சிட்னி,
ஆஸ்திரேலியாவின் கிறிஸ்துமஸ் தீவில் உள்ள தேசிய பூங்காவில் சிவப்பு நண்டுகள் அதிக அளவில் காணப்படுகின்றன. இந்த நண்டுகள், தீவில் உள்ள காட்டுப்பகுதிகளில் சிறிய அளவிலான குழிகளை ஏற்படுத்தி அதை தங்கள் வாழ்விடமாக ஆக்கிக்கொள்கின்றன. இனப்பெருக்க காலம் வரும்போது, ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர்-நவம்பர் மாதங்களில், இந்த சிவப்பு நண்டுகள் காட்டில் இருந்து வெளியேறி கடற்கரையை நோக்கி படையெடுக்கின்றன.
கடற்கரையில் ஆண் நண்டுகள் குழிகளை ஏற்படுகின்றன. அந்த குழிகளில் பெண் நண்டுகள் முட்டைகளை இட்டு, சுமார் 2 வாரம் அடைகாக்கின்றன. பின்னர் நவம்பர் மாதத்தின் மத்தியில், இந்த முட்டைகளில் இருந்து குட்டி நண்டுகள் வெளியேறி கடலுக்கு செல்கின்றன. இந்த குட்டி நண்டுகள் கடல் அலைகளில் சுமார் ஒரு மாத காலம் தாக்குப்பிடித்த பிறகு, இளம் நண்டுகளாக வளர்ந்து மீண்டும் கிறிஸ்துமஸ் தீவிற்கு திரும்புகின்றன.
இந்த நிலையில், தற்போது இனப்பெருக்க காலத்தை முன்னிட்டு லட்சக்கணக்கான சிவப்பு நண்டுகள் கிறிஸ்துமஸ் தீவில் உள்ள காட்டுப்பகுதிகளில் இருந்து கடற்கரையை நோக்கி படையெடுத்து வருகின்றன. இந்த நண்டுகள் சாலைகளை முழுவதுமாக ஆக்கிரமித்துள்ளதால், அந்த வழிகளில் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து கிறிஸ்துமஸ் தீவு தேசிய பூங்காவின் இயக்குனர் அலெக்ஸா கூறுகையில், “ஒவ்வொரு ஆண்டும் பொதுமக்கள் நண்டுகளின் இந்த பயணத்திற்காக தங்களால் முடிந்த அளவு சாலைகளை போக்குவரத்து இல்லாமல் பார்த்துக் கொள்கின்றனர். இது ஒரு அருமையான அனுபவம். சிவப்பு நண்டுகள் ஒருபோதும் எங்களுக்கு தொந்தரவாக இருந்ததில்லை” என்று தெரிவித்துள்ளார்.