இசையமைப்பாளர் தேவாவின் சகோதரரும், இசையமைப்பாளருமான சபேஷ் (68) உடல்நலக்குறைவால் நேற்று (அக்டோபர் 23) உயிரிழந்தார்.
சென்னையில் உள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ள அவரின் உடலுக்கு திரையுலகினர் நேற்று முதல் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், சபேஷுடன் இணைந்து 25 படங்களுக்கு மேல் இசையமைத்த அவரின் சகோதரர் முரளி நேற்றிரவு அஞ்சலி செலுத்தினார்.

அதைத்தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த முரளி, “நானும் சபேஷும் நிறைய மியூசிக் டைரக்டர்களுக்கு கீபோர்ட் பிளேயராகத்தான் வொர்க் பண்ணிட்டு இருந்தோம்.
நான் ரிதம் பிளேயர். ஆனா சபேஷின் கீபோர்ட் பிளெயிங் பார்த்துதான் நான் கீபோர்ட் பிளேயர் ஆனேன். எங்க குடும்பத்துல ரொம்ப ஸ்ட்ரிக்ட்டானவர் சபேஷ்.
எங்க அண்ணா (தேவா) தன்னோட படத்துக்கெல்லாம் எங்களை (சபேஷ், முரளி) உதவி இசையமைப்பாளராக வளர்த்துவிட்டாரு. கானா என்றால் சபேஷ், சபேஷ் என்றால் கானா என்ற பெயர் வாங்கிக் கொடுத்தவர் அண்ணா.
`குன்றத்துல கோயில கட்டி’ சாங்ல மொதல்ல சபேஷை டிராக் பாட வச்சாங்க. அப்றம் வாய்ஸ் நல்லா இருக்கு சாங் கொடுத்து பார்ப்போம்னு அந்த பாட்டையே பாட வச்சாங்க.
அந்தப் பாட்டு பம்பர் ஹிட். அதுல இருந்து அண்ணா ஒரு படம் மியூசிக் பண்ணா, அதுல அண்ணனோ சபேஷோ ஒரு கானா பாட்டாவது பாடியே ஆகணும் இன்ற ஒரு நிலைமை உருவாச்சு.

கச்சேரில கூட அண்ணா ரெண்டு கானா பாட்டு பாடிட்டு நாலஞ்சு பாட்டு சபேஷை பாட சொல்லுவாரு. சபேஷ் மேல அண்ணனுக்கு அப்படி ஒரு உயிர்.
அப்றம் எவ்ளோ நாளைக்குதான் இப்டியே இருப்பிங்க, சபேஷ் முரளி மியூசிக் பண்ணுங்கன்னு அண்ணா சொல்லிதான் `ஆயிரம் பொய் சொல்லி’ படத்துல இசையமைப்பாளராக அறிமுகம் ஆனோம்.
ஆனா அந்தப் படம் வரல. அதுக்கப்றம் கே.எஸ். ரவிக்குமார் சார் சமுத்திரம் படத்துல எங்களை அறிமுகப்படுத்துனாரு.
அதுல இருந்து எல்லாம் நல்லா தான் போயிட்டு இருந்தது. ஆண்டவன் சபேஷை சீக்கிரம் கூப்பிட்டுகிட்டாரு.
எங்க வீட்ல மொதல்ல ஸ்கூட்டர் வாங்குனது சபேஷ். மொதல்ல கார் வாங்குனது சபேஷ். மொதல்ல வீடு கட்டுனது சபேஷ். இன்னைக்கு அதேபோல மொதல்ல சபேஷ்…” என்று பேசிக்கொண்டிருந்தபோதே அடுத்த வார்த்தை பேசமுடியாமல் கண்ணீர் விட்டார்.

சபேஷ், முரளி இருவரும் இணைந்து சமுத்திரம், தவமாய் தவமிருந்து, இம்சை அரசன் 23-ம் புலிகேசி, பொக்கிஷம் உள்ளிட்ட 25 படங்களுக்கு மேல் இசையமைத்திருக்கின்றனர்.
அதுமட்டுமல்லாமல், ஜோடி, ஆட்டோகிராஃப் உள்ளிட்ட பல படங்களுக்கு பின்னணி இசையும் அமைத்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.