கலிபோர்னியா: அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிய இந்திய டிரைவர் ஒருவர் போதையில் லாரியை ஓட்டி, கார் மீது மோதினார். இதில் 3 பேர் உயிரிழந்தனர். பலர் காயம் அடைந்தனர்.
இந்தியாவைச் சேர்ந்தவர் ஜஷன் ப்ரீத் சிங் (21). இவர் கடந்த 2022-ம் ஆண்டு அமெரிக்காவின் தெற்கு எல்லை வழியாக சட்டவிரோதமாக ஊடுருவினார். இவரை கலிபோர்னியா எல்லையில் ரோந்து போலீஸார் கைது செய்தனர்.
அப்போதைய அதிபர் பைடன் நிர்வாகம் சட்ட விரோத குடியேறிகளை விடுவித்து, அவர்கள் மீதான வழக்குகளை நிலுவையில் வைத்தது. இதனால் ஜஷன் ப்ரீத் சிங் அமெரிக்காவில் லாரி டிரைவர் ஆனார். இவர் தெற்கு கலிபோர்னியாவில் உள்ள சான் பெர்னார்டினோ நெடுஞ்சாலையில் சரக்கு லாரியை ஓட்டிச் சென்றார். அப்போது கார் மீது ஜஷன் ப்ரீத் சிங் ஓட்டிச் சென்ற லாரி மோதியது. இதில் 3 பேர் இறந்தனர்.
போலீஸார் ஜஷன் ப்ரீத் சிங்கை கைது செய்து மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவர் போதைப் பொருள் பயன்படுத்தியது உறுதி செய்யப்பட்டது.
சட்டவிரோதமாக குடியேறியவர்: மேலும் அவர் விபத்து நடந்த போது பிரேக் போடவில்லை என்பதும் அவரது லாரியில் பொருத்தப்பட்டிருந்த கேமராவில் பதிவான வீடியோ மூலம் உறுதி செய்யப்பட்டது. ஜஷன் ப்ரீத் சிங்கிடம் சட்டப்பூர்வ குடியுரிமை இல்லாததால், அவர் மீது குடியுரிமை மற்றும் சுங்க அதிகாரிகளும் நடவடிக்கை எடுக்கவுள்ளனர்.