புதுடெல்லி: பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் ஆர்ஜேடி, காங்கிரஸ் செய்துள்ள சதியால், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா(ஜேஎம்எம்) போட்டியிடவில்லை என அறிவித்துள்ளது.
பிஹார் சட்டப்பேரவை தேர்தலில் லாலுவின் ராஷ்டிரிய ஜனதா தளம்(ஆர்ஜேடி) கட்சியின் கீழ் எதிர்கட்சிகளின் மெகா கூட்டணி அமைந்தது. இண்டியா கூட்டணியின் பெரும்பாலான உறுப்பினர்கள் இதில் இடம்பெற்றுள்ளனர்.
இவர்களுடன் ஜார்கண்டில் ஆளும் ஜேஎம்எம் கட்சியும் இடம் பெற்றுள்ளது. ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் தலைமையிலான இக்கட்சிக்கு கூட்டணி மீது அதிருப்தி ஏற்பட்டுள்ளது.
இதற்கு பிஹாரிலுள்ள 2 பழங்குடி தொகுதிகள் கூட ஒதுக்கப்படவில்லை. இதனால், 6 தொகுதிகளில் தனித்து போட்டியிடுவதாக ஜேஎம்எம் அறிவித்தது. இதற்கும் மெகா கூட்டணியில் எந்த தாக்கமும் இல்லை என்பதால் பிஹாரின் போட்டியிலிருந்து விலகுவதாக ஜேஎம்எம் அறிவித்துள்ளது.
இது குறித்து ஜேஎம்எம் அமைச்சர் சுதிப்ய குமார் கூறுகையில், “ஜேஎம்எம் தேர்தலில் போட்டியிலிருந்து விலக ஆர்ஜேடி மற்றும் காங்கிரஸ் தான் பொறுப்பு. இந்த கட்சிகளுக்கு ஜார்க்கண்டின் அமைச்சரவையிலும் நாம் இடமளித்துள்ளோம்.
இதற்கு சரியான பதிலடியாக ஜார்க்கண்டில் ஆர்ஜேடி மற்றும் காங்கிரஸுடனான கூட்டணியை மறுபரிசீலனை செய்வோம். ஏற்கெனவே, எங்களுக்கு கடந்தமுறை மேற்குவங்க மாநில சட்டப்பேரவை தேர்தலில் தொகுதி ஒதுக்கவில்லை.
அதேபோல், இப்போது அதை பிஹாரிலும் செய்துள்ளது கண்டிக்கத்தக்கது. இதன் பின்னணியில் ஆர்ஜேடி மற்றும் காங்கிரஸின் அரசியல் சதி உள்ளது.” எனத் தெரிவித்தார்.
இதற்கு பதிலளிக்கும் வகையில் ஆர்ஜேடியின் செய்தித் தொடர்பாளரான மிருதுஞ்சய் திவாரி கூறும்போது, “இதர மாநிலங்களிலும் போட்டியிடும் ஆர்ஜேடி அங்கு தொகுதிகள் கேட்டு அடம் பிடிப்பதில்லை. கொடுப்பதை வாங்கி போட்டியிடுவதால் பிஹாரில் விரும்பும் தொகுதிகளில் போட்டியிட முடிந்தது. அனைவரும் இணைந்து பாஜக கூட்டணியை வெற்றி பெறுவது அவசியம்.” எனத் தெரிவித்தார்.
இதேபோல், மெகா கூட்டணியின் இதர உறுப்பினர்களுக்கு இடையேயும் தொகுதி உடன்பாட்டில் அதிருப்தி நிலவுகிறது. பிஹாரில் மொத்தமுள்ள 243 தொகுதிகளில் ஆர்ஜேடி 143-ல் போட்டியிட்டு கூட்டணிகளுக்கு 108 தொகுதிகளை ஒதுக்கியுள்ளது.
காங்கிரஸ் 61, விஐபி 15, சிபிஐ (எம்எல்) 20, சிபிஐ 9, சிபிஎம் 4 தொகுதிகளில் போட்டியிடுகின்றன. கடந்த 2020 தேர்தலை விடக் காங்கிரஸ் 9, சிபிஐ 3, சிபிஎம் 2 தொகுதிகள் குறைவாகக் கிடைத்துள்ளன.
கடந்த தேர்தலில் பாஜகவின் தேசிய ஜனநாயக முன்னணியுடன் (என்டிஏ) 11 தொகுதிகளில் போட்டியிட்ட விஐபி, 15 பெற்று ஆர்ஜேடி கூட்டணியில் புதிதாக இணைந்துள்ளது.
காங்கிரஸ் தவிர இதர கூட்டணிக் கட்சிகள் அனைத்தும் மெகா கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக தேஜஸ்வி யாதவை ஏற்றுக் கொண்டுள்ளன. சுமுகமாக தொகுதிகளை பங்கிட்ட கூட்டணியாக என்டிஏ உள்ளது.
இதனுடன் கடந்தமுறை விலகியிருந்த மத்திய அமைச்சர் சிராக் பாஸ்வானின் லோக் ஜன சக்தி, என்டிஏவுடன் இணைந்து போட்டியிடுகிறது. என்டிஏவில் மூன்றாவது பெரிய கட்சியாக இதற்கு 29 தொகுதிகள் ஒதுக்கப்பட்டிருப்பது நினைவுகூரத்தக்கது.