பிஹார் தேர்தல் | இண்டியா கூட்டணி முதல்வர் வேட்பாளராக தேஜஸ்வி யாதவ் அறிவிப்பு

பாட்னா: பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் இண்டியா கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக தேஜஸ்வி யாதவ் அறிவிக்கப்பட்டுள்ளார். காங்கிரஸ் மூத்த தலைவர் அசோக் கெலாட் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

பிஹாரில் மொத்தமுள்ள 243 தொகுதிகளுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் நவம்பர் 6 மற்றும் 11 ஆகிய இரு தேதிகளில் நடைபெற உள்ளது. வாக்குப்பதிவுக்கான நாட்கள் நெருங்கியுள்ள நிலையில் அங்கு தேர்தல் பிரச்சாரம் தீவிரமடைந்துள்ளது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கட்டணி முதல்வர் நிதிஷ் குமார் தலைமையில் தேர்தலை எதிர்கொள்கிறது.

அதேநேரத்தில், இண்டியா கூட்டணி (பிஹாரில் மகாகட்பந்தன்) ராஷ்ட்ரிய ஜனதா தளம் தலைமையில் தேர்தலை எதிர்கொண்டாலும் முதல்வர் வேட்பாளர் குறித்த அறிவிப்பை அக்கூட்டணி வெளியிடாதது அதற்கு ஒரு பின்னடைவாகக் கருதப்பட்டது. தேஜஸ்வி யாதவை முதல்வர் வேட்பாளராக அறிவிக்க ராகுல் காந்தி விருபாததே இதற்குக் காரணம் என கூறப்பட்டது.

இந்நிலையில், தலைநகர் பாட்னாவில் நடைபெற்ற இண்டியா கூட்டணியின் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில், தேஜஸ்வி யாதவ், காங்கிரஸ் மூத்த தலைவர் அசோக் கெலாட், இண்டியா கூட்டணியில் புதிதாக இணைந்துள்ள விஐபி கட்சியின் தலைவர் முகேஷ் சஹானி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

செய்தியாளர்களிடம் பேசிய அசோக் கெலாட், “இந்த தேர்தலில் முதல்வர் வேட்பாளராக தேஜஸ்வி யாதவை நாங்கள் ஆதரிக்கிறோம். இங்கே அமர்ந்திருக்கும் நாங்கள் அனைவரும் இணைந்து இந்த முடிவை எடுத்துள்ளோம். அதேபோல், கூட்டணியின் துணை முதல்வர் வேட்பாளராக முகேஷ் சஹானி அறிவிக்கப்படுகிறார்.” என தெரிவித்தார்.

இதையடுத்துப் பேசிய தேஜஸ்வி யாதவ், “நான் முதல்வராக வேண்டும் என்பதற்காக அல்ல, பிஹாரில் மாற்றத்தை உருவாக்கவே நாங்கள் விரும்புகிறோம். அதனால்தான், நாங்கள் ஒன்றாக இருக்கிறோம். என் மீது நம்பிக்கை வைத்ததற்காக மகாகட்பந்தனின் அனைத்து உறுப்பினர்களுக்கும் நன்றி. உங்கள் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப நடந்து கொள்ள அனைத்தையும் செய்வேன். தற்போது ஆட்சியில் உள்ள 20 ஆண்டு கால அரசாங்கத்தை நாங்கள் ஒன்றிணைந்து முடிவுக்குக் கொண்டு வருவோம்.

எங்கள் கூட்டணி சார்பில் நாங்கள் அனைவரும் இணைந்து செய்தியாளர் சந்திப்பை நடத்தி உள்ளோம். நான் முதல்வர் வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளேன். ஆனால், எதிர்தரப்பின் நிலை என்ன? அங்கே நிதிஷ் குமாருக்கு அநீதி இழைக்கப்படுகிறது. கூட்டாக அவர்கள் பத்திரிகையாளர்களைச் சந்திக்கவில்லை.

அந்த கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் யார் என்பதை நான் கேட்க விரும்புகிறேன். நிதிஷ் குமார் தலைமையில் தேர்தலை சந்திக்கப் போவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். மகாராஷ்டிராவில்கூட ஏக்நாத் ஷிண்டே தலைமையில் தேர்தலை எதிர்கொண்டார்கள். பின்பு வேறு ஒருவர் முதல்வர் ஆனதைப் பார்த்தோம். தேசிய ஜனநாயகக் கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை. நிதிஷ் குமாரை பாஜகவினர் முதல்வராக்கப் போவதில்லை. இதை நாங்கள் தொடக்கத்தில் இருந்தே கூறி வருகிறோம். அமித் ஷா இதைத்தான் கூறியுள்ளார்.

தேசிய ஜனநாயகக் கூட்டணி தொடர்ந்து 20 ஆண்டுகளாக ஆட்சியில் உள்ளது. அவர்கள் எப்போதும் முதல்வர் வேட்பாளரை அறிவிப்பார்கள். இந்த முறை நிதிஷ் குமாரை முதல்வர் வேட்பாளராக ஏன் அறிவிக்கவில்லை? அவர்கள் தேர்தலுக்குப் பிறகு ஐக்கிய ஜனதா தளத்தையும் அழித்து விடுவார்கள். பிஹார் மக்கள் எங்களுக்கு 5 ஆண்டுகள் அல்ல, 20 மாதங்கள் கொடுத்தால்கூட எங்கள் அரசு 20 ஆண்டுகளில் இவர்கள் செய்யாததை நாங்கள் 20 மாதங்களில் செய்து முடிப்போம். அரசு வேலை இல்லாமல் பிஹாரில் எந்தக் குடும்பமும் இருக்காது என்ற உறுதியை நாங்கள் அளிக்க விரும்புகிறோம்” என தெரிவித்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.