. அருங்காட்சியகத்துக்குள் பதுங்கிக் கொண்ட அந்த இளைஞர் எவ்வித சந்தேகமும் ஏற்படாத வகையில் சட்டகத்தை உடைத்து ஓவியத்தை திருடி அதை ஒரு வெள்ளைத் துணியில் அந்த ஓவியத்தைச் சுற்றி அதை தனது ஆடைக்குள் மறைத்து எடுத்துச் சென்றுள்ளார்.

கொள்ளையர்கள் நுழைந்த பகுதி கருப்புத் துணியால் மூடிவைக்கப்பட்டுள்ளது.

ஓவியம் திருடப்பட்டது ஒரு நாளைக்குப் பின்னர்தான் தெரியவே வந்துள்ளது. இது இன்னொரு சுவாரஸ்யம் என்னவென்றால் இந்தத் திருட்டு தொடர்பாக இளம் ஓவியரான பாப்லோ பிகாஸோவிடம் போலீஸார் விசாரித்துள்ளனர். விசாரணையில் ஒரு திருப்பம் இருந்தது. மோனோ லிசா ஓவியத்தை பிகாஸோ திருடவில்லை என்பது உறுதியானாலும் கூட அவர் லூவர் அருங்காட்சியகத்தில் திருடப்பட்ட ஐபீரியன் சிலைகள் இரண்டினை வாங்கி வைத்திருந்துள்ளார். விசாரணையின்போது பிகாஸோ அதை மீண்டும் அருங்காட்சியகத்திடம் ஒப்படைத்துள்ளார்.

விசாரணைகள் பல ஆண்டுகள் நீண்டு கொண்டிருக்க, 1797-ல் காணாமல் போன மோனோ லிசா படம் இத்தாலியில் 1913-ல் மீட்கப்பட்டது. அதனைத் திருடிய இளைஞர் இத்தாலியில் அதை விற்பனை செய்ய முயற்சித்தபோது கையும் களவுமாக பிடிபட்டார்.

இதேபோல், 1940-ல் இரண்டாம் உலகப் போரின்போது நாஜிப் படையினர் பிரான்ஸை கைப்பற்றினர். அப்போது லூவர் அருங்காட்சியகத்தின் ஒரு பகுதியையே அவர்கள் கொள்ளையடித்ததாக வரலாற்றுத் தரவுகள் உள்ளன. இவற்றில் பெரும்பாலனவை பிரான்ஸிடம் 2018-ல் ஒப்படைக்கப்பட்டன. அவை தற்போது மீண்டும் அருங்காட்சியகத்தில் மிளிர்கின்றன.

1960 முதல் 1990 வரை பல கட்டங்களில் லூவர் அருங்காட்சியப் பொருட்கள் திருடப்பட்டன. சில மீட்கப்பட்டன. குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமானால், 1966-ல் அமெரிக்காவின் ரிச்மாண்ட் அருங்காட்சியகத்தில் காட்சிப் படுத்த லூவரில் இருந்து அனுப்பப்பட்ட அரிய கைவினை நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன. அமெரிக்காவிலிருந்து மீண்டும் பிரான்ஸுக்கு அனுப்பப்பட்டபோது ஜான் எஃப் கென்னடி விமான நிலையத்தில் கொள்ளையடிக்கப்பட்டன. உடனடியாக மீட்கவும்பட்டன.

இவ்வாறாக, லூவர் அருங்காட்சியகத்தில் திருட்டு புதிதல்ல என்றாலும் இந்த முறை நடந்தது மிகவும் வித்தியாசமனாதகப் பார்க்கப்படுகிறது.

ஏன் வித்தியாசமானது? – அமெரிக்காவைச் சேர்ந்த வரலாற்று ஆய்வாளர் நோவா சார்னி கூறுகையில், “லூவர் அருங்காட்சியகத்தில் பலமுறை திருட்டு நடந்துள்ளது. பெரும்பாலும் ஓவியங்கள் தான் குறிவைக்கப்படும். ஆனால், இந்த முறை நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. அவற்றை கொள்ளையர்கள் அவர்கள் கைகளில் கிடைத்த அரை மணி நேரத்திலேயே பகுதி பகுதியாக சிதைத்திருப்பார்கள். ஒவ்வொரு பகுதியுமே மிக உயர்ந்த விலைக்கு அவர்களால் விற்பனை செய்ய முடியும். அந்த நகைகளின் வரலாறு, அது சுமந்து நிற்கும் கலாச்சாரம் பற்றியெல்லாம் அவர்கள் யோசிக்க மாட்டார்கள். அதனால் அவர்கள் அதை சிதைக்கவே அதிக வாய்ப்பு. சிதைக்கப்பட்ட அந்த நகைகளை மீண்டும் கண்டுபிடிப்பது என்பது மிகப் பெரிய சவால். உண்மையைச் சொல்ல வேண்டுமானால் அசாத்தியமானதும் கூட.” என்கிறார்.

சபிக்கப்பட்ட வைரம் – இத்தனை களேபரங்களுக்கு இடையேயும் கொள்ளையர்கள் அவர்கள் கொள்ளையில் ஈடுபட்ட தளத்தில் இருந்த விலைமதிப்பற்ற ஒரு வைரத்தை மட்டும் எடுத்துச் செல்லவில்லை. அந்த வைரத்துக்கும் இந்தியாவுக்கும் ஒரு தொடர்பு இருக்கிறது. தி ரீஜன்ட் டயமண்ட் (Regent Diamond) எனப்படும் இந்த வைரம் 17-ம் நூற்றாண்டில் இந்தியாவில் கிருஷ்ணா நதிக்கரையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

வரலாற்றுத் தரவுகளின்படி முகலாயப் பேரரசர் அவுரங்கசீப்பின் பிடியில் இருந்த ஓர் அடிமையால் அந்த வைரம் தோண்டி எடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. அந்த அடிமை அதனை தன் காலில் ஒரு புண் இருப்பதாகக் கூறி அதற்குள் அதை மறைத்து வைத்ததாகவும், அதை ஓர் ஆங்கிலேயே கப்பல் கேப்டனிடம் விற்க முயன்றபோது அவர் அந்த அடிமையைக் கொன்றுவிட்டு அந்த வைரத்தை அபகரித்து ஜாம்சந்த் என்ற வர்த்தகரிடம் விற்பனை செய்ததாகவும் சொல்லப்படுகிறது.

அதிலிருந்து இந்த வைரம் பல்வேறு கைகள் மாறியுள்ளது. எங்கெல்லாம் செல்கிறதோ அங்கெல்லாம் ரத்தமும், உயிர்ப்பலியும் நேர்ந்துள்ளது. இதனாலேயே இது சபிக்கப்பட்ட வைரம் என்ற அடைமொழியைப் பெற்றது.

இந்தியாவிலிருந்து லண்டன் சென்று அங்கிருந்து 1801-ல் பிரஞ்சு அரசர் நெப்போலியன் போனபார்ட்டேவிடம் சென்றுள்ளது. அதை அவர் அவருடைய வாளில் பதித்தார். நெப்போலியன் சரிவுக்குப் பின்னர் அதை அவரது மனைவி மேரி லூயி வியன்னா எடுத்துச் சென்றார். பின்னர் அது மீண்டும் பிரான்ஸ் கொண்டு வரப்பட்டு மன்னர்கள் லூயி 18, சார்லஸ் 10, நெப்போலியன் 3 ஆகியோரின் மகுடங்களை அலங்கரித்தது.

1887-ம் ஆண்டு முதல் ரீஜன்ட் வைரம் லூவர் அருங்காட்சியகத்தில், பிரஞ்சு பேரரசி நெப்போலியன் 3-வது மன்னரின் மனைவி யூஜினின் கிரீடத்தில் வைத்து பாதுகாக்கப்படுகிறது.

இப்போது நடந்த கொள்ளையில் கொள்ளையர்கள், யூஜினின் கிரீடத்தை மட்டும் அருங்காட்சியகம் அருகேயே விட்டுச் சென்றுள்ளனர். அது உடைந்துள்ளது. விலைமதிப்பற்ற வைரமாக இருந்தாலும் கூட அதன் மீதான சாபத்தால் கொள்ளையர்கள் அதை விட்டுச் சென்றதாகத் தெரிகிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.